– மத்திய அரசு
கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கோவிட் இணையதளத்தில் ஆதார் எண் கோரும் விதிமுறையை நீக்கக் கோரி மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் சங்கர் சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமான் சர்மா, “அடையாள அட்டை ஏதும் பெறப்படாமல் இதுவரை 87 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை” என்றார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கொரோனா தடுப்பூசி மையங்களில் ஆதார் எண்ணை கேட்டு பொதுமக்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டையை மட்டுமே அடையாள சான்றாக காண்பிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தக் கூடாது. தடுப்பூசி செலுத்துவதற்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, ரேசன் அட்டை உள்ளிட்ட 9 அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்தால் போதுமானது” என்று கூறினர்.
08.02.2022 5 : 30 P.M