சிறந்த இதழாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது!

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இதழாளரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு கலைஞர் எழுதுகோல் விருதும், ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கி தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன் முதற்கட்டமாக பேராசிரியர் அருணன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் பத்திரிகையாளர்கள் ஜென்ராம், தராசு ஷ்யாம், சமஸ், பேராசிரியை பர்வீன் சுல்தானா, பேராசிரியை அரங்க மல்லிகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுபற்றி சமூகவலைத்தளங்களில் பலரும் குழுவினருக்கு வாழ்த்துகளையும் அரசுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

தேர்வுக்குழுவில் இடம்பெற்றது பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பத்திரிகையாளர் சமஸ், “அரசே தன்னுடைய பிரதிநிதிகள் வழியே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு மாற்றாக, பத்திரிகையாளர்கள் – பேராசிரியர்கள் அடங்கிய ஒரு தேர்வுக் குழுவின் வழி விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார்; “இந்தக் குழுவில் நீங்கள் இடம்பெற வேண்டும் என்பதும் முதல்வரின் விருப்பம்” என்று கூறப்பட்டது.

தமிழ்நாட்டின் பல நூறு பத்திரிகையாளர்கள் இடையே, தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஏனையோருடன் ஒப்பிட ‘மூத்த பத்திரிகையாளர்’ எனும் அடைமொழிக்கான வயதோ, அனுபவமோ  வந்துவிடவில்லை என்றாலும், அரசு என் மீது  கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒப்புக்கொண்டேன்.

இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கான பணி இது. அதற்குள் தமிழ்நாட்டின் ஊடகத் துறையில் மதிப்புமிக்க ஒரு விருதாக ‘கலைஞர் எழுதுகோல் விருது’ திகழும் வகையில் தேர்வுகள் அமைந்திட என்னாலான பணிகளை மேற்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ஜென்ராம், “அரசு நிர்வாகத்தின் அதிகாரப் படிகளில் இதுவரை கால் பதித்திராத என்னைப் போன்றவர்களை குழுக்களில் நம்பிக்கையுடன் சேர்த்துக் கொள்வதற்கு மிகுந்த நன்றி. உங்கள் நம்பிக்கை வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன். பேராசிரியர் அருணன் உள்ளிட்ட குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அன்பு நிறைந்த  வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

– பா. மகிழ்மதி

You might also like