நீங்கள் இங்கு வாசிக்கப்போவது திரைப்பட விமர்சனம் அல்ல. ஒரு திரைப்படத்தில் அதற்கான சகல ஆடல், பாடல், சண்டைக்காட்சிகளுடன், முற்போக்கான கருத்துக்களையும் விதைக்க முடியும் என்பதற்கான சாட்சி இத்திரைப்படம்.
வழக்கமான தெலுங்கு மசாலாப் படங்களைப் போல் ஆரம்பித்து ஒரு திருப்பத்தில் அசுர வேகம் எடுக்கும் திரைக்கதை அசர வைக்கிறது.
மறுஜென்மக் கதைகள் திரைத்துறையில் புதிதல்ல. ஆனால் அதனை மாறுபட்ட கோணத்தில் திரைக்கதை அமைத்த இயக்குநர் ராகுல் சாங்கிருத்யனும், கதை, திரைக்கதை, வசனம் இயக்குநருடன் சேர்ந்து அமைத்த ஜனகசத்ய தேவும் மிகமிக பாராட்டுக்குரியவர்கள்.
இரண்டு மாறுபட்ட பாத்திரங்களை தன் உடல்மொழி மூலம் நன்கு வேறுபடுத்திக் காட்டிய நானி அவர்கள் இந்த ஆண்டின் சிறந்த நடிகராக கவுரவிக்கப்பட தகுதியானவர். ஆனால், இப்படி ஒரு படத்திற்காக கவுரவிக்கப்படுவரா என்பது பெரிய கேள்விக்குறி.
‘பராசக்தி’ திரைப்படத்திற்குப்பின் அழுத்தமான கருத்துகளை உரத்துப் பேசும் இந்தத் திரைப்படம் ஏராளமான பாராட்டுக்களை அள்ளப் போகிறது. நிறைய விமர்சனங்கள் குவியப் போகின்றன.
இந்தத் திரைப்படத்தில் சென்சாருக்கு தப்பி வந்த சில அற்புதமான வசனங்கள்!
1.எம்.எஸ்.சுப்புலட்சுமிமும் பாலசரஸ்வதியும் தேவதாசிகள் குலத்தைச் சேர்ந்தவர்கள்.
எம்.எஸ். தனது உறுதியான நிலைபாட்டால் பத்மஸ்ரீ வாங்கும் அளவிற்கு உயர்ந்தார்.
2. மனிதனை மனிதனாக நடத்தாத நாடு நாடல்ல… வீடு வீடல்ல… எனவே நான் இந்த வீட்டை விட்டு வெளியேறுகிறேன்.
3. ராமர் கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் விஞ்ஞானப்பூர்வமான தீர்ப்பை அளிக்கவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில்தான் முடிவெடுத்தது.
4.பெண்ணே! உன் மதிப்பை நீயே உணரும்போது தான் உனக்கு விடுதலை கிடைக்கும்.
5. இந்தத் தீர்ப்பு எனக்குத் தோல்வி இல்லை… ஆனால் உனக்கு வெற்றி. வாழ்த்துகள். சந்திக்கலாம்.
6.பெண்ணின் வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமை அந்த பெண்ணைத் தவிர யாருக்கும்
ஏன் அந்த கடவுளுக்குக் கூட கிடையாது.
7.தீண்டாதவன் விளைக்கும் உணவைத் தீண்டலாம் ஆனால் அவன் உங்கள் கிணற்று நீரை தீண்டக்கூடாதோ?
தீண்டாமைக் கொடுமை, பெண்ணுரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, சமூகத்தின் மீது எழுத்திற்கு இருக்கும் சக்தி, எழுத்தின் வலிமை,
எனப் பல விஷயங்களை உரத்துப் பேசும் இந்த திரைப்படம் இந்திய திரைப்படத் துறையில் நிச்சயம் ஒரு மைல்கல்!
-ஆதிரன்
27.01.2022 2 : 30 P.M