- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் டிரைவரின் கவனக்குறைவு காரணமாக, வேனை பின்நோக்கி இயக்கிய போது, 2-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வாகனத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், 22 வகையான விதிகளை கடைபிடிக்குமாறு சென்னையில் உள்ள 500 தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி,
‘பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். புதுப்பிக்கப்படாத பேருந்துகளை இயக்கக் கூடாது. உரிய கல்வி தகுதி மற்றும் முறையாக பயிற்சி பெற்று உரிமம் வைத்துள்ளவர்களையே ஓட்டுனராக நியமிக்க வேண்டும்.
பேருந்தின் நான்கு புறமும் மாணவர்கள் இருக்கிறார்களா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
பள்ளிப் பேருந்து, வேன், ஆட்டோவில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். பள்ளி வாகனங்களில் அதிகளவு மாணவர்களை ஏற்றக் கூடாது.
மாணவர்களை ஏற்றி, இறக்குவதற்கு உதவியாளர் கட்டாயம் பள்ளி வாகனங்களில் இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களை ஓட்டும் போது, சினிமா பாடல்களை போடக் கூடாது.
30 நிமிடத்திற்கு மேல் மாணவர் பயணிக்காத வகையில் வாகனங்களின் பயண தடத்தை அட்டவணையிடுங்கள். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றுவதை பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அளவுக்கு மீறி ஏற்றிச் செல்ல வேண்டாம் என்று ஆட்டோ, வேன், கார் ஓட்டுனர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்கக் கூடாது என்றும் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
29.03.2022 2 : 30 P.M