ஒரு திரைப்படம் உங்களின் இயல்பில் மாற்றம் ஏற்படுத்துகிறது என்றால், கண்டிப்பாக அது சிறந்த படைப்பு.
அது கலைப்படைப்பாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. பக்கா கமர்ஷியல் படத்தில் கூட இப்படியொரு சேதியை நீங்கள் பெற்றிருக்கலாம். ’பிச்சைக்காரன்’ தந்த இயக்குனர் சசி அப்படியொரு படைப்பாளிதான்.
என்னதான் கல் மனதுக்காரராக ஒருவர் இருந்தாலும் ’பிச்சைக்காரன்’ கிளைமேக்ஸில் கண்டிப்பாக கண்ணீர் விட்டு கதறத்தான் வேண்டும்.
ஏற்கனவே இரண்டொரு முறை அப்படியொரு அனுபவத்தைக் கொடுத்தால் கண்ணில் நீர் பொங்காது என்று படம் முழுக்க நகைச்சுவையையும் ஆக்ஷனையும் வன்மத்தையும் சமூக அவலங்களையும் பரப்பியிருப்பார்.
பிச்சைக்காரர்களின் உலகம்!
எச்சில் இரவுகள், நான் கடவுள் போன்ற படங்களில் பிச்சையெடுப்பவர்களின் உலகம் காட்டப்பட்டிருந்தாலும், அவற்றில் அவர்களது வெறுமையான வாழ்க்கைமுறையும் அதிலிருக்கும் அவல நகைச்சுவையும்தான் விரவியிருக்கும்.
மாறாக, அவர்களை மரியாதையோடு அணுகும் மனப்பாங்கை உருவாக்குவதற்கான மெனக்கெடல் இராது. இயக்குனர் சசியின் ’பிச்சைக்காரன்’ வேறுபடுவது அந்த இடத்தில்தான்.
பிச்சைக்காரராக வரும் மூர்த்தி பேசும் வசனங்கள் 100% பிச்சை போடுபவர்களைக் கிண்டலடிப்பவை.
‘இவங்க கொடுக்கற காசுக்கு நமக்கு ரெண்டு கண்ணும் அவிஞ்சிருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க’, ‘இதென்ன, இந்த பக்கம் ஒரு பூஸ்ட், அந்த பக்கம் ஒரு ஹார்லிக்ஸ் தொங்குது, இப்படியிருந்தா யார் பிச்சை போடுவா’ என்பது போன்ற வசனங்கள் கொஞ்சம் கூட நம்மை குற்றவுணர்ச்சி கொள்ள வைக்காது.
ஆனாலும், படத்தின் முடிவில் ’பிச்சையெடுப்பது பிழைப்பல்ல, அது ஒரு வாழ்க்கை முறை’ என்ற தத்துவம் போகிற போக்கில் சொல்லப்பட்டிருக்கும்.
ஆரோக்கியமாக, திடகாத்திரமாக இருப்பவர்கள் பிச்சையெடுத்து ஏமாற்றுவதை விட்டுவிட்டு உழைத்து வாழ்வதாக காட்டப்பட்டிருக்கும்.
இறுதிக் காட்சியில் ‘பிச்சை போடுறோமோ இல்லையோ அவங்களை காக்க வைக்க கூடாதுப்பா, நம்மாள எல்லாம் அப்படி ஒருநாள் கூட வாழ முடியாது’ என்ற வசனம் மூலமாக பிச்சையெடுப்பவர்களை அலட்சியமாகக் கருதும் மனோபாவத்தை உடைத்தெறிந்திருப்பார் சசி.
அதேபோல, தாய் பாசத்திற்கு நிகரான ஒன்று இந்த உலகில் கிடையாது என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்தியிருப்பார் காட்சிகளின் வழியாக.
அழ வைத்த சசி!
‘அண்ணாமலை’ படத்தில் ’உங்கப்பா கட்டுன வீட்டை இடிச்சுட்டாங்களாப்பா, என் கோயிலை இடிச்சுட்டாங்களாப்பா’ என்று மனோரமா கதறும் காட்சியை எப்போது பார்த்தாலும் என் கண்ணில் நீர் அருவியாகப் பொழிந்துவிடும். அப்போதெல்லாம், எளிய மனம் கொண்டவர்களின் இயல்பு இது என்றே தோன்றும்.
