ஒரு திரைப்படம் உருவாக்கும் மாற்றம் என்பது எவ்விதக் கணிப்புக்குள்ளும் அடங்காது.
ஒரு கதைக்கருவுக்குள் அடங்கியிருக்கும் பெருந்தீ ஏதேதோ காரணங்களால் திசைமாறிச் சாம்பலாகலாம்; சிறு பொறியொன்று மெல்ல மெல்லச் சூடேறி எரிமலையாய் அனலைக் கக்கலாம்.
இரண்டுக்கும் நிறைய உதாரணங்களைக் கொண்டிருக்கிறது உலக திரைப்பட வரலாறு. இரண்டாவதை கைக்கொண்டு கொளுந்துவிட்டு எரியக் காத்திருக்கும் காட்டுத்தீயாய் அமைந்திருக்கிறது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.
1990 மார்ச் முதல் மே வரை காஷ்மீரின் பல பகுதிகளில் இருந்த பண்டிட் சமூகத்தினர் குடும்பத்துடன் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
அப்படி இடம்பெயராதவர்கள் மீது காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலைப் பேசுகிறது விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இத்திரைப்படம்.
பண்டிட்களும் இஸ்லாமியர்களும்!
டெல்லியிலுள்ள ஏஎன்யுவில் (எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதா?) படித்துவரும் கிருஷ்ணா (தர்ஷன் குமார்), மாணவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ’காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்க வேண்டும்’ என்பதும் இடம்பெறுகிறது.
பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணாவிடம் காஷ்மீரில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் அரசாலும் ஊடகங்களாலும் மறைக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார் பேராசிரியர் ராதிகா மேனன் (பல்லவி ஜோஷி).
இந்த சூழலில், கிருஷ்ணாவின் தாத்தா புஷ்கர்நாத் பண்டிட் (அனுபம் கெர்) மரணமடைகிறார்.
காஷ்மீரிலுள்ள சொந்த வீட்டில் தனது அஸ்தி விசிறப்பட வேண்டுமென்ற தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்ற முனைகிறார் கிருஷ்ணா.
தாத்தாவுக்கு ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்த ஒரு மருத்துவர், பத்திரிகையாளர், போலீஸ் உயரதிகாரி மற்றும் ஆளுநரின் உதவியாளராக பணியாற்றிய ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆகியோரை இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார்.
அந்த நால்வரையும் சந்தித்தபிறகே, தனது பெற்றோரும் சகோதரரும் விபத்தில் இறக்கவில்லை என்ற உண்மை கிருஷ்ணாவுக்கு தெரிய வருகிறது. காஷ்மீரை விட்டு பண்டிட்கள் வெளியேற்றப்பட்டபோது தன் குடும்பத்தினருக்கு என்ன நேர்ந்தது?
அந்த உண்மையை தாத்தா மறைத்தது ஏன்? அப்பயணத்திற்குப் பின் காஷ்மீர் குறித்த கிருஷ்ணாவின் புரிதல் மாறியதா என்பதை திடுக்கிடும் திருப்பங்களுடன் சொல்கிறது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைக்கதை.
நடிப்புக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, ஒலிக்கலவை, தயாரிப்பு வடிவமைப்பு என்று தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பும் இப்படைப்பில் இயக்குனருக்கு அற்புதமாக வாய்த்துள்ளது.
உலகின் பார்வையில் காஷ்மீர்!
காஷ்மீர் மக்கள் தனித்த நாட்டை விரும்புகிறார்களா, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா என்ற விவாதம் 1945களில் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசின் அடக்குமுறைகளை எதிர்ப்பதாகக் கூறியே இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்புகள் பலத்தை பெருக்கின.
இவற்றின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இருப்பதாகக் குற்றம் சாட்டியது இந்திய அரசு. இதனால், எண்பதுகளுக்குப் பின்னர் காஷ்மீரின் ஒட்டுமொத்த செயல்பாடும் பூடகமாகப் பார்க்கப்பட்டது.
தொண்ணூறுகளில் சுமார் ஒன்றரை லட்சம் பண்டிட் சமூகத்தவர் நிலபுலன்களை விட்டுவிட்டு வெளியேறியதும், அக்காலகட்டத்தில் நிகழ்ந்த வன்முறையும் காஷ்மீர் மீதான ஒட்டுமொத்த இந்தியாவின் அபிப்ராயத்தையும் புரட்டிப் போட்டது.
