தனி ஒருவராக கொசுவை ஒழிக்கும் கேரள மனிதர்!

கொச்சின் துறைமுகக் கழகத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றியவர் பி.பி.ஜேக்கப். அவருக்குச் சொந்த ஊர் பல்லுருத்தி. பணி ஓய்வுக்குப் பிறகு வீட்டில் முடங்கிக் கிடக்காமல், தனி மனிதராக கொசு ஒழிப்பில் இறங்கிவிட்டார்.

காலையில் கால்நடையாக தெருக்களைச் சுற்றிவரும் அவர், மருந்தடிக்கும் எந்திரம் மூலம் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

“கடந்த சில மாதங்களாக நான் கொசு மருந்தை அடித்து வருகிறேன். இந்தப் பகுதியில் உள்ள என் நெருங்கிய நண்பர்கள் பலரும் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாகச் சொன்னார்கள். அதனால்தான் இதை ஒரு சேவையாக செய்துவருகிறேன்” என்கிறார் ஜேக்கப்.

ஜேக்கப்பின் தனிப்பட்ட முயற்சியால்தான் கொசுவின் தாக்கம் குறைந்துள்ளதாக கொச்சி நகரில் உள்ள கடைக்காரர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

கொசுக்கள் அதிகமாக காணப்படும் பகுதிக்கு வாரத்தில் இரு முறை சென்றுவருகிறார்.

“ஆரம்பத்தில் மாலை நேரத்தில் மட்டுமே கொசுக்கள் காணப்படும். இப்போது எல்லா நேரங்களில் பார்க்கமுடிகிறது. ஏதோ என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன்” என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார் ஜேக்கப். இந்த 62 வயது மனிதர் சொந்தப் பணத்தில் மருந்து, ஸ்பிரேயர் எல்லாம் வாங்கிப் பயன்படுத்துகிறார்.

“மருந்து மற்றும் கருவிகள் வாங்குவதற்கு ஏறக்குறைய 4 ஆயிரம் ரூபாய் செலவானது. என் சேவையைப் பார்த்த சிலர் எனக்கு உதவிக்கு வந்தார்கள். மருந்து வாங்கிக் கொடுத்தார்கள்” என்று நன்றியுடன் கூறும் அவர், தினமும் இரண்டு மணி நேரம் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபடுகிறார்.

தற்போது அவருக்கு பல பகுதிகளில் இருந்தும் கொசு தொல்லை தொடர்பாக தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

“இந்த சமூகத்திற்காக நான் செய்யும் மிகச் சிறிய செயல் இது. ஆரம்பத்தில் கடைக்காரர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் என்னை அணுகினார்கள்.

நான் இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக வாழ ஆசைப்படுகிறேன். பணத்தை வீணாக செலவு செய்யாமல், சமூகத்தின் நற்காரியங்களுக்காக செலவிடவேண்டும்” என்று அன்புடன் வேண்டுகிறார் ஜேக்கப்.

பா.மகிழ்மதி

09.02.2022  10 : 50 A.M

You might also like