ரோஜாக்களை விட்டுவிடு காதல் ராஜாங்கமே!

‘ரோஜாவுக்கு என்ன பெயர் வைத்தால் என்ன, அது ரோஜாதானே’ என்ற புகழ்மிக்க வார்த்தைகளுக்கு என்றும் ஒளி குறையாது. ரோஜாவின் சிறப்பும் அதுதான்.

அதன் தோற்றமே மலரையும் மணத்தையும் ரசிக்காதவர்களையும் கூடச் சுண்டியிழுக்கும். இந்த ஈர்ப்புதான் ரோஜாவை காதலின் அடையாளம் ஆக்கியிருக்கிறது என்பேன்.

உலகம் முழுக்க சிவந்த ரோஜா காதலுக்கான தூதுப்பொருளாகவே கருதப்படுகிறது.

மெல்லிய நீர்த்திவலைகளும் காற்றுக்குக் கோணுகிற மென்னிதழ்களும் காம்பில் இணைந்திருக்கிற பசுமையான இலைகளும் சிறு முட்களும்தான் சேர்ந்து ஒருவர் கையில் தவழும்போது, அவர் மனதில் காதல் மேல்நோக்கிப் பாயும் அருவி போலப் பெருக்கெடுக்கும்.

அதெல்லாம் சரி, இதெல்லாம் ரோஜாவுக்குப் பிரியப்பட்டதுதான் நடக்கிறதா என்றால் நம்மிடம் பதில் கிடையாது.

ரோஜாவின் இதயம்!

‘ஓநாயாக இருந்து பார்த்தால்தான் அதன் வலி புரியும்’ என்று குருதிப்புனல் படத்தில் ஒரு வசனம் வைத்திருப்பார் கமல். அது ரோஜாவுக்கும் கூடப் பொருந்தும்.

தோட்டம் முழுவதும் பதியம் போடப்பட்ட செடிகளில் ரோஜாக்கள் மலர்ந்திருக்கின்றன. பிப்ரவரி தொடக்கத்திலோ அல்லது ஆண்டு முழுவதும் அவ்வப்போதோ அம்மலர்களைக் கொய்து கொண்டே இருக்கிறோம்.

இந்த இடத்தில் ‘கொய்தல்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘பிய்த்தல்’ அல்லது ‘துண்டித்தல்’ போன்றவைதான் சரியான பதமாக இருக்கும்.

பூவாகிக் காயாகி கனியாகும் இயல்பு இல்லாவிட்டாலும் கூட, செடியில் பிறந்து வளர்ந்து சிரித்து மகிழ்ந்து சுருங்கி உதிர்வதுதானே அழகு.

அதனை இல்லாமல் ஆக்கிவிட்டு, தன் மீது தெளிக்கும் நீர்த்துளிகளைக் கண்ணீராகக் கருதுபவற்றை ‘வெட்கத்தில் சிவக்கும் ரோஜாதான் எத்தனை அழகு’ என்று கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்.

ரோஜாவின் இதயம் என்ன பாடு படும். சோகத்தில், அது என்ன பாட்டு பாடும்?!

காதல் ரோஜாவே..!

கவிஞர்களின் வர்ணனைகளில் தான் இடம்பெறுவது குறித்து ரோஜாக்கள் என்றுமே வருத்தப்பட்டதில்லை. ஏனென்றால், தமிழ்நாட்டு மக்கள்தொகையில் அவற்றை வாசிப்பவர்களின் சதவிகிதம் ஒரு புள்ளி வைத்து சில பூஜ்ஜியங்களை இடும் அளவுக்குத்தான் இருக்கும்.

ஆனால், திரைப்படப் பாடலாசிரியர்களைப் பார்த்தால்தான் ரோஜாக்களுக்கு வெறுப்பு உண்டாக வாய்ப்பு அதிகம். அந்தளவுக்கு ரோஜாவையும் காதலையும் இணைத்து அல்லது ரோஜாவையே காதலாக்கி ‘அமர்க்களம்’ செய்திருப்பார்கள்.

’காதல் ரோஜாவே’ என்று பாடினாலும் கூட, அது காதல் என்ற உணர்வோடு ஒட்டியதாகி விடாது. கண்டிப்பாக, காதலுக்கு உள்ளான பெண்களை துதிப்பதாகவே இருக்கும்.

பூ என்றால் மென்மை எனும் பொருளின்படி, அவ்வாறே பெண்களும் இருக்க வேண்டுமென்ற விருப்பத்தைத் திணிக்கும் வகையில் அதனைப் பெண்பாலாக்கி விடுவார்கள். அப்போதெல்லாம், கட்டாயம் மகரந்தச் சேர்க்கையை நினைத்து பதியமிட்ட ரோஜாக்கள் வருந்தத்தான் செய்யும்.

