செல்போன் அடிமைகளா நாம்?

-மணா

*

அந்தப் பெரு நகரின் புறநகர் ரயில்வே கிராஸிங்.

கதவு மூடி இரண்டு புறமும் கதவுகள் மூடியிருக்கின்றன. வாகனங்கள் பொறுமையுடன் காத்திருக்கின்றன. சிலர் மூடியிருந்த இரும்புத் தடுப்பின் கீழ்ப்பகுதியில் தங்களை நுழைத்து ரயில் பாதையைக் கடந்து வருகிறார்கள்.

ஒரு இளம் பெண்ணும் செல்போன் பேசியபடி அந்த இரும்புத் தடுப்பை குனிந்து தாண்டுகிறார். அதற்குள் ரயில் நெருங்கிவிட்டது.

ரயில் சத்தமும் கேட்கிறது. சுற்றிலும் காத்திருந்தவர்களும் கத்துகிறார்கள்.

செல்போன் பேச்சு சுவாரஸ்யத்தில் அந்தப் பெண்ணுக்குக் கேட்கவில்லை.

ஒரே முட்டல் தான்.

அந்தப் பெண்ணின் கிரீச்சிட்ட சத்தம் உயர்ந்து ஓய்கிறது.

சுடிதார் அணிந்த அந்தப் பெண் ரத்தக் குவியலாகச் சிதறிக்கிடக்க, பழுதில்லாமல் தனித்துக் கிடக்கிறது அந்தப் பெண் பேசிக் கொண்டிருந்த செல்போன்.

*

கொடைக்கானல். எங்கும் பனி மூட்டம்.

தற்கொலைப் பாறை அருகில் எச்சரிக்கைப் பலகைகள். இருந்தும் அதன் அருகில் நின்று செல்போனில் புகைப்படம் எடுக்கிறார்கள் பலர்.

அந்தப் புதிதாகத் திருமணம் ஆன ஜோடியும் அப்படித் தான்.

சுவரின் விளம்பில் குளிர்கால உடையுடனும், முகத்தில் நாணத்துடனும் நிற்கிறார் அந்தப் புதுமணப் பெண்.

இளம் கணவன் தான் செல்லில் புகைப்படம் எடுக்கிறார்.

“இங்கே பாரு…”- அந்தப் பெண்ணின் பெயரைச்சொல்லிக் கத்துகிறார்.

சட்டென்று கால் தடுமாறிப் பின்னால் சரிகிறார் அந்தப் பெண். பனி மூட்டத்தில் எங்கோ தொலைகிறது அந்தப் பெண்ணின் உடல்.

கடைசிக் குரலைக் கேட்ட அந்த இளம் கணவன் அந்த இடத்திலேயே மயங்கிக் கீழே விழுகின்றான்.

அவனுடைய செல்போனில் பதிந்திருக்கிறது அந்தப் பெண்ணின் கடைசிப் புன்னகை.

*

புலிகள் நடமாட்டம் மிகுந்த எச்சரிக்கையான வனப்பகுதி.

வாகனங்கள் வரும் சாலையில் யானைகள் வரிசையாகக் கடக்கின்றன சாலையை.

ஒரு வாகனத்தில் இருந்து இறங்கிய இளைஞர்கள், வாகனத்தை விட்டு இறங்கி மலைச் சரிவில் இறங்க முயன்று கொண்டிருக்கும் யானைகளைக் கூச்சலுடன் நெருங்குகிறார்கள்.

செல்போனில் ப்ளாஷ் மின்னிடுகிறது.

திரும்பிய யானையில் கண்ணில் பிரதிபலிக்கிறது ப்ளாஷ் ஒளி.

சட்டென்று பிளிறிய படி முன்னுக்கு ஆக்ரோஷத்துடன் ஓடி வருகிறது யானை.

செல்போனால் படம் பிடித்துக் கொண்டிருந்த இளைஞனால் யானையின் திடீர் வேகத்திற்கு ஈடு கொடுத்துப் பின்னால் நகர முடியவில்லை.

யானை தாக்கியதில் அந்த இடத்திலேயே உயிர் நசுங்கிப் போனது அந்த இளைஞரின் உடல்.

