குரலால் அரசாளும் டி.எம்.செளந்தரராஜன்!

1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டி.எம்.செளந்தரராஜன். காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசை பயின்று திரையுலகில் நுழைந்த அவர், பிறகு 40 ஆண்டுகள் வரை தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத பாடகராக வலம் வந்தார்.

துவக்கக் காலத்தில் மேடை கச்சேரிகளில் பாடி வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது ‘கிருஷ்ண விஜயம்’ என்ற படத்தில் ‘ராதே நீ என்னை விட்டு போகாதடி’ என்ற பாடலை பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார்.

அதன் பிறகு மந்திரக் குமாரி, தேவகி, சர்வாதிகாரி எனப் பல படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

காதல் பாடலாகட்டும், தத்துவப் பாடல்களாகட்டும் அந்தந்த பாடலின் ஜானருக்கு ஏற்ப தனது குரலை வழங்கியிருப்பார் டி.எம்.எஸ்.

1957 – ல் வெளியான ‘மக்களைப் பெற்ற மகராசி’ என்ற படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரி பூட்டி, வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு’ பாடல் காற்றில் என்றென்றும் மிதக்கும் இன்ப ரகம்.

பக்திப் பாடல்கள் பாடுவதில் டி.எம்.எஸ்-க்கு நிகர் அவர் தான். திருவிளையாடல் படத்தில் ‘பாட்டும் நானே பாவமும் நானே’, அருணகிரிநாதர் படத்தில் வரும் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ போன்ற பாடல்களைக் கேட்டு வளர்ந்த அவர் கால வயதினர் பாக்கியசாலிகள்.

குறிப்பாக முருகன் பாடல்களை டி.எம்.எஸ் பாடும்போது பக்தியின் பரவசத்தில் மயங்காத முருக பக்தர்களே கிடையாது.

“கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்…”,
“உள்ளம் உருகுதைய்யா முருகா உன்னடி காண்கையிலே…”,
“அழகென்ற சொல்லுக்கு முருகா… உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா…”., தமிழ் நம்பி எழுதிய “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…” போன்ற பாடல்கள் நம் பால்யத்தை இன்றும் என்றும் நினைவுபடுத்தும்.

பக்தி என்றதும் கனிவும் பக்தியும் பொங்கும் அவரது குரல், தத்துவப் பாடல்கள் என்றால் அதற்கேயான தொணியில் மாறி ஒலிக்கும்.

1973-ல் வெளியானது சூரியகாந்தி திரைப்படம். ஜெயலலிதா, முத்துராமன் ஆகியோர் நடித்திருந்தனர். முக்தா சீனிவாசன் இயக்கிய அப்படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

அந்தப் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா…” என்ற பாடலை வாழ்வில் ஒருமுறை கூட கேட்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

1965-ல் வெளியானது எம்.ஜி.ஆர் நடித்த ‘பணம் படைத்தவன்’ திரைப்படம். இப்படத்தை இயக்கியவர் டி.ஆர்.ராமண்ணா.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்த இப்படத்தில் வரும் “கண் போன போக்கிலே கால் போகலாமா… கால் போன போக்கிலே மனம் போகலாமா…” என்ற பாடல் தமிழ் சினிமா தத்துவப் பாடல்களில் முக்கியமானது. அதைப் பாடியவர் டி.எம்.எஸ்.

எம்.ஜி.ஆர் தனது திரை வாழ்வில் எத்தனையோ புரட்சி மற்றும் தத்துவப் பாடல்களில் தோன்றியிருந்தாலும் இப்பாடலில் அவர் தோன்றும் பாணி அத்தனை மென்மை ரகம். இப்பாடலை எழுதியவர் கண்ணதாசன் எனப் பலரும் நினைப்பதுண்டு உண்மையில் இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.

சிவாஜி, எம்.ஜி.ஆர் துவங்கி ஜெமினி கணேஷன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நாகேஷ் என அக்காலத்தின் முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே டி.எம்.எஸ் குரல் கொடுத்திருக்கிறார்.

அதில் ஆச்சரியமே இவரது குரல் அந்தந்த நடிகர்களின் உடல் மொழிக்கு ஏற்ப அத்தனை பொறுத்தமாக இருக்கும்.

10,000-க்கும் அதிகமான திரைப்பாடல்களையும் 2500-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

தனது ஒப்பற்ற கலை பங்களிப்பிற்காகப் பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி உட்பட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது.

கலையுலகிற்குத் தன்னிகரில்லா பங்களிப்பை வழங்கிச் சென்ற டி.எம்.செளந்தரராஜனை பெருமையுடன் நினைவு கூர்வோம்.

You might also like