செல்ஃபி – ஜி.வி.பிரகாஷின் ‘பொல்லாதவன் 2’!

ஒரு எளியவன் வறியவனை எதிர்த்து வெற்றி பெறுகிறான் என்ற டேவிட் கோலியாத் கதையையே விதவிதமாக ‘ஆக்‌ஷன்’ திரைக்கதையாக்குவதில் நம்மவர்களை மிஞ்ச முடியாது.

அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொன்று புதுமுக இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கும் ‘செல்ஃபி’.

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளரான, நெருங்கிய உறவினரான மதிமாறன், அவரது ‘பொல்லாதவன்’ கதைக்கோர்வையை, கதாபாத்திர அமைப்பை வேறொரு களத்தில் பொருத்திப் பார்த்திருக்கிறார்.

அதில் வெற்றி பெற்றிருக்கிறாரா?.

பொல்லாத இளைஞனின் கதை!

ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்துவிட்டு வணிகம் செய்ய ஆசைப்படுகிறார் மாணவர் கனலரசன் (ஜி.வி.பிரகாஷ்).

ஆனால், அவரது தந்தையோ (வாகை சந்திரசேகர்) ஏஜெண்ட் மூலமாக சென்னையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்கிறார்.

கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் கல்லூரியில் சேரும் கனல் ஒரு தேர்வில் கூட ‘பாஸ்’ ஆவதில்லை. பொய்கள் பல சொல்லி தந்தையிடம் இருந்து பணத்தை ‘அபேஸ்’ செய்பவர், ஒருகட்டத்தில் நாமே சம்பாதித்தால் என்ன என்று யோசிக்கிறார்.

இதையடுத்து, சென்னையின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமொன்றில் சேரக் காத்திருக்கும் பெற்றோரை தம்வசப்படுத்தி, ‘கமிஷன்’ பெற்று அவர்களது பிள்ளைகளுக்கு ‘அட்மிஷன்’ பெற்றுத் தருகின்றனர் கனலும் அவரது நண்பர்களும்.

இதனால் பண மழையில் நனைந்து ‘தாம்தூம்’ என்று செலவழிக்கத் தொடங்குகின்றனர்.

சீராகச் செல்லும் அவர்களது வாழ்க்கை, மருத்துவ படிப்பில் ஒரு மாணவனைச் சேர்க்கும்போது தடம்புரள்கிறது.

அட்மிஷனை ‘கேன்சல்’ செய்யச் சொல்லி மாணவனின் தந்தை வலியுறுத்த, அவரிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தர முடியாமல் தவிக்கிறது கனல் தரப்பு.

இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல, குறிப்பிட்ட கல்லூரியில் மாணவர்களை சேர்க்க ‘கமிஷன்’ வாங்குவதையே தொழிலாக வைத்திருக்கும் ரவிவர்மாவுக்கு (கவுதம் மேனன்) விஷயம் தெரிகிறது.

இதனால் அக்கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் குடும்பத்திற்கும் அவருக்குமான விரிசல் அதிகமாகிறது.

தனக்கெதிராக முளைத்திருக்கும் கனலையும் அவரது நண்பர்களையும் ரவிவர்மா என்ன செய்தார்?

தொடர்ச்சியாகப் பிரச்சனைகள் விஸ்வரூபமெடுக்க கனல் தரப்பு அவற்றை எதிர்கொண்டதா?

‘கமிஷன்’ பெற்றுக்கொண்டு கல்லூரி இடங்களை வழங்கும் நிர்வாகத்தின் முறைகேடு வெளியில் தெரிய வந்ததா என்பது உட்படப் பல கேள்விகளுக்கு பதில்களை வாரியிறைக்கிறது ‘செல்ஃபி’.

சுருக்கமாகச் சொன்னால், வெற்றிமாறனின் முதல் படமான ‘பொல்லாதவன்’ வெர்ஸன் 2.0தான் ‘செல்ஃபி’.

அதில் பைக் திருட்டும் போதைப்பொருள் கடத்தலும் கதையின் மையம் என்றால், கல்வி நிறுவனங்களில் ‘கமிஷன்’ வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு ‘சீட்’ வாங்கித் தரும் கும்பல்களையும், அதன் மூலமாக கல்லா கட்டும் கல்வி நிறுவனங்களையும் பற்றி பேசுகிறது இத்திரைப்படம்.

