– குடிமக்கள், மாணவர்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
உக்ரைனை மிரட்டும் வகையில் எல்லையில் 1 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள், அமெரிக்கா ஆகியவை போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பின. இதனால், அந்த பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்தது.
ஆஸ்திரேலியா, இத்தாலி உட்பட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்ற துவங்கின.
இந்திய மாணவர்களும் உடனே வெளியேற வேண்டும் என இந்தியத் தூதரகம் அறிவித்தது.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் மேலும் 7,000 வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது என்ற பரபரப்பு தகவலை அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் மீது நேற்று குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டான்பஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.
அந்தக் கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி மீது அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டதாவும் இதில் மழலையர் பள்ளியில் பணியாற்றி வந்த 2 ஆசிரியர்கள் காயமடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் முக்கிய நகரான லுஹான்ஸ்க்கில் உள்ள சர்வதேச எண்ணெய் குழாய் மீது வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டதில் அது வெடித்து சிதறியதாக ரஷ்யா அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ரஷ்யாவில் இருந்து கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பியா பகுதிகளுக்குச் செல்லும் எண்ணெய் குழாய்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
சிறிது நேரத்தில் நகரில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்று தாக்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில் உக்ரைனில் பதற்றம் நீடிக்கும் நிலையில் அங்கிருந்து வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அத்தியாவசிய பணியில் இல்லாதோர், மாணவர்கள் ஆகியவர்கள் தற்காலிகமாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும். உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்திய மாணவர்கள், உக்ரைனுக்கு தங்களை அழைத்துச் சென்றவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படியும், இந்திய தூதரகத்தின் பேஸ்புக், வலைதளம் மற்றும் டுவிட்டரைத் தொடர்ந்து பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள தகவல் மற்றும் உதவி தேவைப்படும் இந்தியர்கள், மத்திய வெளிவிவகார அமைச்சகத்திடம் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21.02.2022 4 : 00 P.M