கிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழும்!

– இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

*

இயற்கை வேளாண்மை பற்றிய உண்மைகளை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி பரவலாகப் பேச வைத்தவர் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டவர் நம்மாழ்வார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு அவரை நேர்காணலுக்காகச் சந்தித்த போது இயற்கையான உரம் விளைவிக்கும் இடத்தில் அதற்கான வாசனையோடு அவருக்கே உரித்தான மொழியோடு, இடையிடையே அவருக்கான அண்ணாந்த சிரிப்புடனும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இயற்கை வேளாண்மை பற்றியும், அவர் உருவாக்கியுள்ள ‘கானகம்’ எனும் இயற்கை வேளாண் பண்ணை பற்றியும் அந்தப் பண்ணை அமைந்துள்ள கடவூர் கிராமம், திண்டுக்கல் மாவட்டம் பற்றியும், அங்குள்ள வேளாண்மை பிரச்சினைகள் பற்றியும் விரிவாகப் பேசினார்.

“எங்களுடைய ‘கானகம்’ எனும் இந்த இயற்கை வேளாண்மைப் பண்ணை திண்டுக்கல் மாவட்டம் – கடவூர் மலை அடிவாரத்தில் உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பண்ணை முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மை முறையில்தான் பயிர்கள் – கீரை, காய்கறி, மிளகாய், துவரை போன்ற தானியங்கள், ஆமணக்குப் போன்ற செடிகள், மரங்கள் என அனைத்தும் பயிரிடப்பட்டுள்ளன.

இந்தப் பண்ணையின் அமைப்பைப் பார்த்தீர்களானால் புரியும். 2 அடி நடைபாதை விட்டு உயரமான பாத்திகள் அமைத்து அந்த உயரமான பாதையில் விதைத்துவிடுவோம்.

அதாவது நடக்கிற பாதையில் விதைக்காதே – விதைக்கிற பாதையில் நடக்காதே என்பதுதான் அமைப்பு, அதே வேளையில் நடைபாதையும் வீண் கிடையாது.

இங்கு வளரும் மரங்கள் வளர்ந்து நடைபாதையை மூடிக்கொள்ளும்போது பாத்தியில் உள்ள செடிகளுக்கு நிழலும் கிடைக்கும்.

அடுத்து மரங்களில் இருந்து உதிரும் இலைகள், தழைகள் தடைபாதையில் விழுந்து, தண்ணீர், வெயில் என காய்ந்தும், நனைந்தும் மக்கிப் போய்விடும்.

மக்கிப்போன அந்தத் தழைகளை எடுத்து மேடுகளில் போட்டு விடுவோம். அந்த மக்கிப் போன தழைகள் மேடுகளில் உள்ள பயிர்களுக்கு உரமாகவும், மண்ணில் ஈரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இதைக் கொண்டு செடிகள், மரங்கள் வளர்ந்து காய்க்கின்றன. மீண்டும் அந்தச் செடிகளே உரமாகவும் ஆகிறது. இப்படித் தொடர்ந்து, சங்கிலிபோல் தொடரும் இயற்கை முறையில் நடக்கும் விவசாயத்திற்குப் பெயர்தான் இயற்கை வேளாண்மை ஆகும்.

இயற்கை வேளாண்மை என்றாலே எந்த இடுபொருளும் வெளியிலிருந்து உள்ளே வரக்கூடாது. உழவும் கூடாது. இயற்கை வேளாண்மைக்கு இன்னொரு பெயர் உழவு வேளாண்மை.

எந்த நிலமாக இருந்தாலும் சரி, ஒரே முறை உழுது இங்கேயுள்ள அமைப்பில் உருவாக்கி விட்டால் போதும், அதைவிட்டு மீண்டும் மீண்டும் உழுது, ராசாயன உரங்கள், பூச்சிகள் கொண்டு மண்ணை சாரமற்றதாகி, வீணாக்குதல் கூடாது.

Clean Cultivation Form என்பது, அமெரிக்காவின் கண்டுபிடிப்பு. 1960-களில் அமெரிக்கா, நம் நாட்டு விஞ்ஞானிகள் 2000 பேரை அங்கே அழைத்துச் சென்று அங்குள்ள பெரிய பண்ணைகளைச் சுற்றிக் காண்பித்து இங்கே கொண்டு வந்து இறக்கினார்கள்.

அதிலிருந்துதான் இங்கேயும் Clean Cultivation எனும் வேளாண்முறை வர ஆரம்பித்தது. அதைப் பற்றி விவசாயிகளிடம் பிரமிப்புகளை ஏற்படுத்தினர் அந்த விஞ்ஞானிகள்.

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு யூரியா போன்ற உரங்கள், பூச்சி மருந்துகள் நம் நாட்டிற்குள் வர ஆரம்பித்தன. பல ஒட்டு ரகங்கள் வர ஆரம்பித்தன. பயிரின் விளைச்சல் கால அளவைக் குறைக்கிறேன் என்று பயிரின் அளவையும் குறைத்தார்கள். அதனால் வைக்கோல் இல்லாமல் போனது.

அதனைத் தொடர்ந்து மாடுகள் அடிமாட்டிற்குச் சென்றன. பால் உற்பத்தி குறைந்தது. முன்னர், கிராமத்தில் இதுவெல்லாம் தன்னிறைவாக இருந்தது. அதை ஒழித்து விட்டு வெண்மைப் புரட்சி என ஆரம்பித்தார்கள்.

காந்தியும், நேருவும் இரண்டு பேருமே லண்டனில் படித்தார்கள், ஆனால், இருவரின் பார்வையும், பாதையும் வேறாக இருந்தது.