மிக முக்கியமாக, ’பொல்லாதவன்’ தனுஷின் பாத்திர அமைப்பையும் குடும்பச் சூழலையும் அப்படியே ‘செல்ஃபி’யில் வரும் ஜி.வி.பி.யோடு பொருத்திப் பார்க்க முடியும்.

நுட்பங்கள் பொதிந்த திரைக்கதை!

அரசு ஒதுக்கிய சீட்களை தாண்டி, நிர்வாகத்தின் மூலமாக நிரப்பப்படும் இடங்களைக் கையில் வைத்துக்கொண்டு ‘கொள்ளை’யில் ஈடுபடும் கும்பல்கள் பற்றிய விரிவான சித்திரத்தை இதில் தந்திருக்கிறார் இயக்குனர் மதிமாறன். அது முழுமையானதல்ல என்று நமக்கும் தெரியும்.

வெறுமனே பணத்தைக் குவித்து வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல், கல்லூரிக் கல்வி குறித்த அறிதல் இல்லாத பாமர மக்கள்தான் இக்கும்பல்களின் இலக்கு.

கையில் காசில்லாதவர்களையும் கடன் வாங்க வைத்துவிடுமளவுக்கு பேச்சுத்திறமை கொண்டவர்கள் இதில் ‘கமிஷன்’ பெறும் தரகர்கள்.

ரவி வர்மாவின் அலுவலகம், அங்கிருக்கும் ஆட்கள், சீட் கேட்டு வரும் பெற்றோர்கள், கல்விக்கொள்ளை குறித்து குற்றவுணர்ச்சி ஏதுமில்லாமல் பணத்தை பற்றி மட்டுமே கவலைப்படும் ரவிவர்மாவின் மனைவி (வித்யா பிரதீப்),

கல்லூரி நிர்வாகத்தை நடத்தும் தலைவரின் (சங்கிலி முருகன்) மகள், மருமகன், கல்லூரிக் காலத்திலேயே பணத்தை கத்தை கத்தையாகச் சம்பாதிக்க வேண்டுமென்ற வேட்கையுடன் திரியும் கனலின் நண்பன் நசீர் (குணநிதி) மற்றும் குழு என்று ‘செல்ஃபி’ முழுக்க நிறைய கதாபாத்திரங்கள்.

அனைத்துமே கல்விக் கொள்ளையின் ஊற்றுக்கண் எது என்ற தேடலை துரிதப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

முடிந்தவரை அனைவரையும் மனதில் நிலை நிறுத்தியிருப்பது திரைக்கதையின் சாதனை. ஆட்டோகாரராக வாழ்வைத் தொடங்கி ரவிவர்மாவின் ஆளாக மாறுபவர் தன்னை குறித்து சொல்லும் காட்சி அதற்கான ஒரு சோறு பதம்.

அடுத்தடுத்து சம்பவங்களை அடுக்கிக்கொண்டே இருப்பதால் கதை நகர்வில் எந்த பிரச்சனையுமில்லை.

ஆனால், ரவிவர்மாவோடு கனல் சேர்ந்தபிறகு சில திருப்பங்கள் இருக்கிறதென்றாலும் பெரிதாக ஆக்‌ஷன் ‘காட்சிகள்’ இல்லை.

போலவே, கிளைமேக்ஸும் சட்டென்று வந்து நம்மை இருக்கையில் இருந்து எழுப்பி விடுகிறது.

இடையிடையே வசனங்களில் புகுந்திருக்கும் மவுனங்களும், கிளைமேக்ஸில் வரும் டைட்டில் கார்டில் கூட குறிப்பிட்ட வார்த்தைகளை அழித்திருப்பதும், சில காட்சிகள் கண்டிப்பாக ‘தணிக்கை’யின்போது கத்தரிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. அதுவே, படத்தின் நீளத்தையும் குறைத்திருக்கிறது.

தமிழ்நாட்டின் வடமாவட்டப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து கல்வி பயில்பவர்களாக நாயகன் நாயகியைக் காட்டிய இயக்குனர், அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்குவதையும் சர்வசாதாரணமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி குறித்த ‘கேரக்டர் டிசைன்’ நுட்பமாக அமைந்திருப்பது கண்டிப்பாக இளம்பெண்களைக் கவரும்.

போலவே, தென்மாவட்டத்தில் இருந்து வந்திறங்கும் ஒரு மாணவனின் தந்தை சாதிவெறி கொண்டவர் என்பதை சட்டென்று சொல்லிக் கடந்திருப்பது நுட்பமான இடம்.

