-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
சில காலம் டெல்லி ஜேஎன்யூவில் (ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்) முதுகலை படிப்பை படிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை சட்டக் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்ததால், அந்தப் படிப்பை நிறுத்தி விட்டு சென்னைக்கு திரும்பி விட்டேன்.
அது வாழ்க்கையில் செய்த தவறு என்று, இன்றைக்கும் நினைப்பதும் உண்டு. வாழ்க்கையில் பல தவறான முடிவுகளால், பல கஷ்டங்களையும், சிரமங்களையும் சந்தித்தெல்லாம் வேறு விடயம்.
அதில் ஒன்று டெல்லி படிப்பை நிறுத்தி விட்டு சென்னைக்கு வந்ததுதான்.
அன்றைக்கு அங்கு என்னோடு படித்த நண்பர்கள், இன்றைக்கும் பல்வேறு பகுதியில் வடபுலத்தில் இருக்கிறார்கள். அவ்வப்போது அவர்களுடைய ஊர்களுக்குச் சென்று வருவதுண்டு.
அவர்களும் தமிழகத்திற்கு வந்தால் என்னுடன் தங்கி விட்டுச் செல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒரு நண்பர் தான் ஒமிதிய கோயல். அவர் ஒரு புகைப்படத்தை நேற்று அனுப்பினார். ஜே.என்.யூ-வில் நிர்மலா சீதாராமன் படித்தபோது எடுத்த படம் என்று அனுப்பினார். அரிய படமாகத் தெரிந்தது.
நிர்மலா சீதாராமனை பொருத்தவரையில் ஆந்திராவில் காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
தமிழகத்தில் பிறந்து முசிறி, மதுரை, திருச்சியில் வாழ்ந்து படித்தவர்.
காலம்சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் பரிந்துரையின் பேரில் டெல்லி பாஜக அலுவலகத்தில் செய்தி ஊடகப் பிரிவின் கட்சி நிர்வாக பொறுப்பில் இருந்தார் நிர்மலா சீதாராமன்.
2006-2007 வாக்கில் அவர் பிஜேபியில் இணைந்த காலகட்டத்தில், பயோனியர் ஆங்கிலப் பத்திரிகையில் நடுப்பக்க கட்டுரைகள் எழுதியவர்.
பாஜக கூட்டணியில் நாங்களெல்லாம் இருந்தபொழுது, பாஜக அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். அப்போது இந்த அம்மையாரை பார்த்தபோதுதான் புதிதாக கட்சியில் சேர்ந்துள்ள நிர்மலா சீதாராமன் என்று மல்கானி அறிமுகப்படுத்தி வைத்தார்.
பாஜக தலைவர் மல்கானியுடன் எனக்கு நல்ல தொடர்பு உண்டு. 2007-இல் பிஜேபியில் சேர்ந்து இன்றைக்கு நிதி அமைச்சராக உயர்ந்திருக்கின்றார் நிர்மலா சீதாராமன். மேலே உள்ள இந்தப் படம் அவர் ஜே.என்.யூ வில் படித்தபோது எடுத்த படம்.
இந்தியாவின் நிதி அமைச்சராக பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று நினைத்திருப்பாரா என்று தெரியாது. ஜே.என்.யூ-வில் படித்த போது அருகே உள்ள நாடாளுமன்றத்துக்கு செல்வோமா என்று நினைத்திருப்பாரோ? தெரியாது. எல்லாவற்றையும் காலமும் நேரமும் சூழலும் தான் முடிவு செய்யும்.
நம்பிக்கைகளில் சில இடங்களில் நேர்மையாக துணை நிற்கின்றோம்.
திறன் மிகுந்தவர்களை ஏணிகளாகவே, அதில் ஏறுபவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இதை விதி என்று சொல்வதா, ஊழ் என்று சொல்வதா என்று தெரியவில்லை.
ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தை சார்ந்த இன்னொரு செய்தி. சில நாட்களுக்கு முன்னர் ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்தி ஸ்ரீபட் சென்னை மாநிலக் கல்லூரியில் தனது படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.