வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலிப் பண்டிகை வட இந்தியாவிலும், தற்போது பரவலாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு நாளை (மார்ச் 18 ஆம் தேதி) ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றம் கூடி பல்வேறு வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, இனிப்புகளைப் பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
தீபாவளி, பொங்கல் போன்று வட இந்தியாவில் கொண்டாடும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி.
இந்த திருநாளில் அனைவரும் ஒன்று கூடி வண்ணங்களில் மூழ்கி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது இந்த ஹோலித் திருவிழா.
ஹோலிப் பண்டிகையின் வரலாறு:
அரசன் இரண்யகசிபு கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் ஒன்றைப் பெற்றிருந்தான்.
அந்த வரத்தால் இவன் வேண்டியது தனது மரணம் பகலிலோ இரவிலோ வீட்டில் நடக்கக்கூடாது, வெளியிலும் நடக்கக்கூடாது, மண்ணிலும், விண்ணிலும் நடக்கக்கூடாது.
விலங்காலோ அல்லது எந்த ஆயுதத்தாலும் தன்னை கொல்ல முடியாத வரம் பெற்று ஆணவத்தின் காரணமாக தானே கடவுள் என்றும் தனக்கு மட்டுமே பூஜைகள் செய்ய வேண்டும் என மக்களைத் துன்புறுத்தி வந்தான்.
ஆனால், இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் விஷ்ணுவின் பக்தன். தந்தை சொல்வதை எதையும் கேட்காமல் திருமாலின் பெயரை மட்டும் உச்சரித்தான் பிரகலாதன். இதனால் கோபமடைந்த இரண்யகசிபு, பல கொடுமைகள் செய்து மகனைக் கொல்ல முயற்சித்தான், ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இரண்யகசிபு இறுதியாக தனது மகனைக் கொல்ல ஒரு முடிவெடுத்தான். தனது சகோதரி அரக்கி ஹோலிகாவிடம் பிரகலாதனை நெருப்பில் போட உத்தரவிட்டான். ஆனால் அரக்கி அணிந்திருந்த துப்பட்டா தீயில் எரியாது.
அதனால் அவள் தீயில் தைரியமாக இறங்கினாள். ஆனால் திருமாலின் அருளால் அதிலிருந்து அவன் தப்பித்தான். ஹோலிகா எரிந்தால் அதன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன.
அண்டத்தில் ஒளியின் திருவிழாவாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகிறது என்பது நம்பிக்கை.
இந்தப் பண்டிகை, கிருஷ்ணரின் பிறப்பிடமான பிரஜ் பகுதியில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மதுரா, டெல்லி, உதயப்பூர் ஆகிய பகுதிகளில் மிக விமர்சியாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஹோலி விழாவின் போது, மதுராவில் உள்ள கோயில்கள் திருவிழாக் கொண்டாட்டமாகவே இருக்கும்.
ஆகவே ஹோலி என்பது புராணக் கதைகளைத் தாண்டி வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், ஏற்றத்தாழ்வு, சாதி, மதம் இல்லாமல் மக்களின் மகிழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக இருப்பதால் ஹோலிப் பண்டிகையை நாமும் வரவேற்கலாம்.
– யாழினி சோமு
17.03.2022 12 : 30 P.M