மொத்த கதையும் உண்மையா என்பதை அறிய, தினசரிகளைத் தவறாமல் வாசிக்கும் பழக்கம் கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும்.

அப்படியிருந்தால், மதிமாறனின் திறமையை மேலும் கொண்டாட வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பிட்ட சில பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இது போன்ற முறைகேடுவதால் நிகழ்வதால் பொத்தம்பொது பிரச்சனையாகவும் இதனை அணுக முடியும்.

அந்த வகையில் வசந்தபாலனின் ‘அங்காடித்தெரு’ சில தீர்வுகளுக்கு காரணமானதைப் போல ‘செல்ஃபி’யும் அமைந்தால் நன்றாகயிருக்கும்.

நல்ல வெற்றி!

’பேச்சுலர்’, ‘ஜெயில்’ என்று தொடர்ந்து மெருகேறிவரும் ஜி.வி.பிரகாஷின் நடிப்புலக வாழ்க்கையில் ‘செல்ஃபி’க்கும் பங்குண்டு. ‘பிகில்’ வர்ஷா பொல்லம்மாவுக்கு இதில் அற்புதமான பாத்திரம். வீங்கிய முகத்துடன் திரையில் தோன்றுவதை அவர் தவிர்த்திருக்கலாம்.

ரவி வர்மாவாக வரும் கவுதம் மேனன் வசனம் பேசும் காட்சிகளுக்கு கைத்தட்டல்கள் கிடைக்கும்போது ரகுவரன், பிரகாஷ்ராஜ் நினைவுகள் மேலெழுகின்றன.

ஆனாலும், அவரது எழுத்தில் வெளியான வில்லன்களையே நடிப்பிலும் பிரதிபலிக்கிறார் என்பதை மறுக்க முடியவில்லை.

கிளைமேக்ஸுக்கு முன்னதாக வாகை சந்திரசேகருடன் ஜி.வி.பி போனில் பேசும் காட்சி 7ஜி ரெயின்போ காலனி, பொல்லாதவன் உட்பட பல திரைப்படங்களில் முரண்பட்ட தந்தையும் மகனும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் காட்சியை கண் முன்னே நிறுத்துகிறது.

திரையில் வாகை சந்திரசேகர் ‘அசால்ட்டாக’ வந்துபோவது, எவ்வளவு பெரிய நடிகரை மிக அரிதாக தமிழ் இயக்குனர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை உணர்த்தியிருக்கிறது.

தங்கதுரையும் அவரது நண்பர்களும் அடிக்கும் காமெடி ‘பன்ச்’கள் தனியாக இல்லாமல் மையக்கதை சார்ந்த காட்சிகளோடு இணைந்திருக்கின்றன.

இவர்கள் தவிர கல்லூரி நிறுவனராக வரும் சங்கிலி முருகன், அவரது மருமகனாக வரும் சாம் பால், நசீராக வரும் குணநிதி, அவரது தாயாக வருபவர், கல்லூரி தாளாளராக வரும் சுப்பிரமணிய சிவா உட்பட பலரும் நம்மை ஈர்க்கின்றனர்.

விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும் எஸ்.இளையராஜாவின் படத்தொகுப்பும் நம்பிக்கையூட்டும் புதிய குழுவின் வரவை காட்டுகிறது.

‘இமைக்காரியே’ பாடல் மட்டுமே வேகமான மெலடி மெட்டு. மற்ற பாடல்கள் எல்லாம் நரம்புகளை முறுக்கேற்று அதிர்வேட்டு. அது போதாதென்று பரபரப்பூட்டும் திரைக்கதை மட்டுமே நினைவில் தங்கும் வண்ணம் இயைந்தோடுகிறது ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை.

கமர்ஷியல் படமென்றாலும் சில டீட்டெய்ல்கள் திரைக்கதையில் நிரம்பியிருப்பது படம் பார்ப்பவர்களிடம் அலுப்பை ஏற்படுத்தாது.

அவ்வகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘பண்டிகை’ போன்று ‘செல்ஃபி’யும் மிகமுக்கியமான படைப்பு.

கூடவே, கல்விக்கொள்ளைக்கு துணை நிற்க வேண்டாமென்ற சேதியும் இதிலிருக்கிறது. திணிக்கப்பட்ட கிளைமேக்ஸ் மட்டுமே இதிலுள்ள திருஷ்டி பரிகாரம்.

அதனைத் தவிர்த்துப் பார்த்தால், ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த நல்வெற்றிகளுள் இதுவும் சேரும்..!

– பா. உதய்

You might also like