நடிகர் நாகேஷ் பற்றி ‘மறக்காத முகங்கள்’ நூலிலிருந்து மணாவின் கட்டுரை
“வீட்டிலே எல்லோரும் என்னை ‘குண்டப்பா’ன்னு தான் கூப்பிடுவாங்க. நானோ ஒல்லியா இருப்பேன். கூப்பிடுறதுக்கும், நம்ம தோற்றத்துக்குமே முரண்பாடு எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா?’’
சென்னை செயின் மேரீஸ் சாலையிலுள்ள வீட்டில் சந்தித்தபோது சொன்னார் நாகேஸ்வரனான நாகேஷ்.
அவரைச் சந்திப்பதற்கு முன்பு தான் அவர் பிறந்த ஊரான தாராபுரத்தில் உள்ள பீமராய அக்ரஹாரத்திற்குச் சென்றுவிட்டு அவருடைய உறவினர்களைச் சந்தித்துவிட்டு வந்த அனுபவங்களை நான் விவரித்தபோது கனத்த மௌனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
ரெஜினாவைக் காதலித்து மதம் மாறி ‘பீட்டர் நாகேஷாக’ மாறியபோது வீட்டில் கடுமையான எதிர்ப்பு. பேச்சு வார்த்தை இல்லாமல் போனது.
அவருடைய அம்மா உடல்நலம் சரியில்லை என்கிற தகவல் வந்து தாராபுரத்துக்கு நாகேஷ் கிளம்பிப் போனபோது கூடுதல் பணம். புகழ் எல்லாம் இருந்தது.
தாராபுரத்திற்குப் போனபோது ஆற்றின் ஒரு கரையில் இருந்த நாகேஷை உறவினர்கள் அனுமதிக்கவில்லை. தாய்க்கு ஈமக்கிரியைகள் செய்யக் கூட அவரை அனுமதிக்கவில்லை.
எதிர்கரையில் அம்மாவின் சடலம் தூக்கிக் கொண்டு போனபோது எதிரே ஏக்கத்துடனும், விம்மலுடனும் கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பிய தருணத்தை உறவினர்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நேரில் சொன்னதை நாகேஷிடம் பகிர்ந்தபோது ஆழ்ந்த பெருமூச்சு. துக்கமயமான மௌனம்.
“நாம சம்பந்தப்பட்ட ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கு.. நான் கொடுத்த விலை அதிகம்.. என்ன தான் புகழ், செல்வாக்கு, பணம் எல்லாம் இருந்தும் நானும் மனுஷன் தானே. ஒரு அம்மாவுக்குப் பிள்ளை தானே!
இழப்பை விட, இழப்பின் போது ஒருத்தன் புறக்கணிக்கப்பட்டால் எவ்வளவு தூரத்துக்கு வலிக்கும்ங்கிறதை அன்னைக்கு உணர்ந்தேன்’’- கலக்கத்துடன் வந்தது பதில்.
“தாராபுரம் வாழ்க்கையை நினைக்கிறப்போ எனக்கு ஆச்சர்யமா இருக்கும். வீட்டைப் பொறுத்தவரை ஒல்லியா இருந்தாலும் நான் எப்போதும் சேட்டை செய்ற பையன்.
அடுத்தவங்களை முகபாவங்களை, சேஷ்டைகளை உத்துப் பார்த்து அப்படியே பண்ணிக்காட்டுவேன். சிலர் சிரிப்பாங்க. எனக்கு அடி விழும்.
சின்ன வயசிலிருந்து ஏதோ ஒரு துறுதுறுப்பு என் கிட்டே இருந்துச்சு. அம்மை பாதிச்சு முகம் முழுக்க அம்மைத் தழும்பு வந்தப்போ நான் அழுத அழுகை இருக்கே.. பல பேர் தேத்துனாங்க.. இந்த முகத்துக்காக எத்தனை பேர் கேவலமாப் பேசியிருக்காங்க.. தெரியுமா?
ஆனாலும் சென்னைக்கு வந்தப்போ நடிகர் பாலாஜியோட ரூமில் தங்கியிருந்தேன். அவன் கொடுத்த நம்பிக்கை இருக்கிறதே.. அபாரம். எனக்கு எப்படியும் வாய்ப்புக் கிடைச்சே தீரும்னு அவன் தான் நம்பினான்.. ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் முத்துராமன் எனக்கு உதவுவாரே.. அதே மாதிரி எனக்கு உதவினவன் அவன்..
அதே மாதிரி வாலி, பாலசந்தரை மறக்கவே முடியாது. எனக்காவே சில பாத்திரங்களை உருவாக்கினவன் அவன்.
ஏ.பி.நாகராஜன் மறக்க முடியாத சில பாத்திரங்களை எனக்காக உருவாக்கினார். ஸ்ரீதர் உருவாக்கினார். பீம்சிங் உருவாக்கினார். ஜெயகாந்தன் உருவாக்கினார்.. இப்போ கமல் பண்ணியிருக்கார்.. இப்படி எத்தனை பேர் சார் இந்த சினிமா இண்டஸ்ட்ரீலே..? இந்தப் புரிதல் தான் முக்கியம். தமிழ்நாட்டிலே நான் வளர்ந்தது பெருமையான விஷயம்..’’
தன்னுடைய உடல் சற்று எடை கூடியிருப்பதைப் பற்றிப் பேசும்போது சுய எள்ளல் தொனியில் சொல்கிறார்.
