– உச்சநீதிமன்றம்
நாட்டில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில், தலைவர் உள்ளிட்ட பதவிகள் நியமிக்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி அதை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த ஆணையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இதற்கு தீர்வு காணும் விதமாக ஆணையங்களுக்கு உதவி புரிய சிறப்பு அதிகாரிகளை நியமிக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த அதிகாரிகளை நியமிக்க ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களில் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை; பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, பல மாநிலங்கள் பின்பற்றவில்லை. இந்த விவகாரத்தில், இனி நாங்கள் யாருக்கும் கரிசனம் காட்ட மாட்டோம்.
பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல் இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
அந்த மாநிலங்களுக்கு, நான்கு வார கால அவகாசம் வழங்குகிறோம். அப்போதும் பதில் அளிக்கவில்லை என்றால், கடும் விளைவை சந்திக்க நேரிடும்;
சம்மந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணை, ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
24.02.2022 12 : 30 P.M