விலங்கு – அப்பாவித்தனத்தின் மறுமுகம்!

ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பதுபோல, ஒரே மனிதரிடம் குடி கொண்டிருக்கும் ஒன்றுக்கொன்று முரணான குணங்களைப் பற்றி பேசுகிறது ‘விலங்கு’.

கைது செய்ய போலீசார் பயன்படுத்தும் காப்பு என்றும், மனித உருவில் நடமாடும் மிருகம் என்றும், இந்த டைட்டிலுக்கு இரு வேறு அர்த்தங்களைச் சொல்லும் அளவுக்கு இதன் கதை அமைந்திருக்கிறது.

விமல், இனியா, பாலசரவணன், முனீஸ்காந்த், மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர் உட்பட பலர் நடித்திருக்கும் இந்த வெப்சீரிஸ் ஜீ5 தளத்தில் காணக் கிடைக்கிறது. ‘ப்ரூஸ்லீ’ பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இதனை இயக்கியிருக்கிறார்.

தலை தேடும் படலம்!

திருச்சி அருகேயுள்ள வேம்பூர் எனும் ஊரிலுள்ள காவல் நிலையத்தைச் சுற்றியே மொத்தக் கதையும் நகர்கிறது.

வேம்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கொடிலிங்கம் (ஆர்.என்.ஆர்.மனோகர்) தன் பேத்தி காதுகுத்து விழாவுக்குச் செல்கிறார்.

மனைவி ரேவதி (இனியா) நிறைமாத கர்ப்பிணியாக வீட்டில் தனியாக இருக்க, ஒருநாள் முழுவதும் காவல் நிலையப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறார் சப் இன்ஸ்பெக்டர் பரிதி (விமல்).

அன்றைய தினம் அருகிலுள்ள காட்டில் முழுக்க கழுத்து அறுபட்டு சிதைந்த நிலையில் ஒரு பிணம் கிடைக்கிறது. அந்த இடத்திற்கு டிஎஸ்பி வந்து சென்ற நிலையில், திடீரென்று அறுபட்ட தலை காணாமல் போகிறது.

அதனைத் தேடிக் கண்டுபிடிக்காவிட்டால் வேலைக்கே ஆபத்து என்பதால் பரிதி திக்பிரமை பிடித்தவராக இருக்க, கீழே தடுக்கி விழுந்த ரேவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவல் வருகிறது.

ஒருபக்கம் காதல் மனைவியின் பிரசவ வேதனை, இன்னொரு பக்கம் காணாமல் போன தலை கிடைக்க வேண்டுமே என்ற பதற்றம், இவ்விரண்டுக்கும் நடுவே பரிதி அல்லாடும் சூழலில் முனியாண்டி கோயில் சாமியாடியைக் கண்டெடுக்கும் விழாவில் இன்னொரு பிணம் கிடைக்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டு பிணங்கள் என்ற திசையில் காவல் துறை விசாரணை நீள, அவ்வட்டாரத்தில் தொடர் கொலைகளைச் செய்த ஒரு கொலைகாரன் சிக்குகிறார்.

யார் அவர், இந்த கொலைகளுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பதைச் சொல்வதுதான் ‘விலங்கு’ மீதிப் பாதியின் பலம்.

தலை இல்லாத பிணத்தை வைத்துக்கொண்டு போலீசார் என்ன பாடு படுவார்கள் என்பதைக் காட்டியதில் வித்தியாசப்படுகிறது இந்த வெப்சீரிஸ்.

ஸ்லோமோஷன் த்ரில்லர்!

காணாமல் போன எம்.எல்.ஏ. தம்பி, பக்கத்து ஸ்டேஷன் எஸ்.ஐ.யின் காணாமல் போன லிஸ்டில் இருக்கும் ஒரு பணக்காரர், மூன்றாவதாக டாஸ்மாக் பாரில் மது அருந்திய வெளியூர் நபர் என்று மூன்று நபர்களுக்கும் கிடைத்த 2 பிணங்களுக்குமான தொடர்பை வைத்து இன்னும் கொஞ்சம் புதிர் போட்டிருக்கலாம்.

ஆனாலும், கடைசி 3 எபிசோடுகளில் உளவியல் பார்வையில் கொலையாளியை அணுகியதோடு நின்றிருக்கிறார் இயக்குனர்.

வீட்டை திறந்து திருடும் கும்பல் கதையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது குறித்த காட்சிகள் குறைவு.

திருட்டு நகைகளை போலீசார் கொண்டு வரும்போது மட்டுமே, அப்பகுதிக்கான நியாயம் ஓரளவுக்கு தென்படுகிறது. போலவே, ட்ரெய்லரில் இடம்பெற்ற முனீஸ்வரன் கோயில் புதையல் பற்றிய விளக்கம் திரைக்கதையில் அறவே இல்லாதது பெரிய மைனஸ்.

போலவே, கிச்சாவின் மனைவி ஏன் வீட்டை விட்டு ஓடிப்போனார் என்பதற்கான காரணத்தில் தெளிவில்லாததால், அப்பாத்திரத்தின் அடிப்படையே கேள்விக்குறியாகிறது.

