பொன் மாலைப் பொழுது-
– இது தான் அந்தத் தொடர் நிகழ்வின் தலைப்பு.
நடக்கும் இடம்- ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும்- சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில். பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை கூட்டம்.
பேசியவர் ஃபிரண்ட்லைன் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான விஜயசங்கர்.
முன்னால் ஊடக அக்கறை கொண்ட பார்வையாளர்கள்.
தலைப்பு : ‘’ஊடகம்-நேற்று இன்று நாளை’’
ஆங்கிலப்பத்திரிகை ஆசிரியராக இருந்தும் பேச்சு நகர்ந்தது சரளமான- மிக எளிமையான தமிழில்!
திருச்சிக்கு அருகில் உள்ள கல்லக்குடி தான் விஜயசங்கரின் சொந்த ஊர் (கல்லக்குடி பெயரைக் கேட்டதும்’’ கல்லக்குடி கொண்ட’’ என்று துவங்கும் நாகூர் ஹனீபாவின் உச்சபட்சக்குரல் திராவிட சிந்தனை கொண்டவர்களுக்கு நினைவுக்கு வரலாம்!).
நயமான புன்னகையுடன் ‘நான் பிறந்தது டால்மியாபுரத்தில். வளர்ந்தது கல்லக்குடியில்’’- ஆரம்பித்தார்.
உலக அளவில் ஊடகத்தின் துவக்கம், அச்சு இயந்திரம் வந்தது முதல் முதலாளித்துவ சக்திகள் அவற்றை எப்படிக் கையாண்டு தன்வசப்படுத்தி வைத்திருந்திருந்தன என்பதில் இருந்து பேச்சைத் துவக்கினார்.
அரசின் கட்டுப்பாட்டிலும், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் செய்திகள் எப்படியெல்லாம் பல்வேறு விதத்தில் வடிகட்டப்பட்டு மக்களை வந்தடைகின்றன?
இந்தியாவில் அச்சு, ஒலி, தொலைக்காட்சி வடிவில் யாருடைய கட்டுப்பாட்டில் செய்திகள் கட்டமைக்கப்பட்டு அளிக்கப்படுகின்றன என்பதை மிக சுவாரஸ்யமாக ஒரு கதையை விவரிப்பதைப் போன்ற மொழி நடையில் சொல்லிக் கொண்டு போனவர் சொன்ன புள்ளிவிபரம்-
இந்தியாவில் தற்போது பல்வேறு மொழிகளில் இருக்கும் தொலைக்காட்சி சேனல்கள் மட்டும் 877.
ஒரு பிரச்சினையை முழுமையாக ஆராயும் அச்சு ஊடகத்தின் முக்கியத்துவம் தற்போது படிப்படியாக குறைந்து தொலைக்காட்சி ஊடகத்தின் தாக்கமும், டிஜிட்டல் ஊடகத்தின் ஆதிக்கமும் அதிகரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் உருவாகும் சரிவுகள், வேலையிழப்புகள், மக்களிடம் போயச் சேரும் செய்தியின் நம்பகத்தன்மை குறித்த ஆபத்துக்களை வெளிப்படுத்தினார்.
தமிழில் ‘ஒருபைசாத் தமிழன்’ நடத்திய அயோத்தி தாசர், பாரதி எழுதிய சுதேசமித்திரன்,திராவிட இயக்கங்கள் நடத்திய சில நூறுக்கும் மேற்பட்ட இதழ்கள், பொதுவுடமை சார்ந்த இதழ்களை வரிசைப்படுத்திச் சொன்னார்.
அரசியல் கட்சிகளும், வணிக நிறுவனங்களும் நடத்துகிற ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் எந்த வரம்புக்குள் இங்கு பணியாற்றச் சாத்தியமிருக்கிறது என்பதையும் தனிமனிதனாகச் சுயவிருப்புடன் அவர்கள் எந்த அளவுக்குச் சுதந்திர உணர்வுடன் செயல்பட முடியும் என்பதையும் இங்கிதமாக உணர்த்திக் கொண்டு போனபோது – நூற்றாண்டைக் கடந்த ஊடக உலகின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னதைப் போலிருந்தது.
அடுத்து நடந்த கலந்துரையாடலின் போது ஆரோக்கியமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதற்கேற்ற விதமான பதில்கள்.
இடையில் ஒரு பார்வையாளர் கேட்ட கேள்வி சுளீர் ரகம்.
‘’கர்நாடகத்தில் மதவாதத்தை எதிர்த்து, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்து கௌரி லங்கேஷைப் போன்ற பத்திரிகையாளர்கள் துணிச்சலோடு இயங்க முடிந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலைமை ஏன் இல்லை?’’
இந்தக் கேள்வியையும் எதிர்கொண்டு தமிழகச் சூழல் சார்ந்து விஜயசங்கர் அளித்த பதில் வெளிப்படைத்தன்மையுடன் இருந்தது. பல்வேறு ஊடகவியலாளர்களின் நெருக்கடிகளை உணர்ந்ததாகவும் இருந்தது.
தமிழ்நாட்டில் இயங்கும் ஊடகவுலகின் மனசாட்சியுடன் உரையாடியதைப் போல இருந்தது விஜயசங்கர் உரையாடிய இரண்டு மணிநேரமும்.
உழைக்கும் மக்களின் பார்வையை எதிரொலித்த அந்தக் குரலுக்காகவே விஜயசங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும்!
– மணா
* நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவு மீண்டும்.