மக்கள் மனங்களில் வாழும் கர்னல் ஜான் பென்னி குவிக்!

மூன்றாண்டுகள் தனது அயராத முயற்சியாலும் பிரிட்டிஷ் ராணுவத்தினரின் கடின உழைப்பாலும் மடமடவென எழுந்து வந்த முல்லைப்பெரியாறு அணை பாதியிலேயே திடீரென ஏற்பட்ட காட்டு வெள்ளத்தால் அடித்துப்போனதைப் பார்த்து நிலைகுலைந்து போனார் கர்னல் பென்னி குவிக்.

இப்படி ஒரு முறை மட்டும் மழை வெள்ளத்தால் அணை உடைந்து போனால் பரவாயில்லை.. ஐந்து முறை உடைந்து போனது. அதிக உயிரிழப்பும் ஏற்பட்டது.

நிறைய தொழிலாளர்கள் அணை கட்டும் வேலையிலிருந்து ஓடிப்போன பின்னும் நிறைய விபத்துக்கு பின்னரும் புதிய தொழிலாளர்களை கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அணையைக் கட்டி முடித்த அவரின் மன உறுதியை நம்மால் வியக்காமல் இருக்க இயலாது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பொழியும் மழை நீரெல்லாம் கேரள பகுதியில் யாருக்கும் பயனற்று அரபிக்கடலில் கலப்பதை எண்ணி மனம் கலங்கினார் கர்னல்.

அத்தண்ணீரை மலைக்கு வடபுறமாக திருப்பி விட்டால் வறண்ட தமிழக பகுதிகள் பயன்பெறும் என்ற நன்னோக்கில் ஒரு திட்டம் ஒன்றை போட்டு அரசின் ஒப்புதலும் நிதியும் பெற்று அணை கட்ட ஆரம்பித்தவருக்கு சொல்லொணா இன்னல்கள் தாங்கொணாத் துயரங்கள்.

நல்லவர்க்கு தானே எப்பொழுதும் சோதனைகள் சூழும்!

இன்ஜினீயர் பென்னி குவிக் எங்கோ இலண்டனில் செல்வச் சீமானாய் வாழ்ந்தவர், இந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈரத்தை தன் நெஞ்சில் தேக்கி இந்த அணையை கட்ட ஆரம்பித்தார்.

இயற்கையை நேசிப்பவர்க்கு மனித இனத்தை மதிப்பவர்க்கு இருந்த உந்து சக்தியே அவரை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு சென்றது.

விஷப்பூச்சிகள், காட்டு விலங்குகள், கரடுமுரடான நில அமைவிடம் இவற்றைத் தாண்டி அணை வளர்ந்தது. இந்த அணை கட்டும் பணி 1895 ல் செவ்வனே நிறைவு பெற்றது.
பிரிட்டிஷ் அரசு இவரை பாராட்டி கௌரவித்தது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் உச்சியில் கட்டப்பட்ட இவ்வணை மலைக்கு மகுடம் செய்தாற்போல் இருக்கிறது. அங்குள்ள மக்களின் பசிக்கு சோறு தருகிறது.

லோயர் கேம்ப் என்ற இடத்தில்தான் இந்நீர் தரையிறங்குகிறது. அங்கிருந்து தான் முல்லை பெரியாறு தனது பயணத்தை தொடர்கிறது.

அரபிக்கடலில் கலந்த தண்ணீரை, தென்தமிழகம் நோக்கி திருப்பிக் கொண்டுவந்து, முல்லைப்பெரியாறு அணை கட்டி, தேக்கி வைத்து, அதனால் தென்தமிழகத்தில் விவசாயம் செழிக்க வைத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் ஜான் பென்னி குவிக்குக்கு அங்கே மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

தென்தமிழக மக்களால் போற்றப்படும் கர்னல் ஜான் பென்னி குவிக்கின் நினைவுநாள் (09.03.1911) இன்று.

You might also like