– பங்குச் சந்தை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் தேசிய பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடந்ததாக 2018-ல் வழக்கு பதிவானது. அந்த வழக்கு தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் சிக்கிய தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் செயல்பாட்டு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது.
இதில் ஆனந்த் சுப்ரமணியன் இமயமலையில் வாழும் யோகி என மெயில் செய்து சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டுள்ளார். அதன் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் பதவியில் தன்னை நியமனம் செய்ய வைத்துள்ளார்.
மேலும் பல பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களையும் அவரிடமிருந்து கறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆனந்த் சுப்ரமணியனின் ஜாமின் மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதனை சி.பி.ஐ., தரப்பு கடுமையாக எதிர்த்தது.
“மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது. சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்ரமணியனும் வரிச் சலுகைகள் அளிக்கும் சேசல்ஸ், மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கு பயணித்துள்ளனர். இது பற்றியும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஆனந்த் சுப்ரமணியன் செல்வாக்கு மிக்கவர். அவர் நாட்டை விட்டு வெளியேறும் ஆபத்து உள்ளது.” என வாதிட்டது.
ஆனந்த் சுப்ரமணியன் வழக்கறிஞர், “முறைகேடுகள் 2010 மற்றும் 2014க்கு இடைப்பட்ட காலத்தில் நடந்தவை. குற்றம்சாட்டப்பட்ட நபர் 2013-ல் தான் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
இவ்வழக்கு தொடர்பான செபியின் இரண்டு உள்மட்ட விசாரணைகளில் எனது கட்சிக்காரருக்கு எதிராக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.” என்றார்.
வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிபதி சஞ்ஜீவ் அகர்வால்,
“நான்கு ஆண்டுகளாக சி.பி.ஐ., உறங்கி கொண்டிருந்தது. தற்போது திடீரென விழித்துக் கொண்டுள்ளது. ஏன் என்று தான் தெரியவில்லை. ஆனந்த சுப்ரமணியன் கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கும் தப்பிச் செல்லவில்லை. மார்ச் 24-ல் ஜாமின் மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என வழக்கை ஒத்திவைத்தார்.