கொரோனாவுக்கு இடம் கொடுக்காமல் பிரசாரத்தில் ஈடுபடுங்கள்!

– மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா 2-வது அலையில் டெல்டா வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேநேரம் அதன் இன்னொரு வகை உருமாற்றமான ஒமிக்ரான் 3-வது அலையாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதன் பரவுதல் வேகம் அதிகமாக இருந்தாலும் பாதிப்புகள் குறைவு என்பது நிம்மதியான விசயம்.

இந்நிலையில் இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்து வருகிறது. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்காக கட்சித் தொண்டர்கள் திரண்டு வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக வேட்பாளர்கள் 3 பேருடன் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கலாம். உள் அரங்கக் கூட்டத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் கவனமாக இருக்காவிட்டால் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக பிரபல வைராலஜிஸ்டு டாக்டர் ஜேக்கப் ஜான் கூறினார்.

இது குறித்து விளக்கமளித்த அவர், “கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அரங்கக் கூட்டங்களில் அதிக அளவில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது ஆபத்து. கொரோனாவுக்கு இடம் கொடுக்காமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுங்கள்.

நிறைய பேர் இன்னும் 2-வது தவணை ஊசி போட்டுக்கொள்ளவில்லை. முதல் தவணை போடாதவர்களும் இன்னும் இருக்கிறார்கள்.

எனவே, கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம். இரண்டு தவணை ஊசியும் போட்டவர்களுக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது” எனக் கூறினார்.

07.02.2022  12 : 30 P.M

You might also like