நாம் நின்று கொண்டிருக்கிற இடத்தின் கீழே மண்ணைத் தோண்டிக் கொண்டே போனால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் இருக்கிறது விலைவாசி ஏற்றம் தொடர்ந்து உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் போதும்.
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே போகிறது. டீசல் விலையே லிட்டருக்கு நூறைத் தாண்டிவிட்டது. எரிவாயு சிலிண்டர்களின் விலையேற்றம் பெண்களைத் திகைக்க வைத்திருக்கிறது.
இது மட்டுமில்லாமல், இந்தச் சமயம் பார்த்து சுங்கக் கட்டணத்தை வேறு தாறு மாறாக ஏற்றியிருக்கிறார்கள்.
இதனால் பல பொருட்களின் விலை கடுமையாக ஏறும். பயணக் கட்டணம், சரக்குக் கட்டணம் எல்லாமே அதிகரித்துச் சாமானியர்கள் தலையில் இறங்கப் போகிறது.
எதிர்க்கட்சிகள் தங்கள் பங்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தி ஓய்ந்து விட்டன.
ஒன்றிய நிதியமைச்சரோ விலைவாசி உயர்வு தொடர்ந்து கொண்டுதானிருக்கும் என்கிறார்.
கொரோனாக் காலத்திற்குப் பிறகு வாழ்க்கையை நடத்தத் திணறிக்கொண்டிருக்கும் சாதாராண மக்கள் இந்த விலையேற்றச் சுமையை எப்படித் தாங்குவார்கள்?
பல தொழில் நிறுவனங்களில் இருக்கிற வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலையில், சிறு, குறு தொழில்கள் நசிந்து கொண்டிருக்கும் நிலையில், கொஞ்ச நஞ்சமிருக்கிற பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்திருக்கிறது ஒன்றிய அரசு.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் தனியார் வங்கிகள் கூடத் தேசிய மயமாக்கப்பட்டன.
பேருந்துகள் அறிஞர் அண்ணா காலத்தில் நாட்டுடமை ஆக்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்தன. தனியார் மயமாவது கட்டுக்குள் நின்றது.
இப்போது நிலைமை தலைகீழ். பி.எஸ்.என்.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டும் என்றே பலவீனமாக்கப்பட்டு, தொலைத்தொடர்பு தனியார் நிறுவனங்களின் கொடி பறக்கிறது. விமான நிலையங்கள், ரயில்வே என்று கார்ப்பரேட் மயமாவதற்கான பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
சாமானிய மக்களின் சேமிப்பை அதிகம் கொண்ட எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கினால், அதன் பலன் யாருக்குப் போய்ச் சேரும்? இதில் பணியாற்றுக்கிற தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தும் எந்தப் பலனும் இல்லை..
ஒரு காலத்தில் சுதேசியம் பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். சீனாவின் பிடியில் சிக்கி இன்றைக்கு இலங்கையில் உள்ள மக்கள் பொருட்களை வாங்குகிற பாடு, நாளை எந்த நாட்டிலும் நடக்கலாம்.
பற்றாக்குறை எந்த நாட்டையும் திண்டாட வைக்கலாம்.
ஒன்றிய அரசோ, மாநில அரசுகளோ பன்னாட்டுப் பின்புலம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னால் பணிந்து போகின்றன.
இன்னொரு விதத்தில் சொன்னால் – கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் அரசின் எதிர்காலத் திட்டங்களையே தீர்மானிக்கிறன.
தேசிய முதலாளிகள் இந்தச் சூழலின் அழுத்தம் தாளாமல் திணறிப் போய்க் கொண்டிருக்கையில், சாதாரணக் குடிமகன் தன்னைச் சுற்றி விறுவிறுவென்று ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசிக்கு முன்னால் என்ன செய்ய முடியும்?
எல்லாப் பொருட்களின் விலையும் ஏறிக் கொண்டிருக்கின்றன. சராசரி மக்களின் வாழ்வின் மதிப்போ கீழிறங்கிக் கொண்டிருக்கிறது.
-யூகி
01.04.2022 10 : 50 A.M