நகைச்சுவைக் காட்சிகளுக்கு சிரிப்பதும், ஆக்ஷன் காட்சிகளில் துடிப்பேறுவதும் எந்தளவுக்கு இயல்பானதோ, அது போலத்தான் சென்டிமெண்ட் காட்சிகளுக்கு அழுவதும்.. ’ஒரு படத்தைப் பார்த்துட்டு நானெல்லாம் அழவே மாட்டேன்’ என்று மார் தட்டிக்கொள்பவர்களைக் கண்டால், எனக்கு சிரிப்புதான் வரும்.
‘பிச்சைக்காரன்’ படத்தில் ரசிகர்களை அழ வைத்ததுதான் சசியின் மாபெரும் வெற்றி. 2016இல் வெளியான திரைப்படங்களில் இப்படம் ஒரு பிளாக்பஸ்டர். தமிழை விட, தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு அதிக வசூலை ஈட்டியிருக்கிறது.
ஆனாலும், இப்படத்திற்கான விமர்சனங்களில் பல ‘கழுவி ஊற்றும்’ ரகமாக அமைந்திருக்கின்றன. ‘திரைக்கதையிலும் கதையமைப்பிலும் நம்பகத்தன்மை இல்லை’ என்பது அவற்றில் பொதுவானதாக இருந்தது.
ஆங்கிலத்தில் ‘IF’ என்ற வார்த்தைக்கு ஒரு திரைப்படக் கதை பதிலளித்தாலே போதும்; அது மிகச்சிறந்த கமர்ஷியல் படமாக அமையும். எனக்குள் அடிக்கடி இந்தக் கருத்து வந்துபோனாலும், எங்கோ படித்தது என்பது மட்டும் நினைவிலிருக்கிறது.
ஒரு செல்வந்தன் தன் தாயின் உடல்நிலை குணமாக வேண்டுமென்ற வேண்டுதலை நிறைவேற்ற 48 நாட்கள் பிச்சைக்காரனாக வாழ்கிறான் என்பதுதான் ‘பிச்சைக்காரன்’ கதை.
இதனை நீங்கள் நம்பவில்லை என்றால், அந்த இடத்திலேயே இருக்கையை விட்டு எழுவதுதான் சரியானதாக இருந்திருக்கும்.
தற்போதைய வாழ்வில் எவ்வித ‘செண்டிமெண்ட்’களுக்கும் இடம் கிடையாது என்ற அபத்தமான நம்பிக்கையின் விளைவே இது.
ஷாரூக் நடித்தால்..!?
’பிச்சைக்காரன்’ தெலுங்கில் வெற்றி பெற்றதும், இது இந்தியில் ‘ரீமேக்’ செய்யப்படுகிறதா என்றறிய முயன்றேன். ஏமாற்றமே கிடைத்தது. அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், சல்மான் கான் போன்றவர்கள் கண்ணில் இப்படம் இப்போது வரை படவில்லை என்றே தோன்றுகிறது.
என்னைக் கேட்டால், இக்கதையில் விஜய் ஆண்டனியின் பாத்திரம் ஷாரூக்கானுக்கு பொருத்தமாக இருக்கும். வழக்கமாக கலகலப்பான பாத்திரங்களில் ஆர்ப்பாட்டமாக வந்து செல்லும் ஷாரூக்கை பார்த்தவர்களுக்கு இக்கதை நிச்சயம் வித்தியாசமாக இருக்கும்.
’பிச்சைக்காரன்’ படத்தில் பிச்சையெடுப்பவர்களின் உலகமாக சென்னை காட்டப்படும். இந்தியில் அந்தக் களம் மும்பையாக அல்லாமல் உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத், லக்னோ அல்லது வாரணாசியாக காட்டப்பட்டால், தற்போதுள்ள அரசியல் சூழலுக்கு இன்னும் ‘மைலேஜ்’ கூடும்.
தொடர்ச்சியான தோல்விகள், போதைப்பொருள் வழக்கில் மகன் கைது, தனது வணிக நிறுவனங்களில் நெருக்கடிகள் என்றிருக்கும் ஷாரூக்கானுக்கு ‘பிச்சைக்காரன்’ கதை பாந்தமாகப் பொருந்தும் (இன்று காலையில் ‘பிச்சைக்காரன்’ படத்தில் ஷாரூக் கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மீண்டுமொரு முறை தோன்றியதையும், இதே நாளில் இத்திரைப்படம் வெளியானதையும் பொருத்திப் பார்த்துவிட்டு ‘தற்செயல்’ என்று நகர முடியவில்லை).
