எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். மாலை நேர வகுப்புகள். இந்த அதிசயம் நடப்பது எங்கே?
ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டம் மாவோயிஸ்ட் போராளிகள் அதிகம் உள்ள மாவட்டம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. வனத் தயாரிப்புகள், தாதுப்பொருட்கள் கொண்ட பகுதி.
மாவட்ட நிர்வாகம் அங்குள்ள பெரியவர்களுக்கு கல்வி கற்க திட்டமிட்டது. ‘பத்னா லிக்னா அபியான்’ என்ற அந்தத் திட்டத்தில் 6 ஆயிரம் குடும்பங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 600 பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டன.
அதில் ஒவ்வொரு பாடசாலைக்கும் 10 தன்னார்வலர்கள் அல்லது குழந்தைகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதன் மூலம் முடியாது என்பதை நடத்திக் காட்டினார்கள்.
மாலை நேர வகுப்புகள் பெரிய மாற்றத்தை கிராமப்புறங்களில் உருவாக்கின. அதற்கு சந்துவா பிளாக் தோரர் கிராமத்தின் மீனாதேவி ஒரு எடுத்துக்காட்டு. அவரது மகள் கிரண் குமாரி, தன் தாய்க்கு கையெழுத்துப் போட கற்றுக்கொடுத்தார். அதற்கு முன்பு அவர் கைநாட்டு வைத்துக் கொண்டிருந்தார்.
“நான் பள்ளிக்கூடம் சென்றதில்லை. அரசு உதவித் திட்டங்களைப் பெறுவதற்காக கைநாட்டு வைக்கும்போதெல்லாம் வெட்கமாக இருக்கும்.
இப்போது எனக்கு நம்பிக்கையும் வலிமையும் பிறந்திருக்கிறது. அரசு ஆவணங்களில் நான் கையெழுத்திடுகிறேன்” என்கிறார் மீனாதேவி.
இவரைப் போலவே அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் எழுதவும் படிக்கவும் கற்றுள்ளார்கள். எல்லோரும் அவரது மகளுக்கு நன்றி சொல்கிறார்கள்.
“நான் கல்லூரி முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்தேன். இந்தத் திட்டம் பற்றி கேள்விப்பட்டபோது, அதில் சேர்ந்தேன். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது” என்கிறார் கிரண் குமாரி.
சந்த்வா வட்டாரத்தின் கீழ் உள்ள டுரிசோட் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கரிஷ்மா குமாரி, தனது வீட்டின் அருகே வகுப்புகள் எடுக்கிறார்.
“இந்தத் திட்டத்தைத் தொடங்கிய மாவட்ட நிர்வாகத்தைப் பாராட்டுகிறேன். இது எங்கள் ஊர்ப் பெரியவர்களை எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்ற உதவும்” என்றும் கூறும் கரிஷ்மா, 100 சதவீதம் எழுத்தறிவு பெறும் இயக்கத்தை தனது கிராம மக்கள் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த இலக்கின்படி, மார்ச் 31ம் தேதிக்குள் 6 ஆயிரம் பேரை கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றவேண்டும்.
ஏப்ரல் 1ம் தேதி முதல், அக்டோபர் 2ம் தேதிக்குள், 1,24,667 படிப்பறிவில்லாதவர்களை கண்டறியும் வகையில், பள்ளிகளில் அதிக குழந்தைகளை சேர்க்கும் பணி தொடங்கப்படுகிறது.
மாவட்ட எழுத்தறிவு இயக்கத்தின் திட்ட மேலாளர் சந்தீப் பிரஜாபதி,
“எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டாருக்கு பாடம் நடத்துகின்றனர்.
பெரும்பாலான ‘மாணவர்கள்’ விவசாய நிலங்களில் வேலை செய்கின்றனர். வேறு சிலர் கூலித் தொழிலாளர்களாக நகரங்களுக்குச் சென்றுவருகின்றனர். அதனால் வகுப்புகள் மாலையில் மட்டுமே நடத்தப்படுகின்றன” என்கிறார்.
“தன்னார்வலர்களுக்கு கெளரவ ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் அதை ஒரு பெரிய நோக்கத்திற்காக செய்கிறார்கள். இவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
படிப்பறிவில்லாத ஒருவரை கல்வியறிவு பெறச் செய்ய பொதுவாக 120 மணி நேரம் செலவாகும். அதில் இந்தி மொழியில் படித்தல், எழுதுதல் மற்றும் கணக்கிடுதல் போன்ற அடிப்படைக் கல்வியும் அடங்கும்.
ஒரு நபரால் கையெழுத்தை மட்டுமே போட முடியும் என்றால், அவர்கள் ஒரு நபரை எழுத்தறிவு பெற்றவராக கருதமாட்டார்கள்.
“நான் கிராமவாசிகள் மற்றும் ‘பால் சன்சாத்’ குழந்தைகளுடன் பேசினேன்.
அடுத்த சில வாரங்களுக்குள் அனைவரையும் கல்வியறிவு பெறச் செய்துவிடுவோம் என்று தெரிவித்தனர்” என்கிறார் பள்ளி ஆசிரியர் விஜய் குமார் பாஸ்வான்.
பத்னா லிக்னா அபியான் என்பது லேட்ஹர் துணை ஆணையரின் யோசனை. ஏப்ரல் 4 ஆம் தேதி அதை அவர் முறையாகத் தொடங்குவார். இந்த இயக்கம் 6,000 குடும்பங்களை கல்விக்காக தத்தெடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
பா. மகிழ்மதி