பன்றிக்கு நன்றி சொல்லும் ஹீரோ நிஷாந்த் ரூஸோ!

சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சோனிலைவ் தளத்தில் வெளியிட்ட ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ என்ற திரைப்படம், அதன் மாறுபட்ட கதைக்காக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாலா அரன் இயக்கியுள்ள படத்தில் சினிமாவில் இயக்குநராகப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிஷாந்த் ரூஸோ. யார் இவர் என ரசிகர்களின் கவனத்தில் பதியும் விதமாக தனது பங்களிப்பைத் தந்துள்ளார்.

கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்ட நிஷாந்த் ரூஸோவிற்கு  நண்பர் ஒருவர் மூலமாக 2018ல் ‘ஆண்டனி’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

படப்பிடிப்பு நடந்த நாட்களிலேயே இயக்குநர் பாலா அரனிடமிருந்து பன்றிக்கு நன்றி சொல்லி படத்தில் நடிக்கும் அழைப்பு வந்தது. தற்போது அந்தப்படத்திற்கு கிடைத்துவரும் பாசிட்டிவ் விமர்சனங்களால் உற்சாகமாக இருக்கிறார் நிஷாந்த் ரூஸோ.

“பல காட்சிகளை யாரும் அறியாதபடி படமாக்கினோம். கோவையில் நள்ளிரவில் பிக் பாக்கெட் திருட்டு ஒன்றைப் படமாக்கியபோது, இயக்குநர் கட் சொன்னதுகூட கேட்காமல் நானும் உடன் நடித்தவரும் சற்று தூரம் தள்ளிவந்துவிட்டோம்.

ஆனால் வழியில் எங்களை நிறுத்திய போலீஸார் எனது கிழிந்த உடையைப் பார்த்து, சம்பவம் நிஜமாகவே நடந்திருக்கிறதோ என சந்தேக்கப்பட்டனர்.

ஒருவழியாக படப்பிடிப்பு நடக்கிறது எனக் கூறி, அனுமதி கடிதத்தை காட்டிய பின்னரே அங்கிருந்து சென்றனர்.

அதேபோல சைதாப்பேட்டை பகுதியில் இரவுநேர படப்பிடிப்பில் சாலை வழியாக ஓடும் காட்சிகளைப் படமாக்கினோம்.

படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால் நாங்கள் ஓடுவதைப் பார்த்து பிளாட்பாரத்தில் உறங்கிக்கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு விழித்து, எங்களை விரட்ட ஆரம்பித்தனர்.

இப்படி பல சுவாரஸ்யங்கள் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடந்தன” என்கிறார் கதாநாயகன் ரூஸோ.

தற்போது அவரும் விவேக் பிரசன்னாவும் நடித்துள்ள சர்வைவல் ஆக்ஷ்ன் திரில்லர் படம் ஒன்று ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

பா.மகிழ்மதி

09.02.2022 11 : 30 A.M

You might also like