120 கிலோ தங்கம்; 216 அடி உயரம்; ரூ.1,000 கோடி: ஐதராபாத்தின் புதிய அடையாளம்!

ஸ்ரீராமாநுஜர் 1017 ம் ஆண்டு அவதரித்தவர். ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீராமாநுஜரின் காலத்தில்தான் வைணவம் நாடுமுழுவதும் பரவியது.

சாதி, பொருளாதாரம், பாலினப் பாகுபாடு இன்றி அனைவரும் இறைவன் திருமுன் சமம் என்றும் அவனைச் சரணடைவது ஒன்றே முக்கியத்துவம் என்றும் சொன்னதோடு அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார் ஸ்ரீராமாநுஜர்.

அத்தகைய அற்புதரின் ஆயிரமாவது ஜெயந்தி தினம் 2017-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

அக்கொண்டாட்டங்களின் அடையாளமாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகள் ராமாநுஜருக்கு மாபெரும் நினைவு மண்டபமும் சிலையும் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி ஐதராபாத்தில் அற்புதமான வளாகமும் பிரமாண்டமான ராமாநுஜர் சிலையும் நிர்மாணம் செய்யப்பட்டு பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. இந்த சிலை மற்றும் வளாகத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

இந்த ஸ்ரீராமாநுஜரின் சிலை 216 அடி உயரம் கொண்டது. எடை 1,500 டன் எடை கொண்டது. தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், துத்தநாகம் ஆகிய பஞ்சலோகங்கள் கலந்து இந்த சிலை செய்யப்பட்டுள்ளது.

இதில் 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. தாமரைப் பீடம் மீது ராமாநுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் வகையில் பிரமாண்டமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 54 அடி உயர ‘பத்ராவேதி’ என்னும் கட்டிடத்தின் மேல் அமைந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஐம்பொன் சிலையாக இது கருதப்படுகிறது

டிஜிட்டல் வேத நூலகம் ஆராய்ச்சி மையம் பழைமையான இந்திய நூல்கள், திரையரங்கு, ஸ்ரீ ராமாநுஜரின் படைப்புகளைக் கொண்ட கல்வி நிலையம் ஆகியவை அந்தக் கட்டிடத்தில் அமைந்துள்ளன.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய்.  ஸ்ரீராமாநுஜர் திருமேனியைச் சுற்றி 108 திவ்ய தேசப் பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலுக்குள் 200 கிலோ எடையில் தங்கச் சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 108 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, நடுவே யானைகள் தாங்கி நிற்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் பத்மபீடம் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 அடுக்குகளிலும் 18 சங்குகள் மற்றும் 18 சக்கரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வளாகத்தில் செயற்கை நீர் வீழ்ச்சித் தூண், ஆன்மிக நூலகம், உணவகம், தியான வளாகம் ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு, இனம், ஜாதி, குல வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமமானவர்கள் என்ற அடிப்படையில் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்ட ஸ்ரீராமாநுஜரின் இந்த சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமாநுஜரின் போதனைகள், வாழ்க்கைப் பயணம் ஆகியவை குறித்த முப்பரிமாணக் காட்சி இடம் பெற இருக்கிறது.

இந்தச் சிலையை பிரதிஷ்டை செய்யும் வைபவம் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. 5,000 க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு பிரமாண்ட யாகத்தினை நடத்தினார்கள்.

பிப்ரவரி 13-ம் தேதி குடியரசுத்தலைவர் இந்த வளாகத்தை தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பிப்ரவரி 15-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு இந்த வளாகம் திறக்கப்படும். இனி ஐதராபாத்தின் புதிய அடையாளமாக இந்த வளாகம் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

You might also like