இந்தச் செடிகளை வீட்டில் வளர்த்தால் ஆபத்தா?

இயற்கையை நாம் ரசிக்கக் காரணம் பச்சை போர்த்திய செடிகள், புல்வெளிகள், மரங்களும் பல விதமான தாவரங்கள் தான். இவ்வாறு ரசிக்கக் கூடிய தாவரங்களை நம் வீட்டுக்குள் அடைத்து விட ஆசைதான்.

ஆனால், அது சாத்தியமில்லை. நமது ஆசைக்காக சில செடிகளை வீட்டில் வளர்க்கலாம். வளர்க்கப்படும் செடியிலும் ஆபத்து இருக்கிறது என்றால் அதுவும் குழந்தைகளை பாதிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

அது பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

நகரத்து வாழ்க்கையில் வீட்டில் எஞ்சி உள்ள இடங்களை அழகாக்கவும் அலங்கரிக்கவும் சில செடிகள் வீட்டிற்குள் வளர்க்கப்படுகிறது. இது நமக்கு ஒரு புத்துணர்ச்சியையும் வீட்டுக்கு அழகையும் கொடுக்கிறது.

இவ்வாறு வளர்க்கப்படும் ஆரோக்கியமான செடிகளில் கற்றாழை, துளசி, ரோஜா, ஓமவல்லி மற்றும் மூங்கில் செடி இன்னும் சில செடிகளைச் சொல்லலாம்.

ஆனால், நாம் வீட்டில் வளர்க்கப்படும் ஒரு சில தாவரங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. எனவே, வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகளில் கவனமாக இருப்பது அவசியாமாகும்.

இப்போது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு சில செடி வகைகளை பார்க்கலாம்.

பிலோடென்ட்ரான் தாவரம் (Philodendron)

இந்த செடியை பரவலாக எல்லா வீடுகளிலும் நாம் பார்க்கலாம். அதை வளர்ப்பது எளிமையானது.

கொடி போன்று படர்ந்து வளர்வதால் பார்ப்பவர்களுக்கு அழகாக இருக்கும். எனவே வீட்டில் வளர்க்க பலரின் தேர்வாக இந்த தாவரம் உள்ளது.

ஆனால், இந்தச் செடியில் இருக்கும் கால்சியம் ஆக்ஸலேட் படிகங்கள், நச்சுத் தன்மையை ஏற்படுத்தக் கூடியவை என்று ஆய்வு கூறுகிறது.

எனவே இந்தச் செடி வீட்டில் இருந்தால் உங்கள் குழந்தைகளிடம் இருந்து உயரமான இடங்களில் வையுங்கள்.

அவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் பாதிப்பு குறைந்த அளவுதான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இருப்பினும் ஒரு சில நேரங்களில் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.

டெவில்ஸ் ஐவி [devils ivy]

இந்தச் செடியும் பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படுகிறது. அழகாக, பராமரிப்பதற்கு எளிதாக இருப்பதால் பலரது தேர்வாக இருக்கிறது.

இது அசுத்தமான காற்றை சுத்திகரித்து தூய்மையான காற்றை வழங்குவதால் வீட்டில் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கிறது.

அது நல்ல மனநிலையை கொடுப்பதாக கூறுகின்றனர். இருப்பினும் இதில் ஆபத்து இருப்பதாக ஆய்வு கூறியுள்ளது.

குழந்தைகள் இந்த இலைகளை தெரியாமல் உட்கொண்டு விட்டால் எரிச்சல், உதடுகள் மற்றும் தொண்டையில் வீக்கம், வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் தோல் எரிச்சல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துமாம்.

லிலியாசியே [liliaceae] பீஸ் லில்லிகள்

இந்தச் செடியும் வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற தாவர வகையைச் சேர்ந்தது ஆகும்.

இந்தச் செடி பசுமையான தன்மையுடன் எப்போதும் இருப்பதால் வீட்டின் அழகு, காற்றை சுத்தப்படுத்துவது கூடுதலாக இருக்கிறது.

இந்தச் செடி மேற்கூறிய தாவரங்களை விடவும் பாதிப்பு அதிகம்.

இதை உட்கொண்டால் குழந்தைகளுக்கு வாய், உதடு மற்றும் நாக்கு எரிச்சல், வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர்.

காலாடியம் தாவரம் [Caladium plant]

குழந்தைகள் இதை வாயில் போட்டு விட்டால் மூச்சு விடுதல், பேசுவதில் பிரச்சனை ஏற்பட்டு மூச்சுக் குழாயில் தடையை ஏற்படுத்துவதால் உயிரிழப்பு ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது.

எனவே, இந்தச் செடியை வளர்க்க விரும்பினால் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கலாம்.

இங்கிலிஷ் ஐவி [English Ivy]

இந்தச் செடியை கூடையில் வைத்துத் தொங்க விட்டால் அவ்வளவு அழகாக இருக்கும். அழகு என்றால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கும் என்பது உண்மைதான்.

தாவரங்கள் என்றால் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயல்பாகவே இருக்கும். இதுவும் அப்படித்தான்.

அதை வளர்க்கும் போது கூடுதல் எச்சரிக்கை தேவை.

இதனை உட்கொண்டால் மேற்கூறிய பிரச்சனையுடன் காய்ச்சல், மயக்கம் போன்ற விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

எனவே இந்தச் செடியிடம் இருந்தும் குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டும்.

இயற்கையின் படைப்பில் நன்மை தீமை, இரண்டும் கலந்து இருக்கும். நல்லதை எடுத்துக் கொண்டு தீமையை தள்ளிவைத்துப் பார்க்கலாம்.

– யாழினி சோமு

14.03.2022 12 : 30 P.M

You might also like