“ஒரே மாதிரி ஒல்லியா இருந்து உடம்புக்கு அலுத்துப் போய் அதுவா மாறிருச்சு பாருங்க!’’
“டைமிங் சென்ஸ் சினிமாவிலே முக்கியம். அதிலும் காமெடி நடிகனுக்கு அதைவிட முக்கியம். கலைவாணர், எம்.ஆர்.ராதா, தங்கவேலுன்னு பலபேர் அதுக்கு உதாரணம்.
நாடகத்தில் நடிக்க வர்றப்போ இருந்து நான் அதில் கவனமா இருப்பேன். கூட நடிக்கிறவர்களோட ஒத்துழைப்பும் முக்கியம்.
தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பு. வைத்தியா வர்ற நான் ஒரு காட்சியில் பாலையாவை ஒரு பார்வை பார்த்துட்டு சிவாஜியைச் சொல்ற மாதிரி “மெயினே சும்மாருக்கு.. சைடு நீ என்னடா?’’ ன்னு ‘டைமிங்குடன்’ பேசினதும் பாலையாவுக்கு ஒரே சந்தோஷம்.
‘’எப்படிர்றா அப்படிச் சொன்னே?’’ என்று முத்தம் கொடுத்து என்னைப் பாராட்டிவிட்டார்.
அப்படிப்பட்ட மனசுள்ள நடிகர்கள் இருந்தது எவ்வளவு பலம் தெரியுமா?
பேசிய படி வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். பூஜையறை. அதில் நிறைய சிலைகள். படங்கள். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர் என்று சர்வ மதப் படங்கள்.
“என்னோட மகன்கள் ஒவ்வொரு மதப் பெண்ணைத் திருமணம் பண்ணியிருக்காங்க. எம்மதமும் சம்மதம் தான். எந்தக் கடவுளும் சம்மதம் தான்” என்றவர் ஒரு இடைவெளிவிட்டுச் சொன்னார்.
“நமக்கு இந்தத் திறமையை, வாழ்க்கையைக் கொடுத்த கடவுள் யாருன்னு யாருக்குத் தெரியும்..? சொல்லுங்க. கடவுள் கிட்டே ஏன் பாகுபாடு காட்டணும்?’’- மெல்லிய சிரிப்பு கசிந்தது முகத்தில்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் ‘நம்மவர்’ படத்தில் நடித்தபோது தேசிய அளவில் துணை நடிகர் கிடைத்ததைத் தவிர வேறு விருதுகள் கிடைக்காததைப் பற்றிய வருத்தம் அவருக்கில்லை.
“மக்கள் கிட்டே எனக்கான அங்கீகாரம் கிடைச்சுருக்கு.. போதும்.. இப்போ பாரத் அவார்டு கொடுக்கிறாங்கன்னு வைச்சுக்குங்க..
ரோட்டிலே நடந்து போறப்போ கூட பாரத் அவார்டு வாங்கினவன் மாதிரியே தனி நடை நடக்கணும்.. இது தேவையா?’’
என்று சட்டென்று எழுந்து விறைப்பாக ஒரு நடை நடந்து காண்பித்தபோது தனி ரசனை தெரிந்தது.
அவருடைய சந்திப்பு பிரபல வார இதழில் வெளிவந்த பிறகு தொலைபேசியில் அழைத்தார். வீட்டிற்குப் போயிருந்தேன் மறுபடியும்.
“என்னுடைய லைஃப்பைப் பத்தி ரத்தினச் சுருக்கமா அதே சமயம் என்னைச் சங்கடப்படுத்தாம எழுதியிருக்கீங்க. அதுக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டேன். இந்தப் பக்கம் வந்தீங்கன்னா பயப்படாம தைரியமா நீங்க இங்கே வரலாம். நானும் தைரியமா உங்க கிட்டே நம்பிப் பேசலாம்’’ என்றார் கிண்டலாக.
சென்னை மயிலாப்பூரில் கோவில் அருகே ஒரு மெஸ். ஒருமுறை அங்கு போனபோது மாலை நேரம். தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் நாகேஷ்.
சிநேகிதத்துடன் சிரித்து அருகில் வரச்சொன்னார்.
“பிரபலமாயிட்டாலே இருக்கிற தொந்திரவு இருக்கு.. பாருங்க.. ஹய்யோ! நமக்குப் பிடிச்ச மாதிரி ரசிச்சுப் பொது இடத்தில் சாப்பிட முடியாது. போண்டாவைக் கூட பதவிசாச் சாப்பிடணும்.. (கண்ணை முழித்தபடி செய்து காட்டுகிறார்).
அதை விடுங்க.. மூக்கிலே அரிக்குதுன்னு வைச்சுக்குங்க.. சட்டுன்னு நம்ம கையாலே… நம்ம மூக்கைச் சொரியக் கூட முடியாது.. என்ன கொடுமை பார்த்தீங்களா? சரி.. நீங்க சுதந்திரமா நல்லா வாயைத் திறந்து சாப்பிடுங்க..’’
– என்று வாய் திறக்காமலேயே கண்ணாடிக்குப் பின்னால் சிரித்த பார்வை இப்போதும் நினைவில் இனிப்பைப் போலிருக்கிறது.
#
நன்றி: அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுப் பரவலாகக் கவனம் பெற்ற ‘மறக்காத முகங்கள்’ நூலில் இருந்து சாம்பிளுக்கு ஒரு கட்டுரை.
நூலின் விலை ரூ.150
சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் எண் – 563 & 564