அண்மையில் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் பஞ்சாப்பில் நடந்து வந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இவர் ஏற்கனவே பஞ்சாப்பில் உள்ள சங்ரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பதால், நேற்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப்பில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலனில் பதவி ஏற்பு விழாவிற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டுக்காக உயிர் துறந்த பகத்சிங் கடைசி நாளில் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதை உணர்த்தும் வகையில் பதவி ஏற்பு விழாவிற்கு வரும் அனைவரும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து வர வேண்டும் என்று பகவந்த் மான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் 17-வது முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.
இன்று நடந்த விழாவில் பகவந்த் மான் மட்டுமே பதவி ஏற்றுக்கொண்டார். கட்சித் தலைமையின் ஆலோசனைக்குப் பிறகு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பகவந்த் மான் சிங் பதவி ஏற்பு விழாவில் கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் பகவந்த் மான் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர்.