நம்மை வாழ வைக்கும் பூமியைப் பாதுகாப்போம்!

நம் எல்லோருக்கும் பரிச்சயமான வார்த்தை வானிலை.

திடீர் புயல், மழை வந்தால் மட்டுமே நம்மில் பலர் கூர்ந்து கவனிக்கும் இந்த வானிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மார்ச் 23-ம் நாள் உலக வானிலை நாள் (World Meteorological Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

காரணம், உலக வானிலை கழகம் தொடங்கப்பட்ட நாள் மார்ச் மாதம் 23-ம் தேதியாகும்.

1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள்.

ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.

வானிலை எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறதோ அந்தளவுக்கு தான் மனித இனம் உட்பட உயிரினங்கள், தாவரங்கள் உயிர் வாழ முடியும்.

அதிகமான புயல் காற்றோ, பலத்த மழையோ, கடும் வெய்யிலோ வந்தால் எந்த உயிருக்கும் உத்திரவாதமில்லை.

சில பல நேரங்களில் இந்த வானிலை மோசமாகி நம் பயணம், சமூகத் திட்டங்கள் மற்றும் நமது பாதுகாப்பைக் கூட பாதிக்கிறது.

பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன.

இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில விஷயங்களே!

ஆனால் சுகாதாரம், உணவு, விவசாயம், பாதுகாப்பான தண்ணீர்,வறுமை ஒழிப்பு, இயற்கை பேரழிவுகளை தவிர்த்தல், விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்து, கடல்சார் ஆய்வாளர்கள், மீனவர் பயணம் போன்ற பல பேருதவிகளை செய்கிறது வானிலை என்பதை உணர்த்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அதே சமயம் வானிலை ஆய்வு என்பது ‘விண்கற்கள்’ பற்றிய ஆய்வு அல்ல, ஆனால் அது காற்றில் உள்ள வெப்பநிலை, காற்று அழுத்தம், நீர் நீராவி, அத்துடன் அவை அனைத்தும் காலப்போக்கில் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன அல்லது மாறுகின்றன – அவை கூட்டாகி மாறும் இயற்கையின் நடத்தையை விளக்கவும் கணிக்கவும் முயற்சிக்கும் பணியாகும்.

தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது.

தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்- டை- ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது.

தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதில் வளரும் நாடுகளை விட,வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது.

இச்சுழலில் வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

வெப்பம் அதிகரிப்பதால் உலகில் உள்ள பனிப்பாறைகள் உருகி எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதனால் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

மற்ற நாடுகளைப் போல, இந்தியாவும் நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது குறித்த சாத்தியக் கூறுகளைஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முடியும்.

மொத்தத்தில் நம்மை வாழ வைக்கும் இந்த பூமியை பாதுகாப்பதன் மூலல் வான்வெளிக்கு தொந்தரவு ஏதும் நிகழாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like