50 வயதுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த படங்கள்!

1967க்குப் பின், அதாவது ஐம்பது வயதுக்குப் பின் எம்.ஜி.ஆர் சுமார் 45 படங்களில் நடித்திருக்கிறார்.

1963லிருந்தே எம்.ஜி.ஆரின் சினிமா வரைபடம் மேல்நோக்கியே ஏறத் தொடங்கி விட்டது. அந்த வருடம் அதிகமாக 9 படங்கள் வந்தன. அதை ஆரம்பித்து வைத்தது பணத்தோட்டம். அண்ணா எழுதிய கட்டுரைகளின் தலைப்பு.

அத்தோடு பணமும் புகழும் ஏராளமாக எம்.ஜி.ஆரை வந்தடைந்தது.

1965இல் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை அவரது ரசிகர்களின் எண்ணிக்கையை பன்மடங்காக்கிற்று. “நான் ஆணையிட்டால்…” என்ற ஒரு பாடல் அவரையும் கட்சியையும் பட்டி தொட்டியெல்லாம் வேகமாகப் பரப்பியது.

1966இல் மீண்டும் 9 படங்கள். அநேகமாக அவரை வைத்துப் படம் எடுக்காத தயாரிப்பாளர்கள் எல்லோரும் அவர் முகாமிற்கு வந்து விட்டார்கள்.

1967ஆம் ஆண்டு பெரிய நம்பிக்கையோடு அனேகமான பொங்கலுக்குப் படம் வெளியிடும் தேவர் பிலிம்ஸாரின் படமான தாய்க்குத் தலைமகன் படத்தோடு ஆரம்பித்தது. ஆனால் படத்தின் முதல் காட்சிக்கு ஆட்களே இல்லை.

சென்னையில் ரசிகர்கள் எல்லோரும் அரசு பொது மருத்துவமனை முன்பும், மற்ற நகரங்களில் தி.மு.க கொடிக்கம்பங்கள் அருகில் அழுத கண்ணீரோடு அடுத்த வானொலிச் செய்திக்காகவும், அவசரப் பதிப்பாக வெளிவரக் கூடிய பத்திரிகைகளுக்காகவும் காத்துக் கிடந்தார்கள்.

முந்தின நாள் துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டு மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

நாங்கள் படத்திற்குப் போய் விட்டோம். தரை டிக்கெட்கூட நிரம்பவில்லை. படத்தில் எம்.ஜி.ஆருக்குக் கொஞ்சம் கனமான பாத்திரம்.

அதற்கு முன் வந்திருந்த ‘பெற்றால்தான் பிள்ளையா’வில் தனக்கும் மிகை நடிப்பு வரும் என்று நிரூபித்திருந்தார். அதைத் தொடர நினைத்திருப்பார் இதிலும்.

இதில் எம்.ஜி.ஆருக்குத் தனிப்பாடல் கிடையாது. மர்ம முடிச்சு ஒன்றும் கிடையாது. மெலோ டிராமாவான குடும்பக் கதை. மற்றதெல்லாம் தேவர் பட ஃபார்முலாதான்.

அடுத்து நான்கு மாதங்கள் கழித்து ‘அரச கட்டளை’ வந்தது. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம். துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே நடித்தார். மற்றதெல்லாம் முன்பே எடுத்தாயிற்று.

‘நாடோடி மன்னன்’ படத்தில் பானுமதி பாத்திரம் சாக, சரோஜாதேவி அறிமுகமாகி அவரது கால கட்டம் ஆரம்பமாகியது.

இதில் சரோஜாதேவி பாத்திரத்தையும் காலகட்டத்தையும் முடித்து வைத்து ஜெயலலிதா சகாப்தம் நிலை பெற ஆரம்பித்தது.

எம்.ஜி.ஆர் பாத்திரம் ரகசியமாக ஒரு புரட்சிக் கூட்டத்திற்கு உதவுவது, சண்டை போடுவதும் காதலிப்பதும். அருமையான வாள்ச் சண்டை ஒன்று நம்பியாரோடு. அதுதான் எம்.ஜி.ஆரின் கடைசி நல்ல வாள்ச் சண்டை.