பண்டிட்களையும் இஸ்லாமியர்களையும் முறையே சிறுபான்மையினராகவும் பெரும்பான்மையானவராகவும் காட்டிய இந்நிகழ்வே, இன்றைக்கும் அம்மண்ணில் மத்திய அரசால் கொண்டுவரப்படும் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமாக விளங்குகிறது.
ஒரே கதை வேறு பார்வை!
2020இல் வெளியான விது வினோத் சோப்ராவின் ‘ஷிகாரா’ திரைப்படமும் பண்டிட்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியதன் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டது. அதன் மையக்கருவாக காதல் இருந்தது.
அதனூடாக அரசியல் புதைக்கப்பட்டிருந்ததாக விமர்சிக்கப்பட்டது. காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினரின் மீதான வெறுப்பு தணியாததற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியது.
மாறாக, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ தொடக்கம் முதல் இறுதி வரை காஷ்மீர் குறித்த பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளை அழுத்தமாக முன்வைக்கிறது.
மிக முக்கியமாக, பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளைவிட காஷ்மீரில் வாழும் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களும் பண்டிட் சமூகத்தினரை விரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக காட்டுகிறது.
அதைத் தவிர வேறெந்த உணர்வும் மேலெழாத வகையில் கனகச்சிதமாக இதன் திரைக்கதை வடிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாடும்போது சச்சின் பெயரை உச்சரித்த காரணத்திற்காக சிறுவன் ஷிவ்வை சில இஸ்லாமியர்கள் தாக்குவதாக அமைந்திருக்கிறது முதல் காட்சி.
பெண்கள், குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோரை இந்திய ராணுவ உடையணிந்த பிரிவினைவாத இயக்கத்தினர் சுட்டுக்கொல்வதோடு நிறைவடைகிறது இத்திரைப்படம்.
இவ்விரண்டுக்கும் நடுவே, கிருஷ்ணா கல்வி பயிலும் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டுமே வன்முறை காட்டப்படவில்லை.
அதற்குப் பதிலாக, அங்கு பயிலும் பேராசிரியர் ஒருவர் காஷ்மீரில் சுதந்திரத்திற்காகப் போராடும் பிரிவினைவாத அமைப்புகளின் நோக்கம் சரியானது என்று போதிப்பதைப் பிரதானப்படுத்துகிறார் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி.
ஜேஎன்யு எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் அதிகமாகி வருவதாகக் குற்றம்சாட்டப்படும் காலகட்டத்தில், இப்பார்வையை முன்வைக்கிறார் இயக்குனர் விவேக்.
என்னதான் திரைமொழியுடன் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், இந்துத்துவ அமைப்புகளுக்கான பிரச்சாரக் காட்சி சித்திரமாக ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ மாறும் இடம் இதுதான்.
இஸ்லாமிய சமூகம் மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பும் பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், இடது சாரி கட்சியாளர்கள் அனைவரது அரசியல் சார்பையும் போலியானதாக குறிப்பிடுகிறது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.
வெறுமனே இயக்குனரின் பார்வையாக மட்டுமல்லாமல், தற்போதைய இளைய சமூகத்தின் எண்ணமும் அதுதான் என்று சொல்கிறது.
அதற்கேற்ப, எவ்வித அரசியல் புரிதலும் இல்லாத கிருஷ்ணா எனும் நாயக பாத்திரம் இன்றிருக்கும் வீடியோ கேம்ஸ் தலைமுறையைப் பிரதிபலிக்கும் வகையில் இக்கதையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
எவ்வித சித்தாந்தங்களையும் வடிவமைக்கும் திறமையுள்ள கரங்களுக்குள் சிக்கத் தயாராக இருக்கும் ஒரு பாமரன் தான் இக்கதையின் நாயகன் கிருஷ்ணா.
அதனாலேயே, அப்பாத்திரத்தின் புரிதல்களை ஒட்டுமொத்த பார்வையாளர்களின் உணர்தலாகவும் இப்படைப்பு முன்வைக்கிறது.
-உதய் பாடகலிங்கம்
29.03.2022 10 : 50 A.M