பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கிராமம். பேருந்திலிருந்து அண்ணாவும் உடன் ஓரிரு தோழர்களும் இறங்குகின்றனர்.
காலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவரிடையே உரையாடிவிட்டு, மாலைக் கூட்டத்துக்காக ஆடுதுறை வந்திறங்கியிருக்கிறார்.
பேருந்து நிலையத்தில் வாடகை சைக்கிள் கடை வைத்திருக்கும் கட்சித் தோழர், அண்ணாவை அழைத்துச் சென்று கடையில் அமர்த்தி, சர்பத் வாங்கிக் கொடுக்கிறார்.
அன்றைய கூட்ட அமைப்பாளர் மணி எங்கே எனக் கேட்க கடைத் தோழர், “இன்னைக்கு மணியோட கழனியில் கதிரடிப்பு, களத்துமேட்டில இருப்பார். ஆனா மேடையெல்லாம் நேத்தே போட்டாச்சு அண்ணா” என்கிறார்.
“சரி, வாப்பா மணியை போய் பார்ப்போம்” என அண்ணா அழைக்கிறார்.
சைக்கிள் கடைத் தோழர் அண்ணாவை சைக்கிள் கேரியரில் அமரவைத்துக் கழனி நோக்கி விரைகிறார்.
அவர்கள் கழனியை நெருங்கும்போது, மணி களத்தில் நெல்தாள் வாங்கி அடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.
அண்ணா களத்துமேட்டை அடையும்போது தான் அவரைக் கவனிக்கிறார் மணி.
பதறிப்போய், “என்ன அண்ணா… நீங்க போய் இங்க வந்திருக்கீங்க!” என்கிறார்.
தொடர்ந்து “வாங்கண்ணா ஊருக்குள்ள போவோம்” எனப் புறப்படுகிறார். “பரவாயில்லப்பா, வேலைய முடிச்சிட்டுப் போலாம்” என அங்குள்ள கட்டிலில் அமருகிறார் அண்ணா. வேலை தொடருகிறது.
மெல்ல கட்டிலில் சாய்ந்து, படுத்துத் தூங்குகிறார்.
மணி அவரை எழுப்பும்போது அண்ணாவின் கூட்டத்துக்கான அறிவிப்பொலி கேட்கிறது. அது அந்த சைக்கிள் கடைத்தோழரின் குரல். மணியின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கூட்டத்துக்குக் கிளம்புகிறார் அண்ணா.
போகிற வழியில் மணியின் கிராமக் கூட்டுறவுச் சங்க நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்கிறார்.
மணியிடம் கூட்டுறவுச் சங்கங்கள் கும்பகோணம் வட்டாரத்தில் வேகமாக உருவாகி வருவதாக சொல்கிறார். மணி பின்னாட்களில் கோ.சி.மணி என்று அறியப்பட்டார். தமிழக அமைச்சர்களில் ஒருவரானார்.
(நன்றி – திரு.சுபகுணராஜன், அந்திமழை, பிப்ரவரி இதழ்-2021.)