எளிய உணர்தல்கள்!
‘பொம்பளைங்க நாங்க நீங்க போடுற டிசர்ட் ஜீன்ஸ் எல்லாம் போட்டுக்கறோம். உங்களுக்கு ஏண்டா எங்க நைட்டியைப் போட்டா கேவலமா தோணுது’ என்று ‘சிவப்பு மஞ்சள் பச்சை’யில் சித்தார்த்தை பார்த்து தீபா ராமானுஜம் கேட்பார்.
ஆணாதிக்க மனப்பான்மை பற்றி சித்தாந்தங்கள் பல சொல்லிப் புரிய வைப்பதைவிட, ஒரு சினிமாவின் வழியாக எளிய மனிதர்களிடம் ‘பெண்ணியம்’ பேசியிருப்பார் சசி.
‘பூ’ படத்தில் திருமணத்திற்கு முன்னர் உருகி உருகி காதலித்தவனின் வாழ்க்கை தற்போது அவலமாக மாறிவிட்டதே என்று அழும் மனைவியை எவ்வித வெறுப்புமின்றி அரவணைப்பான் அவளது கணவன்.
’டிஷ்யூம்’ படத்தில் குள்ளமான உருவமுள்ளவர்கள் இச்சமூகத்தின் மீது வன்மத்தைக் காட்டுவதற்கான நியாயத்தைச் சொல்லியிருப்பார்.
அதேபோல, ’பிச்சைக்காரன்’ படத்திலும் காவல் துறையில் பணம் ஒன்றே குறி என்று செயல்படுபவர்களை ஒரு பிடி பிடித்திருப்பார். ’அவன் பணக்காரன்னு போலீஸ்கிட்ட சொல்லியிராதீங்க’ என்று வில்லன் கூட்டத்தில் ஒருவர் சொல்வது அந்த ரகம் தான்.
பிச்சைக்காரனாக கருதி தன்னை அடித்த போலீஸ் அதிகாரி தான் ஒரு பணக்காரன் என்றறிந்து வலிந்து ‘மரியாதை’ காட்டுமிடத்தில், விஜய் ஆண்டனி பேசும் வசனம் கூட அப்படிப்பட்டதுதான்.
ஒரு கமர்ஷியல் படத்தில் சமூகம் பேச விரும்பும் இது போன்ற கருத்துகளைச் சொல்ல முயல்வது மிக அரிதான விஷயம்.
கோடி நன்றி!
‘பிச்சைக்காரன்’ பார்த்துவிட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் மனைவி தனக்கு போன் செய்து, தனது மகளிடம் ஏற்பட்ட மாறுதல் குறித்து பேசியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் சசி.
ஆந்திரா, தமிழ்நாடு உட்பட உலகெங்கும் ‘பிச்சைக்காரன்’ படத்தைப் பார்த்த கோடி பேரில் சில நூறு, ஆயிரம் பேர்களிடமாவது இதே போன்ற மாற்றம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதுதான் ‘பிச்சைக்காரன்’ வெற்றிகளில் மிக முக்கியமானது.
விஜய் ஆண்டனி, சேத்னா டைடஸ், தீபா ராமானுஜம், பகவதி பெருமாள், முத்துராமன், வினோத் சாகர், மறைந்த சிவதாணு உட்பட வேறுபட்ட நடிப்புக் கலைஞர்களை ஒன்றிணைத்ததும் இப்படத்தின் மற்றுமொரு சிறப்பு.
விரைவில் விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் ‘பிச்சைக்காரன் 2’ வெளியாகவிருக்கிறது. அதுவும் இதே போன்றதொரு மனமாற்றத்தை மக்களிடம் உருவாக்கும் விதமாக அமைய வேண்டும்.
குறிப்பு: சரியாக 6 ஆண்டுகளுக்கு முன், இதே தினத்தில்தான் ‘பிச்சைக்காரன்’ ரிலீஸ் ஆனது.
04.03.2022 12 : 30 P.M