சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டார்.
நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கொலையில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர், தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சாதி ஆணவப் படுகொலையான இந்தச் சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்டு 30-ம் தேதி விசாரணையும் நடைபெற்றது.
இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை கடந்த 2019 மே 5-ந் தேதி முதல் மதுரை எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணையில், 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம் செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்திருந்தார்.
அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே நீதிபதி கூறியிருந்த நிலையில் தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஓமலூர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கோகுல்ராஜ் வழக்கில் 2-வது குற்றவாளியான யுவராஜின் ஓட்டுநர் அருண் யுவராஜுக்கு ஆய்வு முழுவதும் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளான பிரபு, கிரிதர் ஆகிய இருவருக்கு 5 ஆண்டு கடுங்கால தண்டனை விதித்தும், ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விபரம்:
* கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு ஆயுள் முழுவதும் சிறை.
* யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு.
* குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
* சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
* பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்கால் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு.