கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்ட நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது.
கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை முதல் தொடர் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 10 மணி முதல் 3 மணி வரையிலும், மக்களவை 4 மணி முதல் 9 மணி வரையிலும் செயல்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 8-ம் தேதி இத்தொடர் முடிகிறது.
இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் சந்தித்து, இருக்கைகள் ஒதுக்குவது குறித்து ஆலோசித்தனர்.
இதைத் தொடர்ந்து, 2-வது தொடரில் மக்களவை, மாநிலங்களவை ஒரே நேரத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அவைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு தொடங்கும். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பயன்படுத்திய இருக்கைகளில் அமர்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.