பிப்ரவரி 9-ம் தேதியன்று சத்யபாமா கல்வி நிறுவனத்தில் கொத்தடிமை ஒழிப்பு தினம் தொடர்பாக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மனிதக் கடத்தலுக்கு எதிரான சங்கம், சட்டப் பள்ளி, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை தொண்டு நிறுவனத்தோடு இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது.
சிறப்பு விருந்தினராக தாம்பரம் காவல் எல்லை காவல் ஆணையர் எம்.ரவி, ஐ.பி.எஸ் மற்றும் கௌரவ விருந்தினராக தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நலசங்கத்தின் தலைவர் முனியப்பன், தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஆலிஸ் சுகன்யா, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவர் கருணாநிதி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதையொட்டி, அமெரிக்க தூதரக அதிகாரி ஜூடித் கேவின் எழுத்துபூர்வமாக அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவில் பிப்ரவரி 9ம் தேதியை கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கும் முதல் மாநிலம் தமிழ்நாடு.
கொத்தடிமை தொழில்முறை பிரச்சனை பற்றிய பொதுவான விழிப்புணர்வுக்கு இத்தகைய நிகழ்வுகள் அவசியம்” என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில், கொத்தடிமை தொழிலாளியின் வாழ்வில் நடந்த ஒரு கசப்பான உண்மையை காண்பிக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. நிகழ்வின் முக்கிய பகுதியாக சிறப்பு விருந்தினர் ரவி ஐபிஎஸ், கொத்தடிமை தொழில் முறையைத் தடுக்கவேண்டும். முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார். நிகழ்வின் பங்கேற்பாளர்கள் அனைவரும் அவ்வாறு உறுதி எடுத்துக்கொண்டனர்.
மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நலசங்கத்தின் தலைவர் முனியப்பன், தன் வாழ்க்கையின் துன்பமான காலகட்டத்தின் நினைவுகளையும், கொத்தடிமையாக இருந்தபோது தான் சந்தித்த சோதனைகளையும் நினைவுகூர்ந்தார்.
சிறப்பு விருந்தினர் ரவி, ஐ.பி.எஸ், கொத்தடிமை தொழில் முறையின் வரலாற்றையும், ஒரு தேசமாக, நாம் இந்த சமூகத் தீமையை ஒழிப்பதில் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்தியாவில் மனிதக் கடத்தலுக்கு எதிரான குழுக்களின் பணியையும் அவர் பாராட்டினார்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி பாஸ்கரன், பாரதியார் பாடல்களை எடுத்துக்காட்டி மனிதத் தன்மை மற்றும் சமூகத்தில் அறநெறியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்தியாவின் ஒவ்வொரு குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் அரசியல் சாசன சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு இணையானது என்றார்.
- பா. மகிழ்மதி