குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர்!

இந்திய நாடாளுமன்றம் பொதுவாக ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை நடைபெறும்.

இந்தக் கூட்டங்களில் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான சட்டமியற்றல், நாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் எனப் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

இதில் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலையில் தொடங்கிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.

கொரோனா காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால், இந்த ஆண்டும் மைய மண்டபத்துடன், இரு அவைகளின் அறையிலும் உறுப்பினர்கள் அமர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் உரையை தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இதைத் தொடர்ந்து 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறார்.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வருகிற 2-ம் தேதி விவாதம் தொடங்குகிறது. இதற்காக 4 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி 7-ம் தேதி பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் கொரோனாவின் 3-வது அலை வேகமாக பரவி வருவதால், தொற்று அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதில் முக்கியமாக மக்களவையும், மாநிலங்களவையும் வெவ்வேறு நேரங்களில் இயங்குகின்றன.

இரு அவைகளுக்கான அறையிலும் உறுப்பினர்கள் அமர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி வரும்11-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடக்கிறது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

அதேநேரம் விவசாயிகள் பிரச்சினை, சீன ஊடுருவல், பெகாசஸ் மென் பொருள் மூலமான செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் போன்ற பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளது.

ஏனெனில் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதைப்போல விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப, பல கட்சிகள் திட்டமிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க் கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இரு அவைகளின் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.

எனினும் பெகாசஸ், சீன ஊடுருவல் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்து அரசை விமர்சித்து வரும் நிலையில், இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது இரு அவைகளையும் தூய்மைப்படுத்துதல் மற்றும் தொற்று பரவலைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் இருவரிடமும் நாடாளுமன்ற ஊழியர்கள் எடுத்துரைத்தனர்.

அப்போது, உறுப்பினர்களிடையே குழப்பம், கூட்டம் மற்றும் விசாரணைகளை தவிர்ப்பதற்காக இரு அவைகளின் உறுப்பினர்களையும் வெவ்வேறு இடங்களில் பெயர் வரிசையில் அமர வைக்கலாம் என்று பிர்லா பரிந்துரைத்தார். இந்த யோசனையை வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரையும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like