எதிர்க் கட்சிகள் இல்லாத இந்தியா?

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கிறது!

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வெளியில் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

பஞ்சாப் நீங்கலாக மற்ற இடங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்துக் கணிப்புகளும் வெளிவந்து கட்சியினரிடையே எதிர்பார்ப்புகளை கிளறிவிட்டன.

உ.பி., உத்தராகண்ட், மணிப்பூரில் பாஜகவுக்கு சாதகமான நிலையும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பும், கோவாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நெருக்கமான போட்டி நிலவுவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

ஐந்து மாநில தேர்தல்கள், அடுத்து சில மாதங்களில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தல், துணைத் தலைவர் தேர்தல் போன்றவற்றில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

விவசாயிகள் நீண்ட போராட்டத்தின் விளைவாக உ.பி.யில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என அரசியல் களத்தில் பேசப்பட்டது.

ஆனால் கருத்துக் கணிப்புகள் அக்கட்சிக்குச் சாதகமாக வெளிவந்தன.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் ஒன்றில்கூட காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி ட்விட்டர் மூலம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மனதார ஏற்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு  வாழ்த்துகள். தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த தொண்டர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் நன்றிகள்.

இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அளவில் இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் தனது தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

கோவா மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கரை வீழ்த்தியுள்ளார் பாஜக வேட்பாளரான அடனாசியோ மான்செரேட்.

பனாஜி சட்டப்பேரவை தொகுதியில் கட்சியில் இடம் வழங்காததால், சுயேட்சையாக போட்டியிட்டார் உத்பால். பாஜக வேட்பாளர் அடனாசியோ, வெறும் 716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

“தேர்தல் முடிவுகளிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இனி காந்திகளின் தலைமை காங்கிரஸ் கட்சியில் வேலைக்கு ஆகாது என்பதுதான் அது. அவர்கள் இனி கட்சியை வழிநடத்தும் சக்தியாக இருக்கப்போவதில்லை.

அவர்களால் தேர்தலில் கட்சியை கரை சேர்க்கமுடியாது என்பதை இந்த முடிவுகள் தெளிவாக விளக்குகிறது” எனக் கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தற்போது அங்கு முதலமைச்சராக இருக்கும் சரண்ஜித் சிங் 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளார்.

பஞ்சாப்பின் முன்னாள் முதலமைச்சரும் சிரோமி அகாலிதளம் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து மற்றும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் தங்கள் தொகுதிகளில் தோல்வியை தழுவியிருக்கின்றனர்.

அகாலிதளம் சார்பில் களம் கண்ட பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோரும் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.

வெற்றி உறுதியானதை தொடர்ந்து பஞ்சாப்பில் பகத் சிங் பிறப்பு கிராமத்தில் பதவியேற்பு விழா ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு முதல்வராக பொறுப்பேற்கவுள்ள பகவந்த் மான் நன்றி தெரிவித்துள்ளார். அவர் ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நடிகராக இருந்தவர்.

“தேர்தலில் வெற்றிபெற்ற காரணத்துக்காக, முதல்வரின் புகைப்படத்தை எல்லா இடங்களிலும் வைக்கவேண்டும் எனச் சொல்லமாட்டோம். எல்லா இடங்களிலும் இனி அம்பேத்கர் மற்றும் பகத் சிங் படங்கள்தான் வைக்கப்பட வேண்டும்.

அதையே தொண்டர்களுக்கு சொல்ல விரும்புகிறோம். இன்னும் ஒரு மாதத்தில், பஞ்சாப்பில் உண்மையான மாற்றத்தை, நீங்கள் எல்லோரும் பார்ப்பீர்கள்!” என்று மனந்திறந்துள்ளார்.

இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் தனிப் பெரும் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, தற்போது மிகவும் வலுவிழந்து காணப்படுவது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இந்தியாவில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.

நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 31 சட்டப் பேரவைகளில், காங்கிரஸ் கட்சி 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

சத்தீஸ்கர், ராஜஸ்தானில் மட்டுமே அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் முதல்வர்களாக உள்ளனர்.

அதிலும் நடந்துமுடிந்த தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 7.53 சதவிகிதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம், 2017-ல் 6.3 சதவிகிமாக குறைந்தது.

இந்த நிலையில் தன் தேர்தல் களத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

சிறு மாநில கட்சியாக உருவாகியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும்  மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

தேசிய கட்சிகளின் காலம் முடிவுக்கு வரும் காலத்தில் மாநில கட்சிகள் பெரும் நம்பிக்கையளிப்பதாக மாறிவருகின்றன.

அதற்கான சாட்சியாக ஆம் ஆத்மியின் வெற்றி தேர்தல் வியூக வகுப்பாளர்களால் பார்க்கப்படுகிறது. ”ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாறியுள்ளது. நாட்டில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி மாறும்” என்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா.

விவசாயிகள் போராட்டம், பிரதமர் மோடி எதிர்ப்பு, காங்கிரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த முதல்வர் வேட்பாளர் என பஞ்சாப்பில் மாறுபட்ட புது யுத்திகளை வெளிப்படுத்தி பரபரப்பு நிலவிவந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை படுமோசமாக இழந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “இனி புதிய இந்தியாவை நாம் படைப்போம். 75 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்சி நடந்துள்ளது” என்று மகிழ்ச்சி பொங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.

உண்மையில் புரட்சிதான். ஆனால் காங்கிரஸ் கட்சி பலத்தை இழந்துவரும் இந்த காலகட்டத்தில், நாட்டில்  வலிமையான ஒரு எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகுமோ என்று சந்தேகமும் நமக்குள் எழத்தான் செய்கிறது.

பா.மகிழ்மதி

11.03.2022 10 : 50 A.M

You might also like