ஒருநாள் கூத்து!

காதலர் தினம் மட்டுமல்ல, மனதில் காதல் ஊற்றெடுக்கும் கணம்தோறும் ரோஜாக்களே கதி என்றிருக்கிறது உலகம். ’டெம்ப்ளேட்’ ஆகிப் போய்விட்ட வார்த்தைகளைக் கொண்ட ஒரு வாழ்த்து அட்டையுடன் ஒற்றை ரோஜாவோ அல்லது கொத்தோ தந்தால், அதுதான் காதலுக்கான முதல் படி.

அந்த படிக்கட்டில் ஏறிய அடுத்த நொடியே, அந்த ரோஜாவின் நிலை என்னவென்று பார்த்திருக்கிறோமா?!

நியாயமாகப் பார்த்தால், அந்த தொடக்கத்தைக் காலம் முழுவதும் நினைவிலிருத்த அந்த ரோஜா மலர்களைப் பாடம் செய்து ஒரு ‘மம்மி’ போலவோ அல்லது காய்ந்தபிறகு அதன் சருகுகளை ஒரு பரப்பில் வைத்து பிரேம் போட்டு அழகு பார்க்கவோ வேண்டாமா?!

ஆனால், நாம் என்ன செய்கிறோம். வாழ்த்து அட்டையைக் கையிலெடுத்துக்கொண்டு ரோஜாவைத் தரையில் வைத்து விடுகிறோம். கேட்டால், காதல் காற்றில் மணம் பரப்பட்டும் என்று ‘டயலாக்’ வேறு!

பல காதல்கள் ஒருநாள் கூத்துகளாகவே மாறிவிட்ட சூழலில், தங்களது வாழ்வும் அப்படியொன்றாகிவிட்டதில் ரோஜாக்கள் மகிழவா செய்யும்!

ரோஜாக்களுக்காக..!

மணம் பரப்பவும் மருந்தாகவும் பயன்படுகின்றன ரோஜா வகைகள். அவை தவிரப் பெரும்பாலானவை அழகுக்காகவே வளர்க்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட ரோஜா வகைகளும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாகுபடி முறைகளும் வழக்கத்தில் உள்ளன.

இவை தவிர மனிதர்களின் கண்ணில் படாத காட்டு ரோஜாக்கள் எத்தனையோ தெரியவில்லை.

ரோஜாக்கள் கலையம்சமாகவும் ரசனையின் அடையாளமாகவும் கருதப்படுகின்றன. அதனால், கொஞ்சம் உயர்வான பீடம் ரோஜாக்களுக்கு இருப்பதையும் மறுக்க முடியாது. இதனால் ரோஜாக்களை வைத்து நடைபெறும் வியாபாரமும் மிகப்பெரியது.

ஐரோப்பிய மலர் சந்தையின் தேவையில் 51% ரோஜாக்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2021 ஏப்ரல் முதல் 2022 ஜனவரி வரை ஏற்றுமதி செய்யப்பட்ட ரோஜாக்களின் மதிப்பு 335.44 பில்லியன் அமெரிக்க டாலர் என்று தெரிய வந்துள்ளது.

இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் ரோஜாக்களில் எத்தனையெத்தனை காதலுக்காகப் பயன்படுத்தப்படுமென்று தெரியாது.

காதலர் தினமான இன்று காதலையும் ரோஜாவையும் ஒன்றிணைப்பவர்கள் எண்ணிக்கை எத்தனை கோடியோ தெரியாது.

ஆனால், காதல் பூத்தபிறகு தங்களைக் கைவிட்டுவிட வேண்டாமென்பதே அந்தந்த ரோஜாக்களின் வேண்டுகோளாக இருக்கும். ஆதலால், காதலர்களே உங்கள் காதலோடு அவற்றின் நினைவைச் சொல்லும் ரோஜாக்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

அவை உங்கள் மனதிலிருக்கும் காதலின் நிலையைக் காட்டும் காலக் கண்ணாடியாகவும் இருக்கும்.

அப்படிச் செய்ய முடியாதவர்கள் ரோஜாவையும் காதலையும் ஒன்றாகவே கருதுவார்கள் என்று உறுதிபடச் சொல்ல முடியும்.

இதையும் நான் சொல்லவில்லை, என் கையிலிருந்து எப்போதோ உதிர்ந்த ரோஜாக்கள் சொன்னவைதான்..!

ஆதலால், ரோஜாக்களை விட்டுவிடு காதல் ராஜாங்கமே..!

பின்குறிப்பு: காதலர் தின கொண்டாட்டத்துக்கும் இதற்கும் துளி கூட சம்பந்தமில்லை..!

-உதய் பாடகலிங்கம்

14.02.2022  10 : 50 A.M

You might also like