நடிக்க வருவதற்கு முன்பு பலதரப்பட்ட சோதனைகள் சந்திரபாபுவுக்கு.
அதைப் பற்றி அவரே சொல்லியிருப்பதைக் கேளுங்கள்.
“ஒரு சமயம் வாழ்க்கை வெறுத்துப் போய் விஷம் வாங்கி நீரில் கலந்து குடித்தேன். கண் விழித்தபோது ராயப்பேட்டை மருத்துவமனை. தற்கொலை முயற்சி வழக்கு.
நீதிமன்றத்திற்கு அழைத்துக் கொண்டு போய் என்னை நிறுத்தினார்கள்.
“உன் மனதில் ஏதோ குறை என்று சொல்கிறாயே… என்ன என்று சொல்லேன்” – கேட்டார் நீதிபதி.
நான் என் டவுசர் பாக்கெட்டிலிருந்து நெருப்புப் பெட்டியை எடுத்தேன்.
ஒரு குச்சியைப் பற்ற வைத்து என் கையைச் சுட்டுக் கொண்டேன்.
“இதே மாதிரி தான்.. நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, சூடு எப்படி இருக்கும் என்று அதை உணர்த்த முடியாது. அதை அவரவர்கள் தான் உணர முடியும்” – சொன்னேன்.
சிரித்துவிட்டுச் சொன்னார் நீதிபதி.
“முதல் முறை என்பதால் உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். மறுபடியும் நீ வந்தால் கண்டிப்பாகக் கடுமையாகத் தண்டிப்பேன்”
“அடுத்த தடவை நிச்சயமாக உங்களிடம் வர மாட்டேன்.
இரண்டாவது முயற்சி நடந்தால் அது வெற்றிகரமாக முடியும்.” என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்கி நடந்தேன்”
– ‘நான் ஒரு…’ என்ற தலைப்பில் ஒரு வார இதழுக்காக நடிகர் சந்திரபாபு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.
பிறகு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துப் பிரபலமான பிறகு, 1960-ல் அவர் நடித்த ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தில் அவர் பாடிய கவிஞர் கண்ணதாசனின் பாடல்:
“பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே…
(பிறக்கும் போதும்…)
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
….இயற்கை சிரிக்கும்
(பிறக்கும் போதும்…)
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்
…பெரும் பேரின்பம்
(பிறக்கும் போதும்…)