*

காஸ்ட்லி ஆன்ட்ராய்டு செல்போன் வாங்கிய சில நாட்களிலேயே அந்த இளைஞர் பணியாற்றிய அலுவலகத்தில் ‘எந்த ஆப்’பை அதில் நிறுவினார்களோ, அதிலிருந்த அந்த போனின் காமிராவை யாரோ இயக்குகிறார்கள். காமிரா வழியே அந்த இளைஞரின் அந்தரங்கத்தைக் கூட மோப்பம் பிடிக்கிறார்கள்.

அந்தரங்கப் பேச்சுக்கள் கூட நிர்வாகிகளால் கேட்கப்படுகின்றன. இந்த அத்துமீறிய தொழில் நுட்பம் சார்ந்த மோப்பத்தின் மூச்சு தெரிய வந்ததும் அந்த இளைஞர் அந்த அலுவலகத்தை விட்டுப் பதவி விலகுகிறார்.

இதே மாதிரியாக சீன மற்றும் வெளிநாட்டு ஒட்டுக் கேட்கும் கருவிகளைக் கொண்டு தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களைக் கண்காணிப்பதும் பெரு நிறுவனங்களில் இயல்பாக நடக்கிறது.

*

“ஏம்ப்பா.. என்னோட செல்போனை எப்பப் பார்த்தாலும் ஒட்டுக் கேட்கிறீங்க? கேவலமா இல்லையா? இந்த லட்சணத்திலே இந்த போனெல்லாம் ஒரு கேடா?”- பெருந்திரளாக மக்கள் திரள் கூடியிருக்கிற இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தன்னுடைய இரு காஸ்ட்லி செல்போன்களையும் கூட்டத்தில் வீசியெறிந்தார்.

அந்த அரசியல்வாதி தன்னைப் பார்க்க வரும் நணபர்களிடம் முன் ஜாக்கிரதையாகச் சொல்வார்.

“இந்தத் தெரு முனைக்கு வர்றதுக்கு முன்னாலேயே உங்க செல்போனை ஆஃப் பண்ணிட்டு வந்துருங்க”

*

“எந்த நேரமும் செல்லும், கையுமாத் தான் இருக்கான்.. வேற ஒண்ணையிலேயும் ஈடுபாடில்லை.. விடிஞ்சு அடங்குற வரைக்கும் செல்லில் என்ன தான் பார்ப்பாங்களோ? பைத்தியம் மாதிரி ஆகிட்டாங்க”

– இந்த உரையாடல்கள் பல வீடுகளில், அதுவும் கொரோனாப் பெருந்தொற்றுக்குப் பிறகு பரவலாகவே கேட்டிருக்கலாம்.

ஆன்லைன் வகுப்புகளை அசட்டையாக அட்டென்ட் பண்ணி வந்த இளைஞர்களுக்குத் தற்போது நேரடி வகுப்புகள் திறந்த பிறகு அதற்கு ஒட்டாத மனநிலையுடன் போகிறார்கள்.

மாணவர்களுடைய உலகத்தையே அவ்வளவு மனச்சிக்கலோடு ஆக்கியிருக்கிறது செல்போன் தொழில்நுட்பம்.

*

முன்பெல்லாம் சிறு பிள்ளைகள் அழுதால் ரப்பர் சூப்பியை வாயில் லாவகமாத் திணிப்பார்கள். இப்போது அதே வயதுக் குழந்தைகள் அழுதால் அதன் கையில் கேம்ஸ் அடங்கிய செல்போனைத் திணிக்கிறார்கள்.

குழந்தை அழுகையை நிறுத்தி சின்னச் செல்போனுக்குள் ஆழ்ந்துவிடுகிறது. பிஞ்சு விரல்கள் அதற்குள் கேம்ஸை இயக்கக் கற்றுக் கொள்கின்றன.

அதை வளர்ச்சி என்று பூரிக்கிற பெற்றோர்கள் அதன் ஆபத்தான எதிர்வினைகளை அறிவதில்லை.

அதிலேயே போதையைப் போல மூழ்கும் குழந்தைகள் மற்றவர்களுடன் இயல்பாகப் பேசவும், தாய் மொழியைக் கற்றுக் கொள்ளவும் பின்தங்கிப் போகின்றன.

சில குழந்தைகளை வேறு வழியின்றி மருத்துவர்களிடம் அழைத்துப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது.

