‘அறிஞர் அண்ணா’ நூல் பற்றிய விமர்சனம்
****
● அண்ணாவின் பேச்சு – அசர வைத்த பேச்சு! அன்பான பேச்சு! அழகான பேச்சு! ஆழமான பேச்சு! அற்புதமான பேச்சு!
● அண்ணாவின் பேச்சு –
தமிழ் மொழியின் அணிகலனாச்சு!
அண்ணாவின் பேச்சு –
தமிழர் வாழ்வின் ஆதரவாச்சு !
அண்ணாவின் பேச்சு –
திராவிட கொள்கைகளின் ஆயுதமாச்சு!
அந்த அண்ணாவின் ஆயிரக்கணக்கான பேச்சுகளிலிருந்து, எட்டு சிறந்த உரைகளை தொகுத்து வழங்கியதே இந்த நூல்!
அந்த உரைகளிலிருந்து ஒரு சில அரிய முத்துக்கள்:
● துறையூரில் நடைபெற்ற முசிறி தாலுகா சுயமரியாதை மாநாட்டில் தலைமை உரை (22.08.1937):
” ஆரியரின் ஆணவத்திற்கு மனுவைவிட வேறு உதாரணமும் உண்டா? மனு மாண்டான். மனுநீதி மறைந்தது என்றும் கூறுபவருளர்! ஆனால் மனுவின் மனப்பான்மை இன்னும் நீங்கியபாடில்லை!”
– இன்னும் இந்த நிலைதானே?
● இந்து திருமண மசோதா – சுயமரியாதை திருமணம் – தமிழ்நாடு சட்டசபை உரை (18.07.1967):
“30, 40 வருஷங்களாக தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற ஒரு புதிய முறைக்கு இப்பொழுது நாம் ஒரு சட்ட வடிவம் கொடுக்கிறோமே தவிர, இந்தச் சட்டம் நிறைவேற்றிய பிறகு அனைவரும் சுயமரியாதை திருமணம் தான் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் சட்டம் அல்ல!”
– ஒரு உண்மையான ஜனநாயகவாதி இப்படித் தான் இருப்பார்!
● தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார் என்ற தலைப்பில் நாகரசம்பட்டி புதிய கல்வி நிலைய கட்டிடத் திறப்பு விழா உரை (10.12.1967):
“சர்க்காரின் மூலம் மட்டுமே ஒரு சமுதாயத்தை அடியோடு மாற்றியமைத்து விட முடியாது. சர்க்காருக்கு அந்த வலிமை இல்லை. மாநில சர்க்கார் தன்னிச்சையாக காரிய மாற்ற முடியாது. இதனை பெரியார் நன்கு அறிவார். உலகத்திலே, எந்த நாட்டிலேயும் சர்க்காரால் சாதித்தைவிட தனிப்பட்ட சீர்திருத்த வாதிகளாலேயே சமூகம் சீர்திருத்தப்பட்டிருக்கிறது!”
-இதற்கு பெரியாரைவிட வேறு உதாரணம் உண்டா?
● இந்திக்கு இங்கு இடமில்லை – இரு மொழிக்கொள்கை மசோதா – சட்டசபை உரை (23.01.1968):
“இந்தி பேசும் பகுதியிலிருக்கின்ற மாணவர்கள் இரு மொழிகள் மட்டுமே கற்க வேண்டியவர்களாக இருக்கும் போது, இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்று மொழி கற்க வேண்டியிருப்பது, வேறுபாடானதாகும்!”.
– அன்றே சொன்னார்! நன்றே சொன்னார்!
● தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம். சட்டசபை உரை (18.07.1967):
“தமிழ் நாடு பெயர் மாற்றம், இது கழகத்திற்கு வெற்றியல்ல, தமிழரசு கழகத்திற்கு வெற்றியல்ல, மற்ற கட்சிகளுக்கு வெற்றியல்ல! இது தமிழுக்கு வெற்றி! தமிழருக்கு வெற்றி ! தமிழ் வரலாற்றுக்கு வெற்றி! தமிழ் நாட்டுக்கு வெற்றி!”
● முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள் – கலைவாணர் அரங்கில் ஆற்றிய உரை (01.02.1968):
“தமிழ் நாடு பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணச் சட்டம், இரு மொழிக் கொள்கை அதாவது இந்தி ஒழிப்பு தீர்மானம் ஆகிய இம்மூன்றும், வரலாற்றில் என்றும் நிலைத்திருக்க செய்திருக்கும் சாதனைகளாகும்! இன்னும் 10 ஆண்டுகள் கழித்து எங்களை அனுப்பி விட்டு, இந்த இடத்தில் யார் உட்கார்ந்தாலும், இவைகளை மாற்ற எவருக்கும் துணிவு நிச்சயமாக இருக்காது!”
-இன்று வரை அந்தத் துணிவு எவருக்குமில்லை!
● திராவிட சிந்தனையாளர்கள், அண்ணாவை நேசிப்போர் அனைவரும் படித்தறிய வேண்டிய நூல்!
பேரறிஞர் அண்ணாவின் வாய்மை வென்றது! வாயும் மையும் வென்றது!!
அறிஞர் அண்ணா.
திராவிடர் கழக வெளியீடு
பக்கங்கள்: 96
நன்கொடை – ரூ.80/
பொ. நாகராஜன்.