கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமிக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.
ஆனால், ஒமிக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி வந்த நிலையில், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட், “கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் தொற்று அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உலகளவில் 130 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மிகவும் அபாயகரமான விஷயம்.
கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்றையே ஒமிக்ரான் தொற்று முந்தியுள்ளது. ஒமிக்ரான் லேசான அறிகுறியை ஏற்படுத்துவதாக தோன்றினாலும், இது மிக வேகமாக பரவக்கூடியது.
தடுப்பூசிகள் செலுத்தும் யுகத்தில் அரை மில்லியன் மக்கள் இறந்திருப்பது கவலையை அளிக்கிறது.
ஒமிக்ரானின் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வியக்க வைத்தாலும், உண்மையான பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்.
ஒமிக்ரான் தொற்றை நாம் இன்னும் முழுமையாக கடக்கவில்லை. அதன் முடிவை நெருங்கி வருகிறோம் என்று
நம்புகிறோம். பல நாடுகள் இன்னும் ஒமிக்ரானின் தொற்று உச்சத்தை கடக்கவில்லை. பல வாரங்களாக தொடர்ச்சியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மிகவும் கவலையாக இருப்பதாகக் கூறினார்.
இதேபோல் உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் வெளியிட்டுள்ள தகவலில்,
“நமக்குக் கிடைத்துள்ள ஒமிக்ரான் தொடர்பான எண்ணிக்கைகள் வியக்க வைக்கிறது.
ஆனால் அதே வேளையில் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இதற்கு முந்தைய அலைகளை எல்லாம் எண்ணிக்கை அளவில் ஒமிக்ரான் அலை தட்டையாக்கிவிட்டது.
நாம் இன்னும் பெருந்தொற்றுக்கு இடையில் தான் இருக்கிறோம். நாம் அது முடியும் தருணத்தை நெருங்கவுள்ளோம்.
இன்னும் நிறைய நாடுகளில் இப்போது ஒமிக்ரான் உச்ச அலையில் இருக்கிறது. கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகமாக இருப்பது வருத்தமளிக்கிறது.
இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டியிருக்கும். கொரோனா திரிபுகளில் ஒமிக்ரான் கடைசியாக இருக்காது. மேலும் சில திரிபுகள் மக்களை தாக்க வாய்ப்புள்ளது.
கொரோனாவின் அடுத்த திரிபு ஒமிக்ரானை விட வேகமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். அதற்கு பிறகும் சில திரிபுகள் ஏற்படக்கூடும்.
அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத்திறன் குறையக்கூடும். எனினும் நோய் தொற்று ஆபத்தையும், உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும்” என்கிறார்.
09.02.2022 12 : 30 P.M