பின்னால் வந்த தேர்த்திருவிழா, நீரும் நெருப்பும், நினைத்ததை முடிப்பவன் படங்களிலும் கடைசிப் படமான மதுரையை மீட்டிய சுந்தர பாண்டியன் படத்திலும் வாள்ச் சண்டை வரும். ஆனால் இவ்வளவு உயிர்ப்போடு இருக்காது.

அடுத்து வந்த ‘காவல்காரன்’ படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் உட்கார்ந்தோம். எளிய நேரடியான கதை, நச்சென்ற திரைக்கதை, அதற்கேற்ற சின்ன பட்ஜெட்.

“பார்த்தேன் சுசிலா பார்த்தேன், எங்கோ மேதகச் சிலை குப்பையில் தள்ளப்படறதைப் பார்த்தேன் சுசிலா பார்த்தேன்…” என்று குண்டடிபட்ட குரலில் எம்.ஜி.ஆர் கஷ்டப்பட்டுப் பேசும் வசனத்தைக் கேட்டு,

”தலைவா நீங்க பேச வேண்டாம். பேசாமலே நடியுங்க, நாங்க பாக்கறோம்ன்னு” தியேட்டரே அழுதது. இன்றளவும் அந்தக் குரலைத்தான் மிமிக்ரி பண்ணுகிறார்கள். அவரது அழகான ஒரிஜினல் குரலை எவனாலும் மிமிக்ரி பண்ணமுடியாது.

சி.ஐ.டி பாத்திரம் எம்.ஜி.ஆருக்கு அல்வா சாப்ப்பிடுவது போல. அது போக ‘நாம்’ படத்திற்குப் பிறகு, அதாவது 14 வருடங்களுக்குப் பிறகு ‘பாக்ஸிங்’ சண்டை பிரமாதமாக வந்திருந்தது.

மருந்துக்குக் கூட அரசியல் வாடை வீசாத, அரசியல் வசனமோ, அல்லது எல்லாரும் சொல்கிற மாதிரி தன் பிம்பத்தைக் கட்டமைக்கிற வசனமோ பாடலோ இல்லாத எம்.ஜி.ஆர் படம்.

அதற்கு நேர் மாறாக ‘விவசாயி’ அவரது அரசியல் சார்புக்கேற்ப விவசாயிகளின் தோழனாக நடித்த படம். படம் ஓடாது என்றே நினைத்தோம். அருமையான பாடல்கள். உடுமலையார், மருதகாசி பாடல்களுடன் வழக்கமான சில தேவர் சூத்திரங்களுடன் படம் பிக் அப் ஆகி விட்டது. கதையே தேவரது கதைதான்.

‘ரகசிய போலீஸ்-115’ பந்துலுவின் பிரம்மாண்ட தயாரிப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பிருந்தது.

ஆனால் 1967ல் வந்து நல்ல வெற்றி பெற்ற ‘பட்டணத்தில் பூதம்’, ‘நான்’ போன்ற ஜேம்ஸ்பாண்ட் பாணிப் படங்கள் முந்திக் கொண்டு விட்டன.

அப்புறம், ஏற்கெனவே 1963இல் ‘பணத்தோட்டம்’, 1964இல் வந்த ‘தெய்வத்தாய்’ படங்களிலேயே ஜேம்ஸ்பாண்ட் படத்தின் கூறுகள் வந்துவிட்டன. அதனால் பெரிய வெற்றி பெறவில்லை.

ஜஸ்டினுடன் ஒரு அருமையான, வேகமான ஜூடோ சண்டை. நம்பியாருடன் ஒரு கராத்தே சண்டையை சிறப்பாகப் பண்ணியிருப்பார்.

மாறாக அதையொட்டி வந்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் இரட்டை வேடங்களில், தமிழ் ஜேம்ஸ்பான்ட் படத்துக்கேயான அமைப்புடன் (கலை இயக்குநர் ஏ.செல்வராஜ்) போடப்பட்ட, வில்லன் குகை செட்டுக்குள்ளேயே போய், நம்பியாரை அடித்துத் துவைப்பதை நன்றாகச் செய்திருப்பார்.

