நாடாளுமன்றம் கூடியதும், இரு அவைகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ‘நோட்டீஸ்’ அளித்திருந்தனர்.
இதுதவிர, நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுவதால், அது குறித்தும் விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கேட்டிருந்தனர்.
மாநிலங்களவைக் கூடியதும், அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசும்போது, “பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பொது வேலைநிறுத்தம் குறித்து பேச அனுமதி இல்லை. அதேசமயம், இவை குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பின்னர் பேசலாம்” என்றார்.
இதை ஏற்காமல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் இறங்கவே, அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல், மக்களவைக் கூடியதும், இதே பிரச்னைகளை மையமாக வைத்து, காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
ஆனாலும், கேள்வி நேரத்தைத் தொடர்ந்து நடத்திய சபாநாயகர் ஓம்பிர்லா, “கேள்வி நேரத்திற்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடமை. அதை மீறுவது ஏற்கத்தக்கது அல்ல” எனக் கண்டித்தார்.
கூச்சல், குழப்பத்திற்கு மத்தியில் பேசிய தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு “பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு நினைத்தால், இந்த விலை உயர்வைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
பெட்ரோலியத்துக்கு என சிறப்பு வரி விதிக்கப்பட்டு, ஏராளமான நிதியை எண்ணெய் நிறுவனங்கள் குவித்தும் கூட, பொதுமக்களின் சுமையைக் குறைக்க மனம் வராதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து அவையில் கூச்சல் நிலவியதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.