தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் விமர்சனம் – 2
1990 மே 18ஆம் தேதியன்று முதல்வர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா ராஜினாமா செய்துவிட்டு லண்டன் சென்றார்.
மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஆளுநர் ஜக்மோகன் மே 20ஆம் தேதி காஷ்மீர் சென்றடைந்தார்.
இடைப்பட்ட ஒருநாளில் காஷ்மீரின் பல பகுதிகளில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களது உடைமைகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.
வன்முறைக்கு இரையாக்கப்பட்டனர். இது குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்புகிறது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.
ஒருபடி மேலாகச் சென்று காஷ்மீர் முதல்வர் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த வன்முறையாளர் ஒருவரைச் சந்தித்துப் பேசுவதாக காட்சியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷெய்க் அப்துல்லா குறித்த வசனமொன்றில், ‘டெல்லியில் அவர் தேசியவாதி, ஜம்முவின் கம்யூனிசவாதி, காஷ்மீரில் அவர் வகுப்புவாதி’ என்று குறிப்பிடப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், நேரு குடும்பமும் அப்துல்லா குடும்பமும் கொண்டிருந்த நட்பே காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி கண்டும் காணாமலும் இருந்ததற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.
இன்னொரு மாநிலக் கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முப்தி முகமதுவின் மகள் ருபாயா சயீத் கடத்தப்பட்ட சம்பவமும் கூட செய்தியாக திரைக்கதையில் இடம்பெற்றிருக்கிறது.
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மிதவாதம் கொண்டிருந்த பிரதமராக வாஜ்பாயை குறிப்பிடுகிறது;
தற்போதைய பிரதமர் பயத்தை முன்னிறுத்தி இந்தியாவிலிருக்கும் தலித்துகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை ஒடுக்குவதாக கூறுகிறது பிரிவினைவாத இயக்கம் சார்ந்த ஒரு பாத்திரம்.
இந்த இடத்தில் பெயரைக் குறிப்பிடாமல் தவிர்த்த காரணம் இயக்குனருக்கே வெளிச்சம்.
ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படும் ஒற்றர்களாகவே மாநிலக் கட்சிகளால் பார்க்கப்படுவர் என்ற விஷயமும் ஓரிடத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.
காஷ்மீர் மாநில நிர்வாகம், கட்சிகள், அதிகாரிகள் குறித்த பார்வை முன்வைக்கப்பட்ட அளவுக்கு, அங்கு ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் திரைக்கதையில் விமர்சிக்கப்படவில்லை.
போலவே, பாஜக இடம்பெற்ற வி.பி.சிங்கின் தேசிய முன்னணி ஆட்சி குறித்த ஒரு வார்த்தை கூட இப்படத்தில் இடம்பெறவில்லை.
வழக்கமாக காஷ்மீர் அல்லது இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசும் திரைப்படங்களில் ‘எல்லா இஸ்லாமியர்களும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல’ என்ற வாதம் முன்வைக்கப்படும்.
பல இடங்களில், படம் பேசும் அரசியலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க அது ஒரு வழியாகவும் பயன்படுத்தப்படும்.
‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தின் தொடக்கத்தில் ஷிவ் என்ற சிறுவனை அப்துல் என்ற சிறுவன் காப்பாற்றுவதைத் தவிர, வேறெந்த இஸ்லாமிய கதாபாத்திரமும் சக மனிதர்களுக்கு உதவி செய்வதாகக் காட்டப்படவே இல்லை.
‘ரலீவ் கலீவ் சலீவ்’ (மதம் மாறு ஓடிப்போ செத்து மடி) எனும் முழக்கம் படம் முழுக்க கேட்கிறது. ’இந்து ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை மட்டும் பாகிஸ்தானுக்கு கூட்டிச் செல்வோம்’ என்று ஓரிடத்தில் வசனம் வருகிறது.
கணவனை இழந்து குழந்தைகளுடன் இருக்கும் கைம்பெண்ணிடம் காதல் மொழி பேசுகிறார் ஒரு மவுல்வி. ’நீ மட்டும் எனது ஆசிரியராக இல்லாவிட்டால்,
இவள் உனது மருமகளாக இல்லாவிட்டால் இந்நேரம் எனது மனைவியாகியிருப்பாள்’ என்று புஷ்கர் நாத்திடம் சொல்கிறார் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த மிட்டா.
