– உச்சநீதிமன்றம் காட்டம்
ரஷ்யா நடத்தி வரும் போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கக்கோரி பாத்திமா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் வழக்கறிஞர், “உக்ரைனின் எல்லைப் பகுதியான ருமேனியாவில் இந்தியர்கள் 6 நாட்களாக சிக்கியுள்ளனர். அதில் பெண்கள்தான் அதிகம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “இந்த விவகாரத்தில் தற்போதைய நிலவரம் என்ன? எத்தனை இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அளித்த விளக்கத்தில், “போரில் சிக்கியுள்ள இந்தியர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. அவர்கள் தற்போது ருமேனியாவில் உள்ளனர். இன்று இரவு தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.
உக்ரைனின் ஒடேசா நகரில் சிக்கியிருந்த மாணவர்கள் அனைவரும் ருமேனியா வந்து விட்டனர். அவர்களும் சிறப்பு விமானங்கள் மூலமாக நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
உக்ரைனில் இருந்து இதுவரையில் 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 7 ஆயிரம் பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, “இந்த விவகாரத்தில் நடப்பதைப் பார்த்தால், கடந்த காலத் தவறுகளில் இருந்து அரசு பாடம் கற்கவில்லை என்று தெரிகிறது. ஆனால், இது போர்க் காலத்தில் நடக்கும் சம்பவம் என்பதால், நாங்கள் எதையும் கூற விரும்பவில்லை.
ஆனால், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டும்படி உள்ளது” எனக் கூறி விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
05.03.2022 1 : 30 P.M