நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; நடத்தை விதிகள் அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின், நடத்தை விதிகள், அந்தந்த மாவட்டம் மற்றும் மாநிலம் முழுமைக்கும் பொருந்தும். தேர்தலுக்கான நடைமுறைகள் முடியும் வரை, இது அமலில் இருக்கும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில…!

ஜாதிகள், சமூகத்தினர், மதத்தினர் அல்லது பல்வேறு மொழி பேசும் மக்களிடம் நிலவும் வேறுபாடுகளை அதிகப்படுத்துதல், வெறுப்புணர்வை உருவாக்குதல், கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயல்களில் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் ஈடுபடக் கூடாது.

வாக்குகளைப் பெறுவதற்காக, ஜாதி அல்லது சமூக உணர்வுகளைத் துாண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுக்கக் கூடாது.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது பிற வழிபாட்டுத் தலங்களை, தேர்தல் பிரச்சார இடங்களாகப் பயன்படுத்தக் கூடாது.

மற்ற அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும்போது, அவர்களுடைய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், கடந்த கால பணி மற்றும் செயல்பாடு குறித்தும் பேச வேண்டும்.

கட்சிகளின் தலைவர்கள் அல்லது தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் லஞ்சமோ அல்லது வெகுமதியோ வழங்கக் கூடாது.

வேட்பாளரின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் வகையில், அவரது தனிப்பட்ட நடத்தை மற்றும் பண்பை பற்றி உண்மைக்கு புறம்பான அல்லது தவறான செய்தியை வெளியிடக் கூடாது.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வர, போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யக் கூடாது. மதுபானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை வழங்கக் கூடாது.

எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ, தனி நபரின் இடத்தில், உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி கொடி கம்பங்கள் கட்டவும், பதாகைகள் வைக்கவும், அறிவிப்புகள் ஒட்டவும், வாசகங்கள் எழுதவும் கூடாது.

அரசு ஊழியர்கள், தேர்தலின்போது முற்றிலும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.

வேட்பாளருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.

பிரசாரத்தின்போது, தனிநபர் வீட்டில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கும் போது அவருடன் அரசு ஊழியர்கள் செல்லக் கூடாது.

அமைச்சர்கள் தங்களது பயணத்தை, தேர்தல் பணியோடு இணைத்து கொள்ளக் கூடாது.

தேர்தல் பணிக்காக, அரசு அமைப்புகளையோ அல்லது அரசு பணியாளர்களையே பயன்படுத்தக் கூடாது.

அமைச்சர்களுக்கு, தேர்தல் பயணத்தில் அரசு வாகனங்களோ அல்லது மற்ற அரசு சலுகைகளோ அளிக்கக் கூடாது.

27.01.2022  1 : 40 P.M

You might also like