வீட்டை என்னிடம் ஒப்படையுங்கள் என்று சொல்வதை நாயகனின் தந்தை கேட்காத காரணத்தால், அவர் அரிசி குதிருக்குள் ஒளிந்திருப்பதை பிரிவினைவாதிகளிடம் காட்டிக் கொடுக்கிறார் பக்கத்துவீட்டுக்காரர்.
’ஊருக்கு என்ன வசதி வேண்டும்’ என்று மவுல்வி கேட்கையில், ‘மசூதி’ என்ற கூக்குரலுக்கு நடுவே எதுவும் சொல்லாமலிருக்கும் ஷிவ்வின் தலையில் தட்டுகிறான் அருகிலிருக்கும் மாணவன்.
ரத்த தானம் செய்யும் ஒரு இந்து இளைஞனை ‘சாகட்டும்’ என்று விட்டுவிடுகிறார் ஒரு பயங்கரவாதி. இப்படி படம் நெடுக பண்டிட்களை வஞ்சிக்கும் அத்தனை பாத்திரங்களும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்ததாக காட்டப்பட்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக 700க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பண்டிட் சமூகத்தினரிடம் கேட்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இத்திரைப்படத்தை உருவாக்கியதாகச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான பல்லவி ஜோஷி.
எந்திர ரம்பத்தால் ஒரு பெண்ணின் நிர்வாண உடல் பிளக்கப்படும் காட்சி அதிலொன்று. விமானப்படை அதிகாரிகள், நீதிபதி, போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட தகவல்களும் உண்மைப் பெயர்களுடன் இடம்பெற்றிருக்கின்றன.
எல்லாம் சரி, ஒரு மதத்தினரையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்விதமாக வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களுக்கு நேர்ந்த கொடூரம் எல்லாம் ஒட்டுமொத்தமாக வரிசைப்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் பதில் இல்லை.
அதற்கு ஈடாக, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ 200 கோடி வசூலைக் கடந்து தொடர்ந்து வெற்றி நடை போடுவது குறித்த தகவல்களே காணக் கிடைக்கின்றன.
பாஜக ஆட்சியிலுள்ள சில மாநிலங்களில் வரி விலக்கு பெற்றிருக்கிறது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.
இந்த வருமானத்தைக் கொண்டு பண்டிட்களின் புனரமைப்பை மேற்கொள்ள படக்குழு உதவ வேண்டுமென்று இன்னொரு அரசியல் திரியைப் பற்ற வைத்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இவை அனைத்தும், காஷ்மீரில் பண்டிட்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களும் காரணம் என்பதனை மேலும் அடிக்கோடிடவே உதவுகின்றன.
பாஜகவின் மத்திய ஆட்சியின் கீழ் 2016 முதல் காஷ்மீரில் மீண்டும் பண்டிட்களை குடியேற்றம் செய்யும் நடவடிக்கை பெரியளவில் முன்னேற்றம் காணாத நிலையில், இப்போதும் அம்மாநிலத்தில் பெரும்பான்மை இஸ்லாமியர்களோடு பிற மதத்தவர்கள் வாழும் சூழலில்,
‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தின் வெற்றி தற்போதிருக்கும் சுமூகமான வாழ்க்கையில் எத்தகைய பின்விளைவுகளை உருவாக்கும் என்ற கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை.
கேள்விக்குள்ளாக்கப்படும் சுதந்திரம்?
‘சுதந்திரம்’ என்ற வார்த்தை தவறானதாக இப்படத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. அது இயக்குனருக்கான சுதந்திரம். தவறில்லை. இது எதிர்தரப்பின் நியாயங்களை முன்வைக்க எண்ணும் இன்னொரு இயக்குனருக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி!
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வை விட, அதைப் பற்றி பேசுவதுதான் சிறந்த அரசியல் என்கிறார் ஒரு பெண் பேராசிரியர். பிரிவினைவாத இயக்கத் தலைவருடன் அவர் நடனமாடும் புகைப்படம் வேறொரு காட்சியில் இடம்பெறுகிறது.
இவ்விரண்டும் சேர்ந்து நோக்கப்படும்போது, அறிவுசார் தளத்தில் இயங்கும் இடதுசாரி சிந்தனையாளர்களின் செயல்பாட்டையும் வாழ்வையும் கொச்சைப்படுத்துவதை உணர முடியும்.
இன்னொரு காட்சியில் பத்திரிகையாளர்களை தீவிரவாதிகளுடன் கள்ள உறவு வைத்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி பாத்திரம்.