*

பெரு நகரங்களில் தான் இப்படி என்றில்லை. சாதாரண கிராமத்துக் குழந்தைகளும் செல்போன்களைப் பிடிவாதமாக வாங்கி அதற்கு அடிமையைப் போல் ஆகிவிடுகின்றன.

அண்மையில் எளிய வீட்டில் எந்த நேரமும் செல்போனுடன் 13 வயதான பெண் இருந்ததைப் பார்த்து அதைக் கைப்பற்றிப் பெற்றோர் கண்டித்தது தான் தாமதம்.

சிறிது நேரத்தில் தனியறையில் தூக்குப் போட்டு உயிரை விட்டு விட்டது அந்தக் குழந்தை.

இது மாதிரிப் பல குழந்தைகள் அபாயத்தை நோக்கிப் போகும் அல்லது போவதாகப் பயமுறுத்தும் தங்கள் குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்று கையறு நிலையில் இருக்கிறார்கள் பெற்றோர்கள் பலர்.

ஏனென்றால் பெற்றோர்கள் குழந்தைகளின் மனநிலையை வடிவமைப்பதைவிடத் தற்போது அவர்களை வடிவமைத்துக் கொண்டிருப்பது செல்போன்கள்.

பெற்றோர்களிடம் காட்டும் மரியாதை, வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் காட்டும் உபசரிப்பு, சக மனிதர்கள் மீது காட்டும் மதிப்பு , சமூக அக்கறை என்று எல்லாவற்றையும் வளரும் தலைமுறையிடம் இரண்டாம் பட்சமாக்கி இருக்கிறது செல்போன் மோகம்.

*

செல்போன் வந்த பிறகு அதுவரை இருந்து வந்த பல ஒழுக்க நெறிகள் மாறிப் போகின்றன.

ஒரு விபத்து நடந்தால், ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் பண்ணுகிறவர்களைப் பார்த்தால் முன்பெல்லாம் தகுந்த எதிர்வினையாற்றிய அதே மக்கள் அவற்றைச் செல்போனில் படம் பிடித்து மற்றவர்களுக்குப் பகிர்ந்து ‘லைக்’ வாங்கப் படாதபாடு படுகிறார்கள்.

தன்னுடைய நலன் அல்லது வக்கிரத்தை மட்டும் முன்னிறுத்தும் மனோ வியாதியைப் பரப்பி வைத்திருக்கிறது செல்போன்கள்.

*

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரங்களும், “அண்ணா.. விட்டுருங்கண்ணா” என்ற கதறல்களும் செல்போன் வக்கிரங்களை அம்பலப்படுத்தின. முறைகேடான பாலியல் கொடுமைகளுக்கான தொழில்நுட்பச் சாட்சியங்களைப் போலிருக்கின்றன நவீன செல்போன்கள்.

பெகாசஸ் போன்ற மாபெரும் வலைப் பின்னல் அரசியல், அதிகாரம், நீதித்துறை சார்ந்தவர்களைக் கூடக் கண்காணித்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன.

அந்த விசாரணை உரிய முறையில் நடக்கவில்லை என்றாலும், கண்காணிப்பு என்று வந்துவிட்டால், செல்போன் வைத்திருக்கிற யாரும் தப்ப முடியாது.. யாருடைய அந்தரங்கத்திற்கும் இங்கு பாதுகாப்பில்லை.

*

சமூக வலைத்தளங்களில் எழுதும் சுதந்திரத்தைப் பற்றிப் பலரும் சாதகமாகச் சொன்னாலும், அதுவும் முழுக்கக் கண்காணிப்புக்குட்பட்டதாகத் தானிருக்கிறது. யாரையும் கைது செய்யக்கூடிய அதிகார பலத்தையும் கொடுத்திருக்கிறது.

செல்போனில் அதிருப்தியின் மூச்சு தெறித்தாலும், அதற்கான எதிர்வினை சாத்தியம் இருக்கிறது.

தொலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி என்று எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்திறங்கினாலும், தமிழகத்தில் மட்டும் பல கோடி எண்ணிக்கையில் வியாபித்திருக்கிற செல்போன் தொலைந்து போனால் பதறிப்போகும் நாம் அதே செல்போனுக்கு எப்படி எல்லாம் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோமா?

17.03.2022 12 : 05 P.M

You might also like