தனது சுயநலமற்ற சேவை மற்றும் கடும் உழைப்பால் 92 வயதான பிரபாபென் ஷா, நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.
காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டபோது, மும்பையின் தமான் பகுதியில் பிறந்த பிரபாவுக்கு வயது 12.
சிறுபிராயத்திலேயே பர்டோலி சிவராஜ் ஆசிரமத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். நாட்டின் சுதந்திரத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்புகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை வைத்திருந்தார் பிரபாபென்.
சுதந்தரப் போராட்டக் காலங்களில் மணல் சாக்கிலேயே படுத்து உறங்கினார்.
சுதேசி பொருட்களைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்தார்.
காந்தியின் சிந்தனைகளால் கவரப்பட்ட பிரபாபென், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று உறுதிபூண்டார்.
சமூகத்தின் பல துறைகளில் அவர் பங்காற்றினார்.
அண்டை நாடுகளுடன் உருவான போர்க்காலங்களில் கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், இயற்கைப் பேரிடர் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
அவருடைய அளப்பரிய சேவையைப் பாராட்டி ஜனவரியில் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
“என் சேவைக்காகக் கிடைத்த இந்த விருதைப் பெருமையாக நினைக்கிறேன். இந்த விருது எனக்கு மட்டும் சொந்தமல்ல. என் மீது நம்பிக்கை வைத்த. என் சேவைகளுக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் இந்த விருது சொந்தமானது” என்கிறார்.
1990 ஆம் ஆண்டு தன் பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிரபாபென், பல துறைகளில் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி வருகிறார். பிப்ரவரி 20-ம் தேதி அவருக்கு வயது 93.
உலகில் மாற்றத்தைக் காண்பதற்கு முன்பாக உங்களிடம் மாற்றத்தைக் காணுங்கள் என்ற காந்தியின் சிந்தனை அவரை வெகுவாகக் கவர்ந்தது.
ஏழாம் வகுப்புப் படிப்பை நிறுத்திவிட்டு, குஜராத் மின்வாரியத்தில் வேலை பார்த்த சுபாஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
பணி மாற்றம் காரணமாகத் தம்பதிகள் பர்டோலி மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தார்கள். அப்போது அவர்களது மூத்த மகளுக்கு ஒன்றரை வயது.
தன் குழந்தைகளைப் படிக்கவைக்க அப்போது பள்ளிகள் இல்லை. பால் மந்திர் என்ற தொடக்கப் பள்ளியை பிரபாபென் தொடங்கினார். முதலில் அவரது மகளுக்கு அங்கே பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.
பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்காகக் காந்தி ஆசிரமத்தில் ஒரு எழுத்தராக வேலையில் சேர்ந்து கொண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பணியிட மாற்றம். தமான் பகுதிக்கு வந்தார்கள். அங்கேயும் ஒரு பள்ளியைத் தொடங்கினார். 1963-ம் ஆண்டு அதிகாரபூர்வமாக தமான் மகிமா மண்டல் அமைப்பை உருவாக்கினார்.
பெண்கள் முன்னேற்றத்திற்கான அமைப்பைத் தொடங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.
பெண்கள் கூட்டங்களை தன் வீட்டிலேயே நடத்தினார் பிரபாபென். அவர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்தரமாகக் கூறினார்கள்.
அவர்களுக்கு ஆரம்பக் கல்வி மற்றும் சுகாதாரம் பற்றி கற்றுக் கொடுத்தார். கூட்டு முயற்சியின் காரணமாக மகிளா மண்டல் சார்பாக இரண்டு பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அடுத்தகட்டமாக பிரபாபென், பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காகச் சுயதொழில் பயிற்சிகள் வழங்கினார்.
அப்பளம் செய்தல், தையல் பயிற்சி, மளிகைக் கடை உள்ளிட்ட சுயதொழில்களைச் செய்வதற்கான உதவிகளை அவர்களுக்குச் செய்தார். 1965-ம் ஆண்டு அரசு மருத்துவமனையில் வெஜ் கேண்டீன் ஒன்றை ஆரம்பித்தார்.
1965 முதல் 1971 வரையில் மகிளா மண்டல் எல்லையில் போராடும் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்டும் பணியில் இறங்கியது.
அதேபோல் போபால் விஷவாயு துயரத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்தார். குட்ச் நிலநடுக்கம், கேரள வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பிரபாபென் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.
- பா. மகிழ்மதி