– பாகிஸ்தான் மீது இந்தியா தாக்கு
ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில், பொருளாதாரத் தடைகளின் சாதக, பாதகங்கள் குறித்த கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, “ஐ.நா., விதிக்கும் பொருளாதாரத் தடைகள் ஒரு நாட்டில் சட்டப்பூர்வமாக மக்களுக்கு கிடைக்கும் உரிமைகளை தடுப்பதாக இருக்கக் கூடாது.
அதேசமயம், பயங்கரவாத குழுக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு மனிதநேய அடிப்படையில் சலுகைகள் வழங்கும்போது தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுப்பது முக்கியமாகும்.
இந்தியாவின் அண்டை நாட்டில், ஐ.நா.,வால் தடை செய்யப்பட்டவை உட்பட பல பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இவை, ஐ.நா.,வின் தடைக்கு அஞ்சி, மனித நேய அமைப்புகள் போல உருமாறி அதன் வாயிலாக பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுகின்றன. பயங்கரவாத தாக்குதலுக்கும், மனிதக் கேடயமாக பயன்படுத்துவதற்கும் ஆட்களைத் தேர்வு செய்கின்றன.
எல்லை தாண்டி பயங்கரவாத செயல்களை விரிவுபடுத்துகின்றன. இவற்றைத் தடுக்க மனித நேய அடிப்படையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து ஐ.நா., கண்டிப்பாக தீவிர ஆய்வு நடத்த வேண்டும்” எனக் கூறினார்.