கேள்விக்குள்ளாக்கும் எதிர்காலக் கனவுகள்!

நூல் வாசிப்பு:

சென்னை கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சி. முத்துகந்தன் எழுதிய நூல்.

கதை, கவிதை, ஆய்வு, இதழியல் என்று பன்முகத் தளங்களில் இயங்கி வருபவர். செந்தலைக் கருவி என்ற பண்பாட்டு ஆய்விதழை நடத்தியவர்.

உயிர்க் குறித்த பேரச்சம் நிலவிய பெருந்தொற்றின் பொதுமுடக்கக் காலமே இந்நூல் உருவாக்கத்திற்கு அடிப்படை என்று கூறும் நூலாசிரியர், “இனிவரும் தொடர்கள் கிளைக்குக் கிளை தாவும் பத்திகளாக இருந்தாலும் எப்படி அதற்குள் முழுமை இருக்கிறது.

தொடர்ந்து வாசிப்போம். வாசகர்கள் நம்முடைய அனுபவத்தையும் சுய விமர்சனத்தையும் வாசிக்கிறபோது அவர்களது மனதில் பூட்டிவைக்கப்பட்ட அல்லது மனதின் ஓரத்தில் படிந்துள்ள பல்வேறு உபகதைகள் அவர்களுக்கு நினைவில் எழும்” என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தன் மனிதல் தோன்றிய சிந்தனைகளை சிறு சிறு கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் முத்துகந்தன். அவை நம்முடன் உரையாடுவதுபோல இருக்கின்றன. முதல் கட்டுரை எது படைப்பாற்றல் என்ற தலைப்பில் அமைந்திருக்கிறது.

அதிலிருந்து சில வரிகள்…

கடந்தகால நினைவுகள், நிகழ்காலப் பிரச்னைகள், எதிர்காலக் கனவுகள் இவைகளைக் கேள்விக்குள்ளாக்கும், அதில் விடையும் வைத்திருக்கும். இப்படியான சிந்தனைகளின் வெளிப்பாடுகளைச் சுயவிமர்சனத்தோடு எதார்த்தமான எழுத்தாகவோ பேச்சாகவோ மாற்றும் சான்றே படைப்பு.

பொதுவாக பயணங்கள்தான் நம்முடைய தூரங்களைக் கடக்கவும் நமக்கே நம்மீது நெருக்கத்தை உண்டுபண்ணவும் துணைசெய்யும்.

பயண அனுபவம் மட்டுமே நமக்குப் புதிய நபர்களைப் புதிய இடங்களைப் புதிய சூழலை அமைத்துத் தரும். அதன்வழி ஓர் இனத்தை அல்லது பண்பாட்டை அறிகிற அறிவை இது இயல்பாய்க் கற்றுத்தரும்.

ஆனால் பொதுவாகப் பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்வதை மட்டுமே நாம் பயணமாகப் புரிந்து வைத்திருக்கிறோமே எப்படி? ஆமாம், எப்படியோ இடம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் நாம் பேருந்தின் சன்னல் ஓரம் உட்கார்ந்து வந்தோம்.

நமக்குச் சன்னலின் வழியே காணும் காட்சிகள் அத்தனையும் மகிழ்ச்சி. வாகனங்களின் பெருக்கத்தால் நாம் பயணித்த பேருந்தானது, இரண்டு மூன்று நிமிடங்கள் அப்படியே நின்றுபோனது.

இப்போது நாம் காணும் சன்னல்வழி காட்சி நமக்கு மகிழ்ச்சியை அள்ளித்தந்தது. சிறகில்லா வெள்ளை நிற பலூன் ஒன்று சாலையைக் கடக்க, மெல்ல பறந்து பறந்து தரையில் பட்டும் படாமல் நகர்ந்துபோனது.

இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் முதலான அனைத்தும் நாற்பது ஐம்பது நொடிகள் அப்படியே நின்று நிதானித்து மெது மெதுவாய் நகர்ந்தன.

மிகுந்த வேகத்தோடு, சிறு சிறு இடைவெளியின் இடுக்கில் நுழைந்த ஓர் இளைஞரும் சட்டென அவரது வண்டியை நேர்த்தியாய் நிறுத்தினார்.

ஒருவழியாக அந்த வெள்ளை பலூனும் பக்குவமாகச் சாலையைக் கடந்தது. அந்தப் பலூனைப் பார்க்கிறபோது, நம் எல்லோருக்குள்ளும் ஏதோவொரு முகமறியா குழந்தையின் ஞாபகம் வந்திருக்கலாம்தானே.

பலூன் ஒருபோதும் உடைந்துவிடக்கூடாது என்கிற பரிசுத்தமான எண்ணம்தானே அது. அதனால் மீண்டும் ஒருமுறை நாமும் நம் பங்கிற்கு அந்தப் பலூனைச் சன்னலின் வழியே எட்டிப் பார்த்து கண்களால் நெக்கிப் பாதுகாத்தோம்.

அந்த இரண்டு கிலோ மீட்டர் தூரம் கடந்ததும் நாம் பயணித்த பேருந்தின் பின்பக்க சக்கரம் டாமர் என பெரும் சத்தத்துடன் வெடித்தது. முதலில் உங்களைப் போலவே நமக்கும் உடனடியாக அந்தப் பலூன் ஞாபகம்தான் வந்தது.

***

இயல்பால் அறிவோம்:

சி. முத்துகந்தன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,

7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,

சென்னை – 18

விலை: ரூ. 130

-பா. மகிழ்மதி

21.02.2022 10 : 50 A.M

You might also like