பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத ஆதரவு நாடு!

– ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா காட்டம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘நகர்ப்புறப் போரும், மக்களின் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் தொடர்பில்லாத ஐம்மு – காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தான் துாதர் முனிர் அக்ரம் பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஐ.நா.விற்கான இந்தியத் துாதரகக் குழு ஆலோசகர் ஆர்.மதுசூதன், “மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

பயங்கரவாதிகளை ஆதரித்து புகலிடம் தரும் நாடு பாகிஸ்தான் என்பது உலக நாடுகளுக்கு நன்கு தெரியும். ஐ.நா. தடை செய்த ஏராளமான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனர்.

உலகில் எந்த இடத்தில் பயங்கரவாதச் செயல்கள் நடந்தாலும், அதில் எந்த விதத்திலாவது பாகிஸ்தான் மூலக் காரணமாக உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கட்டுப்பாடின்றி செயல்படும் அதே சமயத்தில் சிறுபான்மையினர் அச்சத்தில் வாழ்கின்றனர்.

இதை மறைப்பதற்காக, ஐ.நா.,வில் அடிக்கடி காஷ்மீர் பிரச்னையைப் பற்றி பாகிஸ்தான் பேசுகிறது. ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இன்றும், என்றும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகள்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவிற்குச் சொந்தமானது. அங்கிருந்து பாகிஸ்தான் படைகள் வெளியேற வேண்டும்” எனக் கூறினார்.

இந்தக் கூட்டத்தின்போது பாகிஸ்தானை மறைமுகமாகத் தாக்கி பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி,

“இந்தியா பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. மும்பை தாக்குதலில் 166 உயிர்களைப் பறி கொடுத்தது.

அதனால், சர்வதேச அளவிலான பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.

சில நாடுகளின் ஆதரவில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளால் உண்டாகும் பாதிப்பைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை, நகர்ப்புற மக்களின் பாதுகாப்பு குறித்த எந்தவொரு விவாதமும் முழுமை பெறாது” எனக் கூறினார்.

You might also like