புதுமைப்பித்தன் கதைகளுக்குள் நாம் ஏன் பயணிக்க வேண்டும்?

நூல் வாசிப்பு:

தமிழ்ப் பதிப்புலகில் புதுமைப்பித்தன் கதைகளை வெறும் 100 ரூபாய் விலையில் கொடுத்து ஒரு புரட்சியைச் செய்திருக்கிறது சீர் வாசகர் வட்டம். அதற்கு முன்பு நன்செய் பிரசுரம் மூலம் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலை 10 ரூபாய்க்கு மூன்றரை லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தார்கள்.

“அம்பேத்கர் ஆக்கங்களையும் பல தளங்களுக்கும் எடுத்துச் செல்கிறோம். சனாதன மரபுக்கு எதிரான பிரதிகளை சிறுசிறு வெளியீடுகளாக அச்சிட்டு இளம் தலைமுறைக்கு வழங்குகிறோம். மாணவர்களுக்கான சீர் எனும் குறைந்த விலையிலான இதழையும் கொண்டு வருகிறோம்.

வளர்ந்துவரும் வருங்கால இளம் பெண் உயிரிகளை நோக்கி நாங்கள் பயணப்படுகிறோம். வெளியீடு எங்களுக்கு வணிகமில்லை.

கருத்துப் பரப்புரைக்கான செயல்பாடு. அரசியல் களம் சார்ந்து செயல்படுவோர், கலை இலக்கிய ஆக்கங்களை கருத்தில்கொண்டு செயல்படுவது மிகக் குறைவு.

அதுவும் மிகக் குறைந்த விலையில் இலக்கியப் பிரதிகள் அச்சிட்டுக்கொண்டு வரும் மரபு குறைவு. திருக்குறள் ஒரு காலத்தில் அப்படி கொண்டுவரப்பட்டது.

புதுமைப்பித்தன் போன்ற ஆக்க இலக்கியக்கார்களுக்கு இவ்வாறு நிகழ்ந்த வரலாறு தமிழில் இல்லை.

அரசியல் கருத்துநிலை சார்ந்த செயல்படும் எங்களுக்குக் கலை இலக்கியங்களையும் பரப்புரை சார்ந்த மரபாக, மிகக் குறைந்த விலையில் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்க முடிவு செய்தோம்.

அதன் வெளிப்பாடுதான் புதுமைப்பித்தன் கதைகளை நாங்கள் வெளியிடுவது, அரசியல் கருத்து நிலைக்கு எந்த வகையிலும் குறைந்தது அன்று”  என முன்னுரையில் சீர் வாசகர் வட்டம் குறிப்பிட்டுள்ளது.

நூலின் பதிப்பாசிரியரான வீ.அரசு, புதுமைப்பித்தன் கதைகளுக்குள் நாம் ஏன் பயணிக்க வேண்டும் என்ற தலைப்பில் எழுதியுள்ள குறிப்பில், தான் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பை, அதன் பண்பாட்டுப் பரிமாணங்களை, நுணுக்கமான விவரணம் சார்ந்த புனைவாக்கியவர். நிலவுடைமைப் பண்பாட்டின் முகங்களைத் தோலுரித்துக் காட்டியது அவரது ஆக்கங்கள்” என்கிறார்.

மேலும், தமிழ்ச் சமூக வரலாறு, வட்டார வரலாறு, பெண் இருப்பு, எள்ளல் மொழி, தொன்ம மொழி, எதார்த்த விவரண மொழி, தன் இருப்பு சார்ந்த பதிவு ஆகிய அனைத்து ஆக்க இலக்கிய மரபுகளுக்கும் புதுமைப்பித்தனே முன்னோடி என்றும் அரசு சுட்டிக்காட்டுகிறார்.

புதுமைப்பித்தனின் 102 கதைகள் இடம்பெற்றுள்ள 626 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை 100 ரூபாய் என்பது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்த வாய்ப்பை இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்ட இளம் தமிழ் உலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதுமைப்பித்தன் கதைகள்:

பதிப்பு: வீ. அரசு

வெளியீடு: சீர் வாசகர் வட்டம்,
எண்: 23 பி 1, துர்கா ஹோம்ஸ்,
சுரேந்திர நகர் ஆறாம் தெரு,
ஆதம்பாக்கம், சென்னை – 88
விலை ரூ. 100 

– பா. மகிழ்மதி

You might also like