நேரு ஐரோப்பியாவைப் போல் தம் நாட்டை மாற்ற முயன்றார். காந்தி நம் மண்ணுக்கேயுரிய, இயற்கையுடன் கூடிய வாழ்முறையை வழிகாட்டினார். காலம், காந்தி சொன்னதுநான் சரி என்று தற்போது திரூபித்துள்ளது.

வசிக்கின்ற வீடும், நடக்கின்ற ரோடும்தான் சுத்தமாக இருக்க வேண்டும். விவசாய இடம் குப்பையாக இருக்க வேண்டும். குப்பைதான் இயற்கை உரம். அதை விட்டு குப்பைகளை அகற்றி விட்டு எந்திரங்களைக் கொண்டு நிலத்தை உழுது ரசாயன உரங்களைப் போட்டு மண்ணில் உள்ள புழுக்களைக் கொன்று,

மண்ணைச் சாரமற்றதாக்கி, மலடாக்கி, பின் ரசாயன உரங்களில்லாது விளையாது என்கிற நிலைமையை உருவாக்கி, பின் ரசாயன உரங்களை விவசாயின் தலைமேல் சுமத்தி, கடன்காரர்களாக்கி, விவசாயி தற்கொலை செய்கிறான்.

உரம் விற்கிறவன் கொழுக்கிறான். அரசு மானியம் கொடுத்துச் சமாளிக்கிறது. விவசாயத்தை இயற்கையுடன் இணைந்துச் செய்தால் இதுவெல்லாம் எதுவுமே தேவையில்லை.

நாம் விடும் மூச்சுக்காற்று காற்றில் உள்ள நைட்ரஜனை 78% பிரித்து வருகிறது.

அதைப்போலத்தான், செடிகளின் வேர்களில் உள்ள பாக்டீரியாகளால்தான் மண்ணில் உள்ள நைட்ரஜன், அம்மோனியாவைப் பிரித்து தாவரங்களுக்குக் கொடுக்கிறது.

இந்த இயற்கையை விவசாயியிடம் கூறித் தெளிவுபடுத்தினால் போதும். இதுதான் இயற்கை விவசாயம். இதை விவசாயியிடம் கூறினால் அவர் புரிந்துகொள்வர்.

அதை விட்டுவிட்டு, செயற்கை உரங்களைப் போட்டு, மண்வளத்தைக் கொன்று விட்டு, வளமாக விளைய என்று செயற்கை ரசாயன உரங்களை விற்கிறார்கள்.

செயற்கையான முறையில் வளர்வதால் எதிர்ப்புசக்தியை இழந்துவிட்ட பயிர்களுக்கு நஞ்சை மருந்தாகத் தெளித்து, பயிர்களுக்கு உதவக்கூடிய பாக்டீரியாக்கள், தட்டான் பூச்சிகள் என அனைத்து இயற்கை சுழற்சிகளையும் அழித்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டும் நாம் நம் மண்ணையும், எதிர்கால சந்ததிக்கு உணவையும் உத்தரவாதமளித்து, மக்களின் ஆரோக்யத்தையும் தஞ்சாகிப் போன உணவுகளிலிருந்து பாதுகாக்க உணவுப்பொருட்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

அதற்குதான் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எங்களைப் போன்ற பல N.G.O.க்கள் பாடுபட்டு வருகின்றன. 1969இல் வேளாண்மை பல்கலையிலிருந்து வெளியே வந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை இயற்கை வேளாண்மைக்கு என்னால் முடித்த பணியை செய்து வகுகிறேன்.

ஆரம்பத்தில் இந்த விசயத்தில் உலகத்தை மாற்றியே தீரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அது தனிப்பட்ட முறையில் என்னால் மட்டும் முடிகிற காரியமல்ல. விவசாயிகளும் அரசும் அனைவரும் சேர வேண்டும்.

ஏற்கெனவே ரசாயான உரங்களால் மலடாகிவிட்ட நிலத்தை பொருத்தவரை, எப்படிப்பட்ட நிலமாக இருந்தாலும் சரி 6 மாதங்களில் நிலத்தை மீண்டும் வளமான மண்ணாக்கி விடலாம்.

இந்த இயற்கை விவசாயத்தை மேலும் விரிவுபடுத்த ஒரே வழி இதை மேற்கொள்ளும் விவசாயிக்கு அவர் விளைவிக்கும், விளை பொருட்களை விற்பதற்கும், அதன் மூலம் அவர் வாழ்க்கை மேம்படுவதற்கும் இயற்கை விவசாய விளை பொருட்களுக்கான -Organic Food Products சந்தையை உருவாக்க வேண்டும்.

அப்போதுதான் விவசாயி இந்த முறைக்கு மாறுவார். இந்த முறைக்கு மாறினால்தான் விவசாயி வாழ முடியும். விவசாயி நன்றாக வாழ்ந்தால்தான் கிராமங்கள் வாழும்.

காந்தி சொன்னது போல் இந்தியாவின் 6 லட்சம் கிராமங்கள் வாழ்ந்தால்தான் இந்தியா வாழும்.

இயற்கை விவசாயம் என்பது வெறும் பயிர்செய்து விற்பது அல்ல நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்வதன் மூலம் மண்ணையும், மக்களையும் ஆரோக்யமாகக் காத்து, எதிர்கால சந்ததிகளுக்கு இந்த மண்ணை வளமாக்கிவிட்டுச் செல்வது ஆகும். வருங்காலச் சந்ததிக்கு உணவை உத்திரவாதம் செய்வதுமாகும்.’’

– சந்திப்பு: மணா

*

You might also like