இரட்டை வேடத்தில் வித்தியாசம் காட்டி நடிப்பது அவருக்கு கை வந்த கலை.

‘கண்ணன் என் காதலன்’ புது விதமான கதை.

“வழக்கமாக இந்த மாதிரிப் படங்களில் எம்.ஜி.ஆர் மட்டுமே இருப்பார். இதில் கதையும் இருக்கிறது” என்று தன் பாணியில் விமர்சனம் எழுதி இருந்தது குமுதம். அது உண்மைதான். அதை உணர்ந்து எம்.ஜி.ஆர் நடித்திருப்பார்.

புதிய பூமி, கணவன் படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. ‘கணவன்’ எம்.ஜி.ஆரின் கதை என்று போடுவார்கள். அது உண்மை இல்லை. கணவன் படத்தில் ‘இரும்பு மனுஷி’ ஜெயலலிதாவை அப்போதே காண முடியும்.

முதல் பாதியில் arrogant ladyயாக ’உண்மையாக’ நடித்திருப்பார். எம்.ஜி.ஆர்க்கு அன்பால் திருத்துகிற வழக்கமான பாத்திரம்.

அவரது நூறவது படமான ‘ஒளிவிளக்கு’ வித்தியாசமான கதையமைப்பு கொண்ட படம். பூல் அவுர் பத்தர் இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பு.

இந்திப் படத்தில் தர்மேந்திரா திருடனாகவும், ரவுடி போலவும் நடித்த பாத்திரத்தை, எம்.ஜி.ஆர் தன் இமேஜ் கெடாதவாறு தமிழாக்கி நடித்திருப்பார். நல்ல கனமான பாத்திரம்.

முன் பகுதியில் வழக்கமான துறுதுறுப்புடன் செய்திருப்பார். பிற்பகுதியில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பார்க்கப் பார்க்கப் பிடிக்கிற படமாக இருந்தது. ஆனாலும் வெள்ளிவிழாப் படமாக அமையவில்லை.

அடுத்து வந்த ‘காதல் வாகனம்’ பதினைந்தே நாளில் தேவரின் அவசரத்திற்காக, கோபமாக நடித்துக் கொடுத்த படம். அந்த அள்ளித் தெளித்த கோலம் நன்கு தெரியும்.

இருவருக்குமிடையே விரிசல் வந்த படம். அப்புறம் மூன்று வருடம் கழிந்து ‘நல்ல நேரம்’ வந்தது. அது இருவருக்குமே நல்ல நேரம்.

1969இல் இரண்டே படம் ’அடிமைப்பெண்’, ’நம்நாடு’. அடிமைப்பெண் சொந்தப் படம். பிரம்மாண்டமான தயாரிப்பு.

ஆரம்பக் காட்சிகளில், தனிமைச் சிறையில் வளர்க்கப்பட்டவராக, நாகரிகம் இல்லாத ஆதி மனிதனாக நடிப்பதில் திறமை முழுக்க வெளிப்படும்.

என்னைப் பொறுத்து திரைக்கதை, வசனத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், அசோகனை அடக்கி வாசிக்க வைத்திருந்தால் படம் இன்னொரு நாடோடி மன்னனாக வந்திருக்கும். ஆனாலும் பெரும் வெற்றி பெற்றது.

‘நம் நாடு’ முதல் பாதி பிரமாதமான படம். நகராட்சி மன்ற குமாஸ்தாவாக, அண்ணனுக்கு அடங்கிய பிள்ளையாக இயல்பாக நடித்திருப்பார். பின் பாதியில் கொண்டாட்டமான நடிப்பில் அவரை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்திருப்பார்.

1970 பொங்கலுக்கு மாட்டுக்கார வேலன். வெள்ளி விழாப்படம். இரட்டை வேடம். படத்தில் ஒரு காட்சியில் வடை, பாயாசம், பெரிய லட்டு, கட்டித் தயிர் உள்ளிட்ட முழுச் சாப்பாட்டை, இலையில் போடப் போட வயித்துக்கு வஞ்சகமில்லாமல் தின்பார்.