ஒரு வழக்கில் தனிப்படை அமைக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த சாதி என்று பார்க்கும் வழக்கத்தைக் காடி காவல் துறையில் நிலவும் சாதீயத்தைச் சுட்டுகிறது ‘விலங்கு’.

அந்த கேட்டகிரி, இந்த கேட்டகிரி என்று சாதியை மறைமுகமாகச் சொன்னாலும் மொத்தக் கதையிலும் அதன் பங்கு பெரிதாக இல்லை.

இதையெல்லாம் தாண்டி போலீஸ் பணியே கதியென்றிருக்கும் விமலையும், பிரசவத்தில் அவர் இருக்க வேண்டுமென்று விரும்பும் காதல் மனைவியாக இனியாவையும் காட்டியதில் முக்கால்வாசி வெற்றியைச் சுவைத்திருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.

குற்றவாளி யார் என்ற தேடுதலின் இடையே, ஒரு விசாரணை அதிகாரியின் தனிப்பட்ட வலியையும் பாசப்பிணைப்பையும் காட்டியிருப்பது கதையை உயிரோட்டமிக்கதாக ஆக்கியிருக்கிறது.

ஒரு ‘க்ரைம் த்ரில்லரு’க்கான பரபரப்பைத் திரையில் நிரப்பியிருக்கிறது தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு. அதற்குப் பக்கபலமாக இருக்கிறது கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு.

ஆனாலும், ‘ஸ்லோமோஷன் திரைக்கதை’யோ என்று தோன்றும் உணர்வை மட்டுப்படுத்த இயலவில்லை.

காட்சிகளின் தன்மைக்கேற்றவாறு ‘த்ரில்’ கூட்டுகிறது அஜீஷின் பின்னணி இசை. ரேஷ்மா பசுபுலேட்டியைக் காட்டும் காட்சிகளுக்கான இசையில் எள்ளல் அதிகமிருப்பது, ஒட்டுமொத்த திரைக்கதையின் போக்கையும் அடியோடு மாற்றுவதாக அமைந்ததை தவிர்த்திருக்கலாம்.

ஜி.துரைராஜின் கலையமைப்பும் பில்லா ஜெகனின் சண்டைக்காட்சி வடிவமைப்பும் ஒரு போலீஸ் விசாரணையைக் கண்ணால் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன.

‘கம்பேக்’ விமல்!

களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்த்தவர்களுக்கு திருப்தி தருகிறது இப்படைப்பில் விமலின் பங்கேற்பு. தெளிவான வசன உச்சரிப்பும் திரையிருப்பில் அவர் காட்டியிருக்கும் ஒழுக்கமும் ஆச்சர்யப்படுத்துகிறது.

ஆதலால், இதன் மூலமாக விமலின் ‘கம்பேக்’ நிகழ்ந்திருக்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம்.

தயாரிப்பாளராக இருந்த எஸ்.எஸ்.சக்ரவர்த்தி, இதில் டிஎஸ்பியாக வந்து ஆச்சர்யமூட்டுகிறார்.

ஆர்.என்.ஆர்.மனோகர், இனியா, ரேஷ்மா பசுபுலேட்டி உட்பட அனைவரும் சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

கிச்சாவாக வரும் ரவி அப்படியே குரு சோமசுந்தரத்தை நினைவூட்டுகிறார். அவருக்கு தமிழ் திரையுலகம் விதவிதமான பாத்திரங்களை வழங்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

இவர்களை எல்லாம் மீறி, ‘விலங்கு’ என்றவுடன் நினைவுக்கு வருமளவுக்கு அமைந்திருக்கிறது பாலசரவணன் நடித்துள்ள ‘கருப்பு’ பாத்திரம். ஹீரோவுடன் வந்து ‘ஒன்லைனர்’ ஜோக்குகளை ஒப்பிப்பார் என்ற நியதியை ‘அசால்டாக’ மீறியிருப்பது, எதிர்காலத்தில் வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் புறநகர் காவல் நிலையமொன்றில் ஒரு கொலை விசாரணை எப்படி நடக்கும் என்று காட்டிய விதத்தில் வேறுபடுகிறது ‘விலங்கு’. கூடவே ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதைக் கொலைவெறியோடு சொன்னதிலும் மிரட்டியிருக்கிறது.

தமிழில் ‘நவம்பர் ஸ்டோரிஸ்’க்கு பிறகு விறுவிறுப்பான த்ரில்லர் பார்த்த திருப்தியைத் தந்திருக்கிறது ‘விலங்கு’.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், வேறு மொழிகளில் இதன் டப்பிங் வெர்ஷன் படுபயங்கரமாக ‘ஹிட்’ ஆகியிருக்கக் கூடும். அந்த வகையில் ‘ஜஸ்ட் மிஸ்ஸிங்’ கேஸாயிருக்கிறது.

மற்றபடி, தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்த இடத்தைவிட்டு எழாமலிருக்கும் வகையில் கட்டிப்போடுவதால், ஒரு நல்ல த்ரில்லர் என்ற பாராட்டைப் பெறுகிறது ‘விலங்கு’.

-பா.உதய்

04.03.2022  10 : 50 A.M

You might also like