சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் பங்கேற்றனர்.
நீட் தேர்வு விவகாரம் பரபரப்பாக தமிழக அரசியல் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் ஆளுநரும், முதல்வரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர்.
கடந்த வாரத்தில்தான் ஆளுநருக்கு நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முனீஷ்வர்நாத் பண்டாரி சட்டப்படிப்பை முடித்து ஜெய்ப்பூரிலுள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அங்கு நீண்ட நாட்கள் பணியாற்றிய பிறகு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு 2021 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை அங்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.
அப்போது முதல் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இவர் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
14.02.2022 12 : 30 P.M