தன் இரண்டு பாத்திரங்களிலும் அப்படியே வஞ்சகமில்லாமல் நடித்து, சண்டைக் காட்சிகளிலும் தூள் பரத்தியிருப்பார். இதே இயக்குநர், இதே தயாரிப்பாளர் பின்னால் தயாரித்த ’ராமன் தேடிய சீதை’ இந்த அளவுக்கு அமையவில்லை.

1970இல் என் அண்ணன், தேடிவந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், தலைவன் என நிறைய வந்தன. தேடி வந்த மாப்பிள்ளையில் நல்ல நகைச்சுவைப் பாத்திரமாக நடித்திருப்பார்.

சபாஷ் மாப்பிள்ளே படத்திற்கு குமுதம் எழுதின விமர்சனத்தில் “தனக்கு நடிக்கத் தெரியாது என்று சொன்னவர்கள் தலையில் எம்.ஜி.ஆர் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார்” என்று எழுதியிருந்தார்கள்.

இதற்கும் அது பொருந்தும்.. இதில் டான்ஸ் மாஸ்டராக மாறு வேடத்தில் வந்து அமர்க்களப்படுத்துவார்.

பொதுவாகவே இப்படி மாறு வேஷங்களில் நடிக்கும் போது அவரின் நடிப்பு உன்னதமாக இருக்கும்.

மலைக்கள்ளன், குலேபகாவலி, படகோட்டி போன்ற படங்களில் அற்புதமாக இருக்கும்.

ஒரு வேளை அவரது வழக்கமான பிரகாச முகம் மாறு வேடத்தில் ஒளிந்து கொண்டு, அது கலையும் போது புது நடிகனாகத் தெரிவதாலோ என்னவோ.

‘படகோட்டி’ படத்தில் “கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு” பாடலில் வளையல்காரராக வந்து செட் பூராவும் துள்ளிக் குதித்து கலக்குவார்.

‘எங்கள் தங்கம்’ கலைஞருடன் இணைந்து பண்ணிய படம். அரசியல் வாடை தூக்கலாக இருக்கும்.

இதிலும் உச்சிக் குடுமி பாகவதர் போல வந்து கதாகாலட்சேபம் செய்யும் காட்சிதான் படம் ஓடுவதற்கே முக்கியக் காரணம் என்றால் மிகையில்லை.

படத்தின் வெற்றி விழாவிற்கு ஷீல்டே ‘எம்.ஜி.ஆர் பாகவதர்’ உருவம்தான்.

1971இல் ‘ரிக்ஷாக்காரன்’ மாபெரும் வெற்றிப் படம். ரிக்ஷா ஓட்டுவதற்கு தனிப் பயிற்சி எடுத்தார், ரிக்ஷா பந்தயத்தில் அவரே ஓட்டினார் என்பார்கள். ஆனால் ரிக்சாவில் அமர்ந்தபடி டூப் போடாமல் ஒரு சண்டை போடுவார். கிளாசிக் ஆன சண்டை.

ஆர்.எம்.வீ படமென்றால் திருப்பங்கள் நிறைய இருக்கும் இதுவும் அப்படித்தான். இதில்தான் ‘இயல்பான நடிப்பிற்காக’ அவருக்கு ’பாரத்’ பட்டம் கிடைத்தது.

அடுத்து குறிப்பாகச் சொல்ல வேண்டிய படம் ‘நான் ஏன் பிறந்தேன்’.  இதில் இரண்டு குழந்தைகளின் அப்பாவாக நடிப்பார். அப்படி நடித்த இரண்டாவது படம்.

வேட்டைக்காரன் படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிப்பார். அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுப் பெற்ற படம்.