பண்டிட்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதி என்ன என்றவுடன், பிரிவினைவாத இயக்கத் தலைவரை பார்த்த நொடியே சுட்டிருக்க வேண்டுமென்ற கற்பனை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் நெஞ்சில் நிழலாடுகிறது.
கோர்வையாக திரைக்கதையில் இடம்பெற்றிருக்கும் உஇக்காட்சிகளைப் பார்க்கும் ஒரு சாதாரண நபர், காஷ்மீரில் ஏன் பயங்கரவாதம் வேரூன்றியது என்பதற்கான பதிலை எதிர்பார்க்கவே மாட்டார்.
அதற்கு காரணம் பாகிஸ்தான் என்ற பதில் ஏற்கனவே இங்கு விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதைத் தீவிரமாகச் செயல்படுத்தியது காஷ்மீர் முஸ்லிம்கள் என்ற பார்வை கண்டிப்பாக அவருக்குப் புதிய உணர்வையே உண்டாகும்.
இதற்கெல்லாம் மேலாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 370ஐ நீக்கும்படி புஷ்கர்நாத் பாத்திரம் தொண்ணூறுகளிலேயே முழங்குவதாகக் காட்டுவது ’அக்மார்க்’ செயற்கைத்தனம்.
எழுத்தில் வடிக்கப்பட்ட காட்சிகளுக்கு எவ்வளவு வீர்யமாகத் திரையில் உயிர் கொடுப்பது என்ற வகையில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி.
குறைந்த பட்ஜெட்டில் பன்மடங்கு வசூலை ஈட்ட வைத்திருக்கிறார். ஆனால், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ ஒரு கண்ணி வெடி போல தவறான முன்னுதாரணத்தை திரையுலகிற்குத் தந்திருக்கிறது.
ஒரு அசம்பாவிதத்தின் பின்னணியில் இருக்கும் அனைத்து கோணங்களிலும் பார்வையைச் சுழலவிடாமல் ஒரு திசையில் மட்டுமே காண வைக்கும் போக்கை, படைப்புகளை உருவாக்கச் செய்திருக்கிறது.
அப்படியெல்லாம் கிடையாது என்பவர்கள், இப்படத்தின் இறுதிக்காட்சியை மட்டும் பார்த்தால் போதுமானது.
அதில், நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டு பண்டிட் சமூகத்தினரைக் கொலை செய்கிறது மிட்டா எனும் பாத்திரம். விஎஃப்எக்ஸ் உதவியுடன் அது விலாவாரியாக சில நிமிடங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
அழகியலும் நீதி நெறியும் சார்ந்தியங்கும் திரைப்பட உருவாக்கத்தில் கண்டிப்பாக இதற்கு இடமில்லை. ஒரே ஒரு ஷாட் மட்டும் போதும். அதுவும் தேவையில்லை என்றால் இதர பாத்திரங்களின் முகபாவனைகளே கூட போதும்.
அதற்கு மாறான காட்சியமைப்பை முன்வைக்கும் விவேக் அக்னிஹோத்ரியின் இப்படைப்பு திட்டமிட்ட வெறுப்பு அரசியலை முன்வைக்கிறது என்பதற்கு வேறு உதாரணம் கிடையாது.
இந்துத்துவ அமைப்புகளும் ஆதரவாளர்களும் இதனைக் கொண்டாடுவதற்கும் கூட அதுவே காரணம்.
இல்லை என்பவர்கள், இக்காட்சியில் இறக்கும் நபர்களாக இஸ்லாமியர்களையும் துப்பாக்கியைத் தாங்கியிருக்கும் இடத்தில் இந்துத்துவ ஆதரவாளர்களையும் கற்பனை செய்து பாருங்கள்.
தணிக்கைக் குழுவின் ஒப்புதலை மீறி அப்படியொரு படைப்பு வெளியாகிவிட்டால் நிச்சயம் அது அதிசயம்.
பண்டிட்களின் சார்பான உண்மைகளைச் சொல்ல கருத்து சுதந்திரம் வாய்த்தது போல், எதிரேயிருக்கும் இஸ்லாமிய மக்கள் சார்பான மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆனால், அப்படியொரு வாய்ப்பு வாய்க்குமா? இதற்கான பதிலே ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் எந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கான பதிலாகவும் அமையும்!
-உதய் பாடகலிங்கம்
30.03.2022 2 : 30 P.M