கதை கேளு, கதை கேளு…!

உலகக் கதை சொல்லல் நாள்:

‘இன்று (மார்ச் 20) உலக கதைப் படிக்கும் தினம்!’ என்றால், ‘அட இதற்கும் ஒரு நாளா?’ என்று பலருக்கும் தோன்றும்.

ஆனால் கதைகள், நமது வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சிகளை மட்டுமல்ல, முன்னேற்றங்களையும் தரும் வரலாற்றை, புராணங்களை அறியத்தரும்.

ஆம்..

சிறு வயதில் தாத்தா, பாட்டியிடம் கதை கேட்ட கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.

‘நான்கு எருதுகள் சேர்ந்து வாழ்ந்தபோது, சிங்கத்தால் ஏதும் செய்ய முடியவில்லை. அவை தனித்தனியாக பிரிந்தவுடன் சிங்கம் அடித்துக் கொன்று சாப்பிட்டு விட்டது’ என்கிற கதை பலருக்கும் தெரியும்.

இதிலிருந்து, ஒற்றுமையின் அவசியத்தை, நட்பின் – உறவின் மகிமையை சிறு வயதிலேயே அறிந்துகொள்கிறோம் அல்லவா?

எந்தப் பொருட்களையும் தனக்கென வைத்துக்கொள்வது குழந்தைகளின் இயற்கை சுபாவம். அது தவறல்ல. ஆனால் இதுபோன்ற கதைகளைக் கேட்கும்போது, விட்டுக்கொடுத்து – நட்பைப் பேணும் பழக்கம் ஏற்படும்.

அதே போலத்தான் திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் எத்தனை எத்தனை கதைகள்!

‘ஒருவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் புகழ் பெற்றது. அதே போல, தாத்தா – பாட்டி, அப்பா, அம்மா சொல்லும் கதைகளும் ஒருவரை சிறந்த மனிதனாக்கும்.

அது மட்டுமா?

ராமாயணம், மகாபாரதம் என புராணங்களை எத்தனை ஆர்வத்துடன் குழந்தைகள் கேட்கிறார்கள்!

இதுபோன்ற இதிகாசங்களில் இருந்து, அவற்றின் கிளைக்கதைகளில் இருந்து எத்தனை எத்தனை பாடங்கள் நமக்குக் கிடைக்கின்றன!

உதாணமாக ராமன் – குகன் நட்பைப் பார்ப்போம்.

‘இன்று முதல் ஐவரானோம்’ என படகோட்டி குகனை உடன் பிறந்தவனாக ஏற்கிறான், அரசப் பதவிக்குத் தகுதியான ராமன்!

இதிலிருந்து சாதி, அதிகார, செல்வ வேறுபாடுகள் மனிதருக்குள் தேவையில்லை. அன்பு ஒன்றே நிலையானது என்பது குழந்தைகள் மனதில் பதிகிறது அல்லவா?

அதேபோல, மின் விளக்கு கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றை கதை போலச் சொல்லும்போது அறிவியல் ரீதியான எண்ணங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. தேசப்போராளிகள் பற்றிய வரலாற்றை கதை போல கூறும்போது, தேசப்பற்று அவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது அல்லவா!

இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, கதை கேட்பதன் மூலம், குழந்தைகளின் கற்பனைத்திறன் அதிகரிக்கிறது.

‘மனிதரின் முதல் அறிவு, கற்பனை’ என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

உலகையே புரட்டிப்போட்ட புதிய கண்டுபிடிப்புகளாகட்டும், புதிய திட்டங்கள் ஆகட்டும் எல்லாவற்றுக்கும் கற்பனைதானே அடிப்படை!

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கதைகள் தேவைப்படுறதே!

நாவல், நாடகம், திரைப்படங்கள் என எத்தனை எத்தனை கதைகள்!

இவைதானே நம் மனதுக்கு மகிழ்ச்சியை, ஓய்வைத் தருகின்றன!

அந்தத் தருணங்கள் எவ்வளவு இனிமையானவை! அவைதான் நமது பிரச்சினைகளை சற்று மறக்க.. புதிய திட்டங்கள் தீட்ட காரணமாகிறது!

ஆனால் இன்று குழந்தைகளுக்கு கதை சொல்லும் தாத்தா பாட்டி இல்லை! அந்தக் காலம் போல இப்போது கூட்டுக்குடும்பம் என்பது இப்போது கிடையாது அல்லது அருகி விட்டது.

அப்படி கூட்டுக்குடும்பமாக இருக்கும் பெரும்பாலன தாத்தா, பாட்டிகளுக்கும் இப்போது தொலைக்காட்சி பார்க்கவே நேரம் போதவில்லை.

பெற்றோருக்கோ வேலை, வேலை, வேலை!

பள்ளிகளிலோ, பாடங்கள் படிக்கவே நேரம் சரியாக இருக்கிறது; மாலை தனிப்பாடம் (டியூசன்) அல்லது, அபாகஸ், கராத்தே என வேறு விசயங்கள்!

இவை எதுவும் தவறல்ல. ஆனால் இவற்றுக்கான நேரங்களில் சற்று ஒதுக்கி குழந்தைகளுக்கு கதை கேட்கும் வாய்ப்பை வழங்க வேண்டு.

கல்வி, அபாகஸ், கராத்தே.. இவை போன்ற அனைத்தை விடவும் கதைகள், குழந்தைகளை செம்மையாக்கும், அவர்களுக்கு நீதி, ஒற்றுமை மட்டுமல்ல.. மனத்திடத்தையும் எதிர்கால வாழ்க்கையை உறுதியுடன் எதிர்கொள்ளவும் மனதிடத்தை அளிக்கும்.

இன்னொரு விசயம்..

‘இப்போதுதான் யூடியூபில், ஓ.டி.டி. தளங்களில் ஏராளமான சிறுவர் கதைகள் வீடியோ வடிவிலேயே இருக்கின்றனவே’ என்ற கேள்வி எழலாம்.

அவை தவறென சொல்லவில்லை. ஆனால் அதுவே சரியல்ல என்பதே உண்மை.

எப்போதவது யு டியுப், ஓ.டி.டி. தளங்களில் கதைகளை பார்க்க குழந்தைகளை அனுமதிக்கலாம். ஆனால் அடிக்கடி அப்படி அனுமதிப்பது நல்லதல்ல.

முதல் விசயம், குழந்தைகளின் பிஞ்சுக் கண்கள் பாதிக்கப்படும்.

அடுத்து அதைவிட முக்கியமான விசயம்.. வீடியோவில் காட்சிகளாக வருவதால், குழந்தைகளுக்கு கற்பனைத் திறன் வளராது. கேள்விகள் எழாது.

உதாரணமாக ஒரு காட்டினை காண்பிக்கிறார்கள்.. இரு கதாபாத்திரங்கள் பேசுகின்றன.

அடுத்து இன்னொரு காட்சி.. இப்படி வீடியோ ஒடும்போது குழந்தைகளின மனதும் அடுத்தடுத்து ஓடும்.. மனதில் பெரிதாக எதுவும் பதியாது.

ஆனால், ‘ஒரு காடு இருந்தது.. அங்கே சிங்கமும், புலியும் வாழ்ந்தன’ என நீங்கள் கதை சொல்லும்போது, ஆர்வத்துடன் கேட்பதோடு, ‘காடு எப்படி இருக்கும்.. மரங்கள் இருக்கும் என்றால் என்னென்னெ மரங்கள்.. சிங்கம், புலி மட்டும்தான் இருக்குமா மற்ற மிருகங்கள் இருக்காதா..’ என குழந்தைகளில் சிந்தனை வளரும்.

ஆம்.. நமது குழந்தைகள், சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக வளராமல் சிந்தனைத் திறனுடன் வளர வேண்டும் என்றால் நேரம் ஒதுக்கிக் கதை சொல்லுங்கள்!

இதுவரை சொல்லாதவர்கள், அல்லது எப்போதாவது சொல்பவர்கள்… உலக கதை சொல்லல் நாளான இன்று முதல் தினமும் குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆரம்பியுங்கள்!

– யாழினி சோமு

20.03.2022

You might also like