கதாநாயகியுடன் ஆடிப்பாடி ஓடுகிற லவ் சீனெல்லாம் கிடையாது. கே.ஆர்.விஜயாவால் அப்போது ஓடவும் முடியாது. (செகண்ட் ஹீரோயினுடன் ஒரு கனவு டூயட் உண்டு) இதை இயக்கிய எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கிய ‘அன்னமிட்ட கை’ அவரது கடைசி கருப்பு வெள்ளைப் படம். அதிலும் நன்றாகச் செய்திருப்பார்.

‘இதய வீணை’ கட்சியை விட்டு விலக்கிய பின் வந்தது. அந்த அரசியல் அங்கங்கே ஊடாடும். ஒரு ஃபேமிலி டிராமாவுக்கான நடிப்பில் தன்னை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

கட்சியை விட்டு நீக்கிய பின் வெளிவந்த படத்தில் மகத்தான வெற்றி பெற்றது ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

இரட்டை வேடம். விஞ்ஞானியாக வரும் போது அதிகம் சிரிக்கவே செய்யாமல், தம்பி பாத்திரத்தில் இருந்து வித்தியாசப்படுத்தி நடித்திருப்பார். கூர்மையாகக் கவனித்தால் நுணுக்கம் தெரியும். எங்க வீட்டுப் பிள்ளையின் வெற்றிக்கும் இதுவே காரணம்.

உ.சு.வாலிபனில் நடிப்பை விட, இயக்குநர், எடிட்டர் ஆக அவரின் செயல்பாடு சினிமா அறிந்தவர்களை வியக்க வைக்கும். அதனையொட்டி வந்தவற்றில் ‘நினைத்ததை முடிப்பவன்’ இரட்டை வேடப் படம். இதில் திருடனாக வருகிற ரஞ்சித்தின் ஸ்டைல் அற்புதம்.

ஸ்ரீதருடன் இணைந்த வெள்ளி விழா படம் உரிமைக்குரல். இதில், “அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு அன்னக்கிளியாட்டம் பாடிக்கொண்டு நித்தம் வருவாளோ அல்வாத் துண்டு” என்று பாடியும்,

“காத்தாட்டம் ரேக்ளாவில் பறந்தோடும் வீரன் என்னப் பார்த்தாலே தெரியாது படுவேலைக்காரன்,” என்று படு வேலை காட்டியும் கதாநாயகி லதாவைப் பாடாய்ப் படுத்தும் காட்சிகளில் தனக்கு வயது 57 என்று அவரே நம்ப மாட்டார். 17 வயது போலக் கொண்டாட்டமாடுவார். அதற்காகவே வெள்ளி விழா கண்டது.

சரித்திரப் படங்களின் மூலம் அறிமுகமானவரின் கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டிய’னும் சரித்திரப் படம். பந்துலு இயக்கி பாதியில் இறந்து விட்ட பின் அவரே இயக்கினார். ஆனால், அதற்கு முந்திய படமான ‘மீனவ நண்பன்’ போல வெற்றி பெறவில்லை.

எந்த நடிகராக இருந்தாலும் அவரவருக்கு இயல்பான நடிப்பு, பாணி என்பதை மீறிச் சில படங்களில் மிகச் சிறப்பாக நடிக்க வாய்க்கும்.

படம் தயாரிப்பவர்களும் ஒவ்வொரு நடிகரிடமும், அவர்களது ரசிகர்கள் விரும்பும் ‘டிரேட் மார்க்’ நடிப்பையே எதிர் பார்ப்பார்கள். அவரவர்களுக்கான கதையும் அப்படித்தான் இருக்கும்.

இதற்கு எம்.ஜி.ஆர். விதி விலக்கல்ல. ஆனாலும் எம்.ஜி.ஆரை நடிகர் என்று ஒத்துக் கொள்வதே பாவம் என்று நினைக்கிற சிலரின் மேட்டிமைத் தனத்தை நினைத்து அனுதாபப் படத்தான் முடியும்.

ஏனெனில் அவர் சினிமாவில் நிறையச் சாதித்தவர். அவர் நினைத்ததை முடித்தவர், முடிந்ததைச் சாதித்தவர்.

-கலாப்ரியா

நன்றி: அந்திமழை: மார்ச் 2010 இதழ்

10.03.2022 12 